காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி காலமானார்

காஞ்சிபுரத்தில் உள்ள சங்கர மடத்தின் மூத்த சங்கராச்சாரியாரான ஜெயேந்திர சரஸ்வதி இன்று காலையில் காலமானார். அவருக்கு வயது 82.

ஜெயேந்திரர்

பட மூலாதாரம், www.kamakoti.org

ஜெயேந்திர சரஸ்வதிக்கு இன்று காலை 8 மணியளவில் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக அருகிலுள்ள சங்கரமடத்தின் மருத்துவமனைக்கு அவர் கொண்டுசெல்லப்பட்டார். ஆனால், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அவர் 9 மணியளவில் உயிரிழந்ததாக அந்த மடத்தின் மேலாளர் சுந்தரேசன் தெரிவித்தார். தற்போது அவரது உடல் பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தப்படுவதற்காக சங்கர மடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

சங்கரச்சாரியார் இறந்துவிட்டதையடுத்து, காமாட்சி அம்மன் கோவில், ஏகாம்பரேஸ்வரர் கோவில், குமரக்கோட்டம் ஆகியவற்றின் நடைகள் மூடப்பட்டுள்ளன.

பட மூலாதாரம், www.kamakoti.org

காலையில் காமாட்சி அம்மன், வீதி உலா சென்றுகொண்டிருந்தபோது சங்கராச்சாரியார் இறந்த தகவல் கிடைத்ததையடுத்து, உடனடியாக உற்சவர் சிலைகள் மீண்டும் கோவிலுக்குள் கொண்டுசெல்லப்பட்டு, நடை அடைக்கப்பட்டது.

சங்கராச்சாரியாரின் மரணத்திற்கு தமிழக, தேசிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சங்கரராமன் என்பவர் கொல்லப்பட்ட வழக்கில், 2004ஆம் ஆண்டில் தீபாவளி தினத்தன்று அதாவது நவம்பர் 11ஆம் தேதியன்று சங்கராச்சாரியார் கைதுசெய்யப்பட்டார். இது தேசிய அளவில் மிகப் பெரிய சர்ச்சையாக உருவெடுத்தது. 2005 ஜனவரி 10ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் அவரை ஜாமீனில் விடுவித்தது.

புதுச்சேரியில் நடந்த இந்த வழக்கில், அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால், 2013 நவம்பர் 27ஆம் தேதியன்று சங்கராச்சாரியார் விடுவிக்கப்பட்டார்.

பட மூலாதாரம், www.kamakoti.org

படக்குறிப்பு,

இளைய மடாதிபதி விஜயேந்திரர் உடன் ஜெயேந்திர சரஸ்வதி

சங்கராச்சாரியாரின் இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகள் குறித்து இதுவரை முடிவெடுக்கப்படவில்லையென சங்கரமடம் தெரிவித்துள்ளது.

சங்கராச்சாரியாரின் பூர்வாசிரமப் பெயர் சுப்பிரமணியம் மகாதேவன் என்பதாகும். இவர், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள இருள்நீக்கி என்ற கிராமத்தில் 1935ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதியன்று பிறந்தார். இவர் சங்கரமடத்தின் 69வது குருவாக, 1954ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் தேதி அப்போதைய மூத்த மடாதிபதியான சந்திரசேகர சரஸ்வதியால் பட்டமளிக்கப்பட்டார்.

ஜெயேந்திர சரஸ்வதியின் மறைவையடுத்து, இளைய மடாதிபதியான விஜயேந்திர சரஸ்வதி இந்த மடத்தின் 70வது குருவாக செயல்படுவார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: