10 நாட்களுக்கு மனைவி, தாய் என்ற பொறுப்புகளைத் துறந்த பெண் #HerChoice

  • 24 பிப்ரவரி 2018

நவீன இந்தியப் பெண்களின் வாழ்க்கை விருப்பங்களை விவரிக்கும் அவர்களது உண்மைக் கதைகளை, பிபிசியின் சிறப்புத் தொடரான #HerChoice-இல் மேலும் படியுங்கள், அவளது வார்த்தைகளில்...

ஸ்பிட்டி பள்ளத்தாக்குக்கு என்னைக்காவது போயிருக்கீங்களா?

இந்தியாவிற்கு வடக்குல இருக்கும் இமய மலையில இருக்குற ஒரு தொலைதூர பள்ளத்தாக்குதான் இந்த ஸ்பிட்டி.

மக்கள் தொகை குறைவான, மொபைல் சிக்னலே கிடைக்காத இடம் இது. அதனாலதான் நான் அங்க போனேன். நிம்மதியா, ஒரு சுதந்திர பறவை மாதிரி உணரத்தான் நான் அங்க போனேன்!

நான், என் தோழி, மற்றும் எங்க டிரைவர் மட்டும்தான் அங்க போனோம். அன்று ராத்திரி எங்க டிரைவர் எங்களுக்கு ஒரு பேப்பர் கப்புல நாட்டு சரக்கு ஊத்தி குடுத்தாரு. ஐயோ, என்ன ருசி! அத மறக்கவே முடியாது.

கசப்பான அந்த விஷத்த வாங்கி நாங்க குடிச்சோம்; சும்மா ஒரு சந்தோஷத்துக்காக குடிச்சோம், அவ்வளவுதான். நான் எங்க கார் மேல உக்கார்ந்திருந்தேன்; சில்லுனு வீசிய காத்து என் உடம்புக்கும் மனசுக்கும் அவ்வளவு புத்துணர்வு கொடுத்துச்சு.

முப்பது வயசுல இருக்கும் கல்யாணமான மிடில் கிளாஸ் பொண்ணுக்கு இதெல்லாம் நெனச்சு கூட பாக்கமுடியாத ஒன்னு. தெரியாத மனிதர்களுடன், தெரியாத இடத்துல, என்னுடைய கணவர் மற்றும் வீட்டின் கண்காணிப்புல இருந்து நான் விலகி இருப்பத நெனச்சா என்னாலேயே நம்ப முடியல.

இந்த த்ரில்லுக்காக மட்டும் நான் இத செய்யல. வீட்டைவிட்டு மொபைல் சிக்னலே இல்லாத ஒரு இடத்துக்கு, வருஷத்துக்கு ஒரு வாட்டியோ ரெண்டு வாட்டியோ போறதுல பல ஆழமான காரணங்கள் இருக்கு.

நானும் என் கணவரும் ஓவியர்கள்; பயணம் செய்யுறது எங்க ரெண்டு பேருக்கும் பொதுவான பொழுதுபோக்கு. ஆனா நாங்க ரெண்டு பேரும் ஒன்னா பயணிச்சா, அவரு என்ன ஒரு பொறுப்பா நினைப்பாரு. எதுல பயணிப்பது, எந்த ஹோட்டலில் தங்குவது, நாள், நேரம், போன்ற எல்லாத்தையும் அவரு தான் முடிவு செய்வாரு.

என் விருப்பத்தையும் பேச்சுக்கு கேப்பாரு; ஆனா ஏற்கனவே அவர் எடுத்த முடிவுகளுக்கு நான் 'ஆமாம்' சொல்லவேண்டியதா இருக்கும்.

நான் ஒரு ஹோட்டலுக்குள்ள போறதுக்கு முன்னாடி அவரு அந்த இடத்த முதல்ல சுத்திபாப்பாரு; அவருதான் முதல்ல மெனு கார்ட கையில எடுப்பாரு. எடுத்து, நான் என்ன சாப்பிட விரும்புறேன்னு கேப்பாரு. ஹோட்டல் கதவ சாத்துறதுல இருந்து எங்க பெட்டி படுக்கைகள தூக்குறவரைக்கும் எல்லாத்துலயும் அவரு தான் முன்னிலை வகிப்பாரு.

நான் அவருக்கு ஒரு பொறுப்பு மாதிரிதான் தெரிஞ்சேன்; அவருதான் எல்லாத்துலயும் முடிவெடுப்பவரு. போதும்டா சாமி! எனக்கு நிச்சயமா ஒரு பிரேக் தேவைப்படுது! என் பையன் பிறந்ததும்தான் நான் இத இன்னும் உணர ஆரம்பிச்சேன்.

என் வேலையும் பயணங்களும் முற்றிலுமா தடை பட்டுச்சு; ஆனா என் கணவர் இதையெல்லாம் பழைய மாதிரி இப்பவும் தொடர்ந்து செய்யுறாரு.

அப்போதான் நான் தனியா பயணம் போகம்னும்ன்னு முடிவு செஞ்சேன். அப்படி நான் போகணும்ன்னா என் கணவர் தனியா வீட்டில இருந்து எங்க பையன பாத்துக்கணும்; அவரும் அதுக்கு சம்மதிச்சாரு.

அவர் இல்லாத அந்த முதல் பயணம் ரொம்ப திட்டமிட்டதா இருந்துச்சு. இருந்தாலும் அவரு இரண்டு அல்லது மூணு மணிநேரத்துக்கு ஒருவாட்டி மெசேஜ் இல்லனா கால் செஞ்சு நான் போய் சேர்ந்துட்டேனா? டிராபிஃக் அதிகமா இருந்துச்சா? இதை செக் பண்ணியா? அத செக் பண்ணியான்னு கேப்பாரு.

என்னோட பாதுகாப்புல அவரு ரொம்ப அக்கறை செலுத்துறாருன்னு எனக்கு தெரியும். இருந்தாலும் நிமிஷத்துக்கு நிமிஷம் ஃபோன் செஞ்சு நான் எங்க இருக்கேன் என்ன செய்யுறேன்னு சொல்லி சொல்லி நான் அலுத்து போயிட்டேன்.

என்ன யாரோ பாத்துகிட்டே இருக்கா மாதிரியும், யாரோட கண்காணிப்புலயோ நான் இருக்குற மாதிரியும், என் பயணத்தை யாரோ ட்ரேக் செய்யுற மாதிரியும் இருக்கும்.

அதனாலதான் மொபைல் சிக்னலே இல்லாத இடம் எதுன்னு தேட ஆரம்பிச்சேன். வீட்டுக்கு அடிக்கடி ஃபோன் செஞ்சு வீடு சம்பந்தமான கேள்விகளுக்கு பதில் சொல்லி, என் கணவர் சாப்பிட்டாரா இல்லையா, என் பையன் ஹோம் ஒர்க் செஞ்சுட்டானா இல்லையா என்றெல்லாம் என் இன்ப பயணத்தின்போது நான் கேட்கவே கூடாதுன்னு முடிவு செஞ்சேன்.

நான் 30 வயதிலிருக்கும், கல்யாணமான, மிடில் கிளாஸ் பெண்; இப்போ நான் ஏழு வயசு பையனுக்கு அம்மா என்பது உண்மைதான். ஆனா அது மட்டும்தான் எனக்கான அடையாளமா? கல்யாணமான ஒரு பெண், விடுமுறை நாட்கள்ல தன்னோட கணவர் கூட மட்டும்தான் வெளிய போகணும்ன்னு ஏதாவது சட்டம் இருக்கா என்ன?

என் பையனோட பள்ளியில பெற்றோர்- ஆசிரியர் சந்திப்பு நடந்துச்சு; அப்போ நான் பூட்டானுக்கு சுற்றுப்பயணம் போயிருந்தேன். அதனால என் கணவர் அந்த மீட்டிங்குக்கு போயிருந்தப்போ நடந்த விஷயத்தை என்கிட்ட சொன்னாரு. என் பையனோட நண்பனின் அம்மா என் கணவர்கிட்ட பேசிருக்காங்க.

அவங்க ரெண்டு பேருக்கு இடையில நடந்த உரையாடல் :

'உங்க மனைவி எங்க?' என்றார் அந்த பெண்.

'அவள் ஊருல இல்ல' என்றார் என் கணவர்.

'ஓ .. வேல விஷயமா போயிருக்காங்களா?'

'இல்ல இல்ல .. சும்மா ஒரு இன்பச் சுற்றுலா போயிருக்கா' என்றார் என் கணவர்.

'ஐயோ! அது எப்படி? உங்கள தனியா விட்டுட்டு போயிட்டாங்களா?' என்று, என்னமோ நான் என் கணவர விட்டுட்டு ஓடி போயிட்டா மாதிரி ஒரு தொனியில அந்த பெண் பேசியிருக்காங்க. என் கணவர் அப்போ சிரிச்சுருக்காரு; அதையும் ஒரு ஜோக்கா என்கிட்ட பகிர்ந்துக்கிட்டாரு. ஆனா இது ஒன்னும் எனக்கு ஜோக்கா தோணல.

அதே பெண்மணிக்கும் எனக்கும் கிட்டத்தட்ட இதே மாதிரியான ஒரு உரையாடல் சில மாசத்துக்கு முன்னாடி நடந்துச்சு. அப்போ

அவரோட கணவர் நீண்ட தூரம் பைக்குல பயணம் போயிருந்தாரு. அத பத்தி அவங்க நிறைய பேர்கிட்ட பெருமையா சொல்லிட்டு இருந்தாங்க.

'அவரு உங்கள விட்டுட்டு போயிட்டாரா? உங்கள தனியா விட்டுட்டா போயிருக்காரு?' என்று அப்போ நான் அவங்ககிட்ட கேக்கலையே. இந்த பெண் மட்டும் இல்ல; ஒரு பெண், கணவர் இல்லாம தன் இன்பத்துக்காக பயணம் செய்யுறது பல பேருக்கு வித்யாசமா தெரியுது; குறிப்பா எங்க குடும்பத்துக்கு.

நான் முதல் முறையா ஒரு பயணம் போக முடிவு செஞ்சது என் மாமியாருக்கு ரொம்ப விசித்திரமா தெரிஞ்சுது. ஆனா நான் ஏன் இப்படி செய்ய விரும்புறேன்னு புரிஞ்சுகிட்ட என் கணவர் அவங்களுக்கு விளக்கம் குடுத்த பிறகு அவங்க இதுக்கு தடை விதிக்கல.

ஆனா என்ன பெத்த தாயே இதை புரிஞ்சுக்க இன்னும் சில நாட்கள் ஆகும் போல. இந்த வாட்டி அவங்ககிட்ட சொல்லாமலேயே நான் கிளம்பிட்டேன். அப்புறம் அவங்க எனக்கு ஃபோன் பண்ணாங்க. 'நீ எங்க டீ போன?'

'நேத்துல இருந்து உனக்கு ஃபோன் பண்ணிகிட்டே இருக்கேன். லைனே கிடைக்கல.' என்று கேட்டாங்க.

' நான் பயணம் செஞ்சுட்டு இருந்தேன் அம்மா'

'என்னது மறுபடியும் பயணமா? எங்க? எப்போ?'

'ஆமா, சும்மா ஒரு மாற்றம் வேணும்ன்னு தோணிச்சு. இந்த வாட்டி கார்லதான் போனேன்' என்றேன்.

'சரி. உன் பையனும் கணவனும் எப்படி இருக்காங்க?' என்று கேட்டாங்க.

'அவங்களுக்கு என்ன? நல்ல இருக்காங்க. ஆனா என் கூட இல்ல. அவங்க வீட்டுல இருக்காங்க'.

'அட கடவுளே! நீயெல்லாம் ஒரு அம்மாவா? அந்த சின்ன குழந்தைய விட்டுட்டு போக உனக்கு எப்படி டீ மனசு வந்துச்சு? அம்மா நம்மள விட்டுட்டு போயிட்டாங்களேன்னு உன் பையன் படும் வருத்தம் அந்த கடவுளுக்குத்தான் தெரியும். சரி, உன் மாமியார் எப்படி இதுக்கு அனுமதிச்சாங்க?' என்றெல்லாம் அடுக்கிகிட்டே போனாங்க.

'அம்மா, என்ன ஒரு கயத்துல கட்டி போடணும்னு நெனைக்குறையா என்ன? என்று நான் கேட்டேன்.

இது எனக்கு புதுசில்ல; ஒவ்வொரு தடவை நான் பயணம் போகும்போதும் இது நடக்கும். அவங்களுக்கு இதுல விருப்பம் இல்லன்னு எனக்கு தோணல. ஆனா மத்தவங்க என்ன நெனைப்பாங்களோ என்ற பயம்தான் அவங்களுக்கு பெருசா தெரியுதுன்னு நான் நினைக்குறேன்.

நான் யார் என்ற தேடுதலுக்காக நான் தனியா போக விரும்புறேன். என் குடும்பத்த பத்தின கவலையும் எனக்கு இருக்கு. அதே சமயத்துல என்ன நானே பாத்துக்க வேண்டிய பொறுப்பும் எனக்கு இருக்கு.

இந்த மாதிரி நான் தனியா போகும்போது பொறுப்பு, கடமை ரெண்டுமே என்னுடையதா இருக்கு. நான் பாதுகாப்பாத்தான் இருப்பேன்; நிறைய சாகசங்கள் செய்யவும் விரும்புறேன். சொல்லப்போனா ஒரு வித்யாசமான பெண் நான்.

மதுபானம் கொடுத்த, ஸ்பிட்டி பள்ளத்தாக்குக்கு எங்கள கூட்டிட்டு போன எங்க டிரைவர் ரொம்ப ஸ்மார்ட்டானவரு. அவரு கூட நாங்க ஜாலியா பேசிகிட்டு மது அருந்தினோம். அப்பப்பா! அவரு எவ்வளவு அழகா நாட்டுப்புற பாடல்கள் பாடினாரு தெரியுமா?

போன வருஷம் என் தோழி ஒருத்தி கூட நான் பயணம் போனப்போ, அந்த டிரைவர் எங்களை ஒரு ஹோட்டல்ல இறக்கி விட்டுட்டு, 'உங்களுக்கு நான் வேற ஏதாவது உதவி செய்யணுமா?' என்று கேட்டாரு.

மது கொடுப்பது பத்தியா இல்ல வேற ஏதாவது ஆண்கள ஏற்பாடு செய்வத பத்தியா, இல்ல எத மனசுல வெச்சு அவர் அப்படி சொல்லிருப்பாருன்னு நெனச்சா இப்பவும் எனக்கு சிரிப்புதான் வரும்.

இந்த அனுபவங்களும் இப்படிப்பட்ட மனுஷங்களும்தான் என் நிஜமான உலகம். இந்த அனுபவங்கள்லாம் கிடைக்கணும்னா கல்யாணமான பெண், மனைவி, அம்மா என்ற பட்டதையெல்லாம் சில நாட்களுக்கு நீக்கினா மட்டும்தான் பெற முடியும்!

(பிபிசி செய்தியாளர் அருந்ததி ஜோஷியால் பகிரப்பட்டு திவ்யா ஆர்யாவால் தயாரிக்கப்பட்ட மேற்கு இந்தியாவில் வசிக்கும் ஒரு பெண்மணியின் உண்மை கதை இது. அந்தப் பெண்ணின் அடையாளம் அவரது வேண்டுகோளின்படி பெயர் அறியப்படாமல் வைக்கப்பட்டுள்ளது).

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :