மாதவிடாய்: பெண்களுக்காக ஃபேஸ்புக்கில் போராடும் ஐ.ஏ.எஸ் அதிகாரி

  • பிரமிளா கிருஷ்ணன்
  • பிபிசி தமிழ்

புதுக்கோட்டை மாவட்டத்தின் சார் ஆட்சியராக சரயு பொறுப்பேற்றதும், முதல் பத்து நாட்களுக்குள் நடந்த ஐந்து இளம் பெண்களின் சந்தேக மரணங்கள் விசாரித்தபோது, பெரும்பாலானவர்கள் மாதவிலக்கு காலத்தில் இறந்துபோயுள்ளனர் என்று கண்டறிந்துள்ளார்.

பட மூலாதாரம், Sarayu Mohanachandran/Facebook

படக்குறிப்பு,

சரயு மோகனச்சந்தின்

இளம் பெண்களின் தொடர் மரணங்கள் அதிர்ச்சி தருவதாக சரயு மோகனச்சந்திரன் எனும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ள அவர், இறந்த பெண்களின் முதற்கட்ட உடற்கூறு ஆய்வில், குழந்தை பிறந்த சில மாதங்களுக்குப் பிறகு, மாதவிடாய் காலத்தில் அவர்கள் இறந்துபோனதாக மருத்துவர்கள் கூறியதை அடுத்து, பெண்களுக்கு ஏற்படும் மனஅழுத்தம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அந்த ஃபேஸ்புக் பதிவை எழுதியாக கூறினார்.

''குடும்பத்தினரிடம் பேச மறுக்கிறோம்''

''மாதவிடாய் நெருங்கும்போது, மனதளவிலும், உடல் அளவிலும் ஏற்படும் அதிர்ச்சிகள், குடும்பங்களில் பேசப்படுவதே இல்லை. இங்கேதான் நாம் அனைவரும் தோற்றுப்போயிருக்கிறோம். நம்முடைய உலகத்தின் நம்பிக்கைகளும், கட்டுப்பாடுகளும் மாதவிடாய், அதில் வெளியேறும் ரத்தம் ஆகியவற்றை அசுத்தம், புனிதம் இல்லாதது என்று முத்திரை குத்துகிறது. இதனால், எது குறித்துக் கட்டாயம் பேச வேண்டுமோ, அது குறித்துப் பேச மறுக்கிறோம்,'' என மாதவிடாய் காலங்களில் ஏற்படும் மனஉளச்சல் பற்றிய விழிப்புணர்வைக் குடும்பங்களில் இருந்து தொடங்கவேண்டும் என்று எழுதியுள்ளார்.

''உங்களுடைய அன்னையை, சகோதரியை, தோழியை இன்னமும் ஆழமாக, தெளிவாகப் புரிந்து கொள்கிறபோது அவர்களை மேன்மேலும் நேசிக்க முடியும். அவர்களின் இயல்பான நடத்தை மாறி, அவர்கள் அடக்க முடியாத கோபத்தைக் கொட்டும் போது அவர்களின் ஹார்மோன்கள் உயிரை வதைக்கின்றன என உணர்ந்து கொள்ளுங்கள், '' என மாதவிடாய் காலத்தில் ஏற்படும் சிக்கல் குறித்து ஒவ்வொரு ஆணும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

''பெண்களும் வெளிப்படையாகப் பேசவேண்டும்''

அதேநேரம் பெண்களும், தங்களது மாதவிடாய் காலங்களில் அனுபவிக்கும் சிக்கல்களை வெளிப்படையாகப் பேசவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

மாதவிலக்கின் போது பயன்படுத்தப்படும் நேப்கின்

''நாம் மனந்திறந்து, "நான் மாதவிடாய் காலத்தில் (பீரியட்ஸ்ல) இருக்கேன். எனக்குச் சட்டுன்னு கோபம் வருது, பட்டுன்னு சோகமாயிடுறேன்" என்று சொல்வதால் நம்மை யாரும் துளி கூட மரியாதை குறைவாக நடத்தப் போவதில்லை. கருப்பையில் பல கட்டிகள் தோன்றுவது, பிரசவத்திற்குப் பிறகு ஏற்படும் மனசிதைவுகள் குறித்துப் போதுமான விழிப்புணர்வை ஆண்கள், பெண்கள் இருவரிடமும் ஏற்படுத்த வேண்டும். நம் அனைவருக்குமான சமூகத்தை அப்படித்தான் வளர்த்து எடுக்க முடியும். பெண்களாக, இந்த ஆண்களிடம் சொல்வதில் எந்தப் பயனும் இல்லை என்று கூச்சப்பட வேண்டாம்,'' என்று எழுதியுள்ளார்.

விதவிதமான வலிகள்

வகுப்பறைகளில் பெண்களுக்கு மன அழுத்தம் குறித்து பேசப்படவேண்டும் என்று கூறும் சரயு, பள்ளிக்கூடங்களில் மாதவிடாய் தொடர்பான பாடங்கள் தெளிவாக நடத்தப்படவேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.

சார் ஆட்சியர் சரயுவின் பதிவில் குறிப்பிட்டுள்ள மனஅழுத்தம் பற்றி கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுரி மருத்துவமனையின் தலைவர் வசந்தாமணியிடம் கேட்டபோது, மாதவிடாய் நெருங்கும் காலங்களில்/ முடிந்தபிறகு அல்லது மாதவிடாயின் போது கோப உணர்ச்சி, மன அழுத்தம் போன்றவை ஏற்படுவது இயல்பு என்றார்.

''எல்லா பெண்களுக்கும் ஒருமாதிரியான பிரச்சனை ஏற்படும் என்று சொல்லமுடியாது. ஒரு சில பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த அளவில் இருக்கும். சில பெண்களுக்கு உடல் ஊதி, குண்டாக இருப்பதாக உணர்வார்கள். ஒரு சிலருக்கு கால்வலி அல்லது உடல்முழுவதும் வலி என ஒவ்வொருவருக்கும் பலவிதமாக வலிகள் ஏற்படும்,'' என்றார்.

பட மூலாதாரம், Getty Images

குழந்தையை கொலை செய்யும் அளவுக்கு மனஅழுத்தம்

மாதவிடாய் காலம் மற்றும் குழந்தை பிறப்புக்குப் பின்னர் மன அழுத்தம் ஏற்படும்போது தற்கொலை எண்ணங்கள் தோன்றுமா என்று மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் ர.சாந்தியிடம் கேட்டபோது,''பெரும்பாலும் குடும்பத்தினர் அக்கறை காட்டாதபோதுதான் மன அழுத்தம் தற்கொலை எண்ணமாக உருவெடுக்கும். ஒரு சிலருக்கு குடும்பத்தினர் பேசினால் சரியாகிவிடும் அல்லது ஒரு சிலருக்கு மருத்துவரின் ஆலோசனை தேவைப்படும். ஆனால் எல்லோருக்கும் வலியும், மன அழுத்தமும் ஏற்படுவது இயல்பு,'' என்று கூறினார்.

மேலும், குழந்தை பெற்ற பின்னர், குடும்பத்தினர் குழந்தை மீது காட்டும் அக்கறையை, தாய் மீது காட்டாமல் போவதும் ஒரு காரணம் என்றார். ''குழந்தை பெற்ற நூறு பெண்களில், மூன்று அல்லது நான்கு நபர்களுக்கு அதிக மன அழுத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆனால் அனைவரும் மனச்சிதைவுக்கு ஆளாகமாட்டார்கள். உளைச்சலில் உள்ளவர்களை உடனடியாக கவனிக்காமல்போனால், நீண்ட நாட்கள் அழுத்தத்தில் இருக்கும் தாய், தற்கொலை செய்யவும் அல்லது குழந்தையை கொலை செய்யவும்கூட வாய்ப்பு உள்ளது,'' என்றார் சாந்தி.

சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படவேண்டும் என்ற அதே நேரத்தில் பள்ளி, கல்லூரி, பிற பொது இடங்கள், பணிபுரியும் இடங்களில், பெண்களின் தேவையை உணர்ந்து அவர்கள் ஓய்வு எடுத்துக்கொள்ள வசதிகள் அளிக்கப்படவேண்டும் என்றும் கூறுகிறார் மருத்துவர் சாந்தி.

காணொளிக் குறிப்பு,

மாதவிடாய் குறித்த கட்டுக்கதைகளை முறியடிக்கும் மடகாஸ்கர் பெண்கள்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :