அடுத்தது என்ன? கமல் தெரிவித்த 6 முக்கிய தகவல்கள்

கமல்

மதுரையில் புதன்கிழமை மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் 'மக்கள் நீதி மய்யம்' என்று தனது கட்சியின் பெயரை அறிவித்தார் நடிகர் கமல் ஹாசன். அதனை தொடர்ந்து மதுரையில் கமல் ஹாசன் செய்தியாளர்களை சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அதன் ஆறு முக்கிய அம்சங்கள் இதோ:

  • தமிழக அரசு நடத்தும் காவிரி விவகாரம் குறித்த அனைத்து கட்சி கூட்டத்திற்கு தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என கமல் தெரிவித்தார். "அழைப்பு விடுத்தால் நான் கலந்து கொள்வேன். இல்லையென்றால் எங்களுக்கு நிறைய வேலைகள் உள்ளது. அதை பார்ப்போம்" என்றார் அவர்.
  • தாம் அறிவித்த கிராமங்கள் தத்தெடுப்பு திட்டம் குறித்து சில பணிகள் இருப்பதாகவும் அதனை சட்டப்பூர்வமானதாக்க சில ஒப்பந்தங்கள் செய்ய வேண்டி உள்ளதாகவும் கமல் குறிப்பிட்டார். அரசு இதற்கு ஒத்துழைத்தால் நன்றி தெரிவிப்போம் என்றும் இல்லையென்றாலும் கிராமங்கள் சிறக்க வழி செய்வோம் என்றும் அவர் தெரிவித்தார்.
  • பொதுக்கூட்டத்தில் கூடிய கூட்டம் சினிமா நட்சத்திரத்தை பார்க்கக்கூடிய கூட்டம் அல்ல என்று குறிப்பிட்ட கமல் கட்சிக்கான எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை அதுவே உணர்த்தும் என்று கமல் கூறினார். மேலும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் பதவியை தாம் வகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
  • தேசியத்தையும் திராவிடத்தையும் தான் இழக்கவில்லை என்று கமல் கூறியுள்ளார். வலது இடதுமில்லாமல் மய்யத்தில் இருக்கப் போவதாக தெரிவித்த அவர், சாதி மத விளையாட்டுகளுக்கு போவதாக இல்லை என்று கூறினார்.
  • தனது கட்சிக் கொடியில் உள்ள சிவப்பு உழைப்பையும் வெண்மை நேர்மையையும் கறுப்பு திராவிடத்தையும் குறிக்கிறது என கமல்ஹாசன் கூறினார். நடுவில் உள்ள நட்சத்திரம் தென்னக மக்களைக் குறிப்பதாகக் கூறியுள்ளார்.
  • இதுவரை இருக்கும் அரசுகள் என்னென்ன செய்ய தவறியதோ அதை செய்வதுதான் எங்கள் கொள்கை என்றும் செய்தியாளர்களிடம் பேசிய கமல் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்