இரு தேவதைகளை ஆத்மார்த்தமாக நேசித்த ஸ்ரீதேவி!

நடிகை ஸ்ரீதேவியின் திடீர் மரணம் ஒட்டுமொத்த திரையுலகத்தை மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், தனது குடும்பத்தையும், பிள்ளைகளையும் எவ்வளவு ஆழமாக நேசித்துள்ளார் என்பதை ஸ்ரீதேவியின் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் காட்டுகின்றன.

படத்தின் காப்புரிமை STRDEL

துபாயில் உறவினர் ஒருவரின் திருமண நிகழ்வில் பங்கேற்றிருந்த நடிகை ஸ்ரீதேவிக்கு அதுவே அவர் கலந்துகொண்ட இறுதி நிகழ்வாகவும் ஆகி போனது.

அவரது இரண்டாவது மகள் குஷி, கணவர் போனி கபூர் மற்றும் நண்பர்களுடன் தான் எடுத்துகொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் ஸ்ரீதேவி பகிர்ந்துள்ள நிலையில், ஸ்ரீதேவியின் ரசிகர்கள் பலரும் தங்கள் வருத்தங்களை அவரது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி அவருடன் துபாயில் இருந்த நிலையில், அவரது மூத்த மகள் ஜான்வி தடாக் என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகயிருப்பதால் ஜான்வி துபாய் செல்லவில்லை.

ஜான்வியின் பாலிவுட் திரைபிரவேசத்தை பார்க்க வேண்டும் என்பது ஸ்ரீதேவியின் சமீபத்திய பெருங்கனவாக இருந்துள்ளது. ஆனால், அதற்குள் மரணித்துவிட்டார்.

தாயின் மரண செய்தியை கேட்டு நொறுங்கிப்போன ஜான்வியை ஸ்ரீதேவியின் நெருங்கிய நண்பரும், தடாக் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவருமான கரண் ஜோஹர் விரைந்து வந்து நடிகர் அனில் கபூரின் வீட்டிற்கு ஜான்வியை அழைத்து சென்றுள்ளார்.

சிறந்த நடிகை என்பதை தாண்டி கண்டிப்பான தாய் என்ற மறுபக்கமும் ஸ்ரீதேவிக்கு உண்டு.

வீடு திரும்புவதில் இருவருக்கும் ஒரே நேரம்தான் என்றும், தன்னுடைய நேர கட்டுப்பாடுகள் ஜான்வி மற்றும் குஷி இருவருக்கும் தெரியும் என்றும் டிஎன்ஏ நாளிதழுக்கு வழங்கிய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த பேட்டியில் ஜான்வி மற்றும் குஷி ஆகியோரை பற்றி குறிப்பிடும் ஸ்ரீதேவி, ''ஜான்வியை பார்க்கும்போது அவளிடத்தில் என்னை நானே பார்க்கிறேன். இளம் வயதில் எப்படி நான் அமைதியாக இருந்தேனோ அப்படியே ஜான்வியும் இருக்கிறாள். ஜான்விக்கு சில நேரங்களில் சாப்பாடு ஊட்டிவிடுவதிலிருந்து எல்லாமே நான்தான் செய்ய வேண்டும். ஆனால் குஷிக்கு அப்படியல்ல. சிறுவயதிலிருந்தே தனது வேலைகளை அவளே பார்த்துக் கொள்வாள். இரு பிள்ளைகளும் எங்களுடன் அளவற்ற அன்புடன் இருக்கிறார்கள்'' என்று சிலாகிக்கிறார் ஸ்ரீதேவி.

மற்றொரு பேட்டியில், மூத்த மகள் ஜான்வியின் திரைபிரவேசம் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஸ்ரீதேவி, ''எனது மூத்த மகள் ஜான்வியை திரைப்பட நடிகையாக பார்ப்பதை காட்டிலும், அவர் திருமணம் முடித்து கொண்டால் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்'' என்று ஒரு சராசரி தாய்க்கு இருக்கும் தனது ஆசையை வெளிப்படுத்தியிருந்தார் ஸ்ரீதேவி.

மேலும், ''ஒரு தாயாக என்னுடைய மகளின் ஆசையை பூர்த்தி செய்வது எனது கடமை. எனக்கு என்னுடைய தாய் எப்படி ஆதரவாக இருந்தாரோ அதுபோல நானும் இருப்பேன். நானும், என்னுடைய தாயும் திரைத்துறை பின்னணி கொண்ட குடும்பத்திலிருந்து வரவில்லை. என்றாலும், என்னுடைய வெற்றிகாக, எனக்காக என்னுடன் சேர்ந்து அவரும் போராடினார். அப்படி ஒரு தாயாக நான் ஜான்விக்கு இருப்பேன்'' என்கிறார் ஸ்ரீதேவி.

ஸ்ரீதேவியின் மரணம் இந்திய திரையுலகத்துக்கு மட்டுமல்ல ஜான்விக்கும், குஷிக்கும் பேரிழப்புதான்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்