நாளிதழ்களில் இன்று: ஆந்திர சிறையில் 3000 தமிழர்கள்

முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்

டைம்ஸ் ஆஃப் இந்தியா- ஆந்திர சிறையில் தவிக்கும் தமிழர்கள்

வழக்கு நடத்த முடியாமலும், ஜாமின் பெற சாத்தியம் இல்லாததாலும் சுமார் 2,700 முதல் 3,000 தமிழர்கள் ஆந்திர சிறைகளில் தவித்து வருவதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் பிரதான செய்தி வெளியிட்டுள்ளது. இவர்கள் அனைவருமே மரம் வெட்டுபவர்கள் ஆவர்.

முறையான ஆதாரம் இல்லாமல் செம்மரம் கடத்துவது போன்ற பல்வேறு வழக்குகளில் அவர்களை ஆந்திர காவல்துறையினர் கைது செய்வதாக இந்த செய்தி குறிப்பிடுகிறது. இவ்வாறு பல வழக்குளில் தமிழர்களை கைது செய்யும் ஆந்திர காவல்துறை, அவர்கள் வெளியே வர முடியாமல் இருப்பதை உறுதி செய்வதாக அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், சிறையில் வாடும் தமிழர்கள் 30,000 ரூபாய் பணம் அளித்து ஜாமின் பெற முடியாத சூழ்நிலையில் இருப்பதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் - சசிகலா குடும்பம் மீது சரமாரி புகார்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவின் குடும்பம் மீது விசாரணை கமிஷனில், அதிமுக எம்.பி மனோஜ் பாண்டியன் சரமாரி புகார் அளித்துள்ளதாக தினமலர் நாளிதழ் முதல் பக்க செய்தி வெளியிட்டுள்ளது.

ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த அப்பெல்லோ மருத்துவமனையில், சசிகலாவின் குடும்பமே சூழ்ந்திருந்தது என்றும் வேறு யாரையும் பார்க்க விடாமல் அவர்கள் தடுத்ததாகவும் எம்.பி. மனோஜ் பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளதாக மேலும் அந்த செய்தி விவரிக்கிறது.

தினமலர் வெளியிட்டுள்ள கார்டூன்:

பட மூலாதாரம், தினமலர்

தினமணி - ஏர்செல் சேவை முடக்கம்

தமிழகத்தில் புதன்கிழமையன்று ஏர்செல் நிறுவனத்தின் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டதால், அதன் வாடிக்கையாளர்கள் ஏர்செல் சேவை மையங்களை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தினமணி நாளிதழ் பிரதான செய்தி வெளியிட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக பிரச்சனை ஏற்பட்டதாகவும் விரைவில் இது சரிசெய்யப்படும் என ஏர்செல் நிறுவனம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டதாகவும் அச்செய்தி கூறுகிறது.

தி இந்து(ஆங்கிலம்) - பி என் பி வங்கி மேலாளர் கைது

மும்பை ப்ராடி ஹவுஸ் பிஎன்பி வங்கியில் 2009ஆம் ஆண்டு முதல் 2011 வரை தலைமை வகித்த ராஜேஷ் ஜின்டலை சிபிஐ கைது செய்துள்ளதாக தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றது வெளியானதை தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

தற்போது டெல்லியில் உள்ள பிஎன்பி தலைமை அலுவலகத்தில் பொது மேலாளராக பணி புரிந்து வருகிறார் ராஜேஷ் ஜின்டல்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :