திருக்கோவிலூரில் தலித் குடும்பத்தின் மீது தாக்குதல்: நடந்தது என்ன?

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகில் உள்ள வெள்ளம்புத்தூர் காலனியில் வசித்துவந்த ஒரு தலித் குடும்பத்தில் சிறுவன் ஒருவன் கொல்லப்பட்டு, ஒரு குழந்தை உட்பட இரு பெண்கள் தாக்கப்பட்ட சம்பவத்தில் நடந்தது என்ன?

திருக்கோவிலூரில் தலித் குடும்பத்தின் மீது தாக்குதல்: நடந்தது என்ன?

பட மூலாதாரம், Getty Images

வெள்ளம்புத்தூர் காலனியில் வசித்துவரும் ஆராயி என்ற கணவரை இழந்த பெண்ணுக்கு 6 குழந்தைகள். இவர்களில் மூன்று மகன்கள் பெங்களூரிலும் ஒரு மகள் திருப்பூரில் உள்ள ஜவுளி ஆலையிலும் வேலைபார்த்து வருகின்றனர். 14 வயது மகளும் 8 வயது மகனும் ஆராயியுடன் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 22ஆம் தேதியன்று காலையில், ஆராயியின் வீட்டிலிருந்து யாரும் வெளியில் வராத நிலையில், அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, 8 வயதுச் சிறுவன் உட்பட மூவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.

இவர்களில் சிறுவன் உயிரிழந்த நிலையிலும் ஆராயியும் அவரது மகளும் கடுமையாகத் தாக்கப்பட்டு உயிருக்குப் போராடியபடி இருந்தனர். உயிருக்குப் போராடியவர்கள் இருவரும் உடனடியாக ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு ஞாயிற்றுக் கிழமையன்றுதான் லேசாக நினைவு திரும்பியுள்ளதாக காவல்துறை தெரிவிக்கிறது. இந்த இருவரில் 14 வயதுப் பெண் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகமும் இருக்கிறது.

இந்தக் காலனிக்கு அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கும் மாற்று ஜாதியைச் சேர்ந்த ஒருவர், ஆராயிக்குச் சொந்தமான நிலத்தை விலைக்குக் கேட்டு, அவர் தர மறுத்ததால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரிதாக உருவெடுத்தது.

ஆனால், காவல்துறை இந்தக் கூற்றை மறுக்கிறது. "இது ஜாதி தொடர்பான பிரச்சனையில்லை. இதில் வேறு ஜாதியினர் சம்பந்தப்பட்டிருப்பதாக உள்ளூர்காரர்களும் குற்றம் சொல்லவில்லை" என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் சங்கர், முனுசாமி, ஆலடியான் உள்ளிட்ட ஆறு பேரிடம் இதுவரை காவல்துறை விசாரணை நடத்தியிருக்கிறது.

"இந்த ஊரைச் சேர்ந்த, அதே சமயம் வெளியூரில் பணியாற்றுபவர்கள் இதில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். இங்கிருந்து சென்று சென்னையில் வசிக்கும் இருவரிடமும் விசாரித்திருக்கிறோம். குற்றவாளியை நெருங்கிவிட்டோம். விரைவில் பிடித்துவிடுவோம்" என்கிறார் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார்.

இருந்தபோதும், ஒரு சிறுவன் கொல்லப்பட்டு, 14 வயது மகளும் தாயும் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கும் சம்பவத்தில் காவல்துறை மிக மெதுவாக செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.

"பிரதமர் வருகையின் காரணமாக இந்தத் தாமதம் ஏற்பட்டது. இப்போது முழு விசாரணையில் இறங்கியிருக்கிறோம்" என்கிறார் காவல்துறை கண்காணிப்பாளர்.

திருக்கோவிலூர் பகுதியின் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தவிர, கூடுதலாக ஒரு துணை கண்காணிப்பாளரும் இந்த வழக்கை விசாரித்து வருவதாக ஜெயக்குமார் கூறுகிறார்.

இதற்கிடையில், கொலை செய்யப்பட்ட சிறுவனின் உடல் ஞாயிற்றுக்கிழமையன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :