கேலிக்குள்ளான ஜெயலலிதா சிலையில் மாற்றங்களைச் செய்ய முடிவு

ஜெயலலிதா சிலை

அ.தி.மு.க. தலைமையகத்தில் நேற்று திறந்துவைக்கப்பட்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதாவின் சிலையில் சில மாற்றங்களைச் செய்யவிருப்பதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் முழு உருவச் சிலை அவரது 70வது பிறந்த நாளான நேற்று, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் முதலமைச்சர் எடப்பாடி கே. பன்னீர்செல்வம், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரால் கூட்டாகத் திறந்துவைக்கப்பட்டது.  இந்தச் சிலையை சிற்பி எஸ்.வி.வி. பிரசாத் வடிவமைத்திருந்தார்.

ஆனால், அந்தச் சிலையில் ஜெயலலிதாவின் முகம், அவருடையதைப்போல இல்லாத காரணத்தால் சமூக வலைதளங்களில் கடும் கேலியும் கிண்டலும் எழுந்தது. 

அந்தச் சிலையின் தோற்றத்தைப் பல்வேறு பிரமுகர்களின் தோற்றத்தோடு ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் மீம்களும் உருவாக்கிப்பரப்பப்பட்டன. எடப்பாடி கே. பழனிச்சாமி தனது மனைவியின் சிலையையே வைத்துவிட்டார் என்றுகூட கேலிசெய்யப்பட்டது.

இந்த சிலை குறித்து கருத்துத் தெரிவித்த டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏவான வெற்றிவேல், ஜெயலலிதாவின் சிலை என்றுகூறி, வளர்மதியின் சிலையை வைத்துவிட்டனர் என்று குற்றம்சாட்டினா்.

சிலையின் திறப்பு விழாவில், இந்தச் சிலையைச் செய்த சிற்பி எஸ்.வி.வி. பிரசாதிற்கு முதல்வர் தங்க மோதிரம் அணிவித்ததும் கேலிக்குள்ளானது. 

இந்த விமர்சனங்கள் குறித்து அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். "ஜெயலலிதாவின் சிலையை விமர்சனம் செய்பவர்கள் மனிதர்களே அல்ல" என்று கூறினார். இந்தச் சிலையை விமர்சிப்பவர்கள் அ.தி.மு.கவின் உண்மையான தொண்டர்கள் அல்ல என அமைச்சர் கடம்பூர் ராஜு கூறினார்.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், அந்தச் சிலையில் சில மாற்றங்களைச் செய்ய முடிவெடுத்திருப்பதாக தெரிவித்தார். "சமூகவலைதளங்களில் சொன்ன கருத்துக்களை ஏற்று ஜெயலலிதா சிலையில் மாற்றங்களைச் செய்ய தலைமைக் கழகம் முடிவுசெய்யும்" என அவர் கூறினார். 

ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.கவின் தலைமையகத்தில் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் சிலைக்கு அருகில் ஜெயலலிதாவின் இந்தச் சிலை வைக்கப்பட்டிருக்கிறது. 

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :