ஸ்ரீதேவியின் மரணத்திற்கு ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் தருகின்றனவா?

நடிகை ஸ்ரீதேவியின் மரணம் குறித்த செய்திக்கு ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் தருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஸ்ரீதேவி

பட மூலாதாரம், Getty Images

இது குறித்து, ஸ்ரீதேவி மரணம் குறித்த செய்திக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டதால் பிற முக்கிய நிகழ்வுகளுக்கு போதிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லையா? இந்த செய்தியின் பின்னணியில் உடல் ஆரோக்கியம் தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு தகவல்களை அறிந்துகொள்ள வழி ஏற்பட்டதா? என பிபிசி தமிழின் வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.

இதற்கு பிபிசி தமிழ் நேயர்கள் கூறிய கருத்துகளை தொகுத்து வழங்கி உள்ளோம்.

"மக்களுக்கு சத்தமில்லாமல் சேவை செய்யும் நிஜ ஹீரோ ஹீரோயின்கள் இருக்கும்போது அவர்களை விட்டு நிழல் ஹீரோ ஹீரோயின்கள் பின்னால் ஓடுவதை நாம் என்றுதான் நிறுத்தப் போகிறோமோ? மீடியாக்கள் செய்யும் தவறே அதுதான்.அவர்களுக்கு டிஆர்பி ரேட் தான் முக்கியம். உடல் ஆரோக்யத்தை நடிகைகளிடம் கற்க வேண்டிய அவசியமில்லை." என்று பதிவிட்டுள்ளார் சரோஜா பாலசுப்ரமணியன்.

"மக்களின் அவாவுக்குதான் தீனி போடுகின்றார்கள். மக்களுக்கு ஆர்வம் இல்லை எனில் எந்த ஊடகமும் கண்டு கொள்ளப்போவதில்லை. நமது சமூகம் சினிமாவை வழிபடுவதால் அதன் தெய்வங்களை குறித்து அதீத அக்கறை கொள்ளவே செய்வர்," என்கிறார் சுந்தராஜா ஞானமுத்து.

பட மூலாதாரம், Twitter @SrideviBKapoor

"மக்களுக்கும் அரசுக்கும் இணைப்பு பாலமாக இருந்து மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் நலனுக்காக விழிப்புணர்வுடன் நடுநிலை தவறாமல் உண்மையின் பிரதியாக செயல்பட வேண்டிய ஊடகங்கள் குறிப்பிட்ட சில பிரபலம், விளையாட்டு வீரர், திரைத் துறையினர், செல்வந்தர், வணிகம் சார்ந்த செய்திகளை முன்னிலைப்படுத்தி மக்கள் இத்தகைய செய்திகளைத்தான் விரும்புவர் என்று அனுமானித்து மக்களின் அறிவைத் தொடர்ந்து மங்கச்செய்யும் வேலைகளால் சீரழியும் சமூகத்தின் பார்வையை நாம் உடனடி தேவையாக மாற்ற வேண்டியது மிகவும் இன்றியமையாதது," என்பது சக்தி சரவணனின் கருத்து.

சுப்பு லக்ஷ்மி, "உண்மைதான். இதை விட முக்கியமான பிரச்சனைகள் நாட்டில் உள்ளன. விவசாயம், கல்வி, மாணவர்கள், வேலை வாய்ப்பு வங்கிகள் எல்லாவற்றுக்கும் மேலாக மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள்" என்கிறார்.

பட மூலாதாரம், E Gnanam

"இதுவும் முக்கியமான செய்தியே தினம் தினம் தலைப்பு செய்தியாக பேசப்பட வேண்டியதல்ல. ஊடகங்கள்தான் மக்களுக்கு தேவையில்லாத செய்தியை தேவையுள்ளதாக ஆக்க முற்படுகிறார்கள்." என்கிறார் பிரபு ஹசன்.

ஞானம் மைக்கேல் சொல்கிறார், "பெரும்பாலான மக்கள் எதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ ஊடகங்களும் அதற்குதான் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது".

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: