யார் இந்த கார்த்தி சிதம்பரம்?
இந்தியாவின் சக்தி வாய்ந்த குடும்பங்களில் ஒன்றில் பிறந்த கார்த்தி ப. சிதம்பரம், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு நிறுவனங்களில் பங்குதாரராக உள்ளவர். விளையாட்டிலும், அரசியலிலும் ஆர்வம் கொண்ட அவர் ஐஎன்எக்ஸ் முறைகேடு விவகாரம் தொடர்பாக இன்று காலை மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பட மூலாதாரம், Twitter
இந்தியாவின் நிதியமைச்சராவும் உள்துறை அமைச்சராகவும் பதவி வகித்த பழனியப்பன் சிதம்பரம் - நளினி சிதம்பரத்தின் மகனாக 1971 நவம்பர் மாதம் பிறந்தார் கார்த்தி. செட்டிநாட்டு ராஜா என்று அழைக்கப்பட்ட சர் அண்ணாமலை செட்டியார், ப. சிதம்பரத்தின் தாய் வழித் தாத்தா. அதாவது, கார்த்தி சிதம்பரத்தின் கொள்ளுத் தாத்தா.
சென்னையில் உள்ள தொன் போஸ்கோ பள்ளிக்கூடத்தில் பள்ளிப்படிப்பையும் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டத்தையும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் முதுகலைப் படிப்பையும் முடித்த கார்த்தி, இங்கிலாந்தில் இருந்து திரும்ப வந்தபோது தொழில்துறையில்தான் ஆர்வம் காட்டினார்.
சிறிதுகாலம் ஏ.சி. முத்தையாவின் மணலி பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்தில் பணியாற்றினார்.
இதற்குப் பிறகு பல்வேறு நிறுவனங்களில் பங்குதாரராக இருந்த கார்த்தியின் மற்றொரு ஆர்வம் டென்னிஸ்.
பட மூலாதாரம், Twitter
பல போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கும் கார்த்தி சிதம்பரம், அகில இந்திய டென்னிஸ் சங்கத்திலும் தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்திலும் துணைத் தலைவராகப் பதவி வகித்தவர்.
2004ஆம் ஆண்டில், கருத்துச் சுதந்திரம் தொடர்பாக தமிழகத்தில் பல விவாதங்கள் நடைபெற்று வந்த காலகட்டத்தில் தி.மு.கவின் கனிமொழியுடன் இணைந்து அனைவரது கருத்துகளையும் வெளிப்படுத்துவதற்கான ஒரு இணையதளமாக கருத்து.காம் என்ற இணையதளத்தையும் நடத்தினார் கார்த்தி.
ஆனால், 2012ஆம் ஆண்டில் தன்னைப் பற்றி கருத்து ஒன்றை ட்விட்டரில் வெளியிட்ட புதுச்சேரியைச் சேர்ந்த ரவி சீனிவாசன் என்பவர் மீது காவல்துறையில் புகார் அளித்து அவரைக் கைது செய்ய வைத்து, சர்ச்சைக்குள்ளானார் கார்த்தி.
பட மூலாதாரம், Getty Images
கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தில் சிபிஐ சோதனை
நீண்ட காலமாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக இருந்தாலும் 2014ஆம் ஆண்டில்தான் முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்டார் கார்த்தி. அந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட கார்த்தி, அதில் வெற்றிபெறவில்லை.
ஆனால் மாநில காங்கிரசில், கார்த்திக் சிதம்பரம் தொடர்ந்து சலசலப்பை ஏற்படுத்திவந்தார். 2014ஆம் ஆண்டுத் தோல்விக்குப் பிறகு, மாநில காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் பதவி விலக வேண்டுமென கோரிக்கை விடுத்தார் கார்த்தி.
அதேபோல, கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரியில் தனது ஆதரவாளர்கள் கூட்டத்தை ஜி 67 என்ற பெயரில் சென்னையில் நடத்திய கார்த்தி சிதம்பரம் 2016ல் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் சாத்தியம் இல்லை என்று பேசியதால் மாநில காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் அவருக்கு நோட்டீஸ் அனுப்பினார். மேலும் பிரதமர் நரேந்திர மோதியையும் புகழ்ந்து பேசியதாக சர்ச்சை ஏற்பட்டது.
பட மூலாதாரம், Twitter
2015 செப்டம்பர், அக்டோபரில் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ், கார்த்தி சிதம்பரம் பல நாடுகளில் பல நிறுவனங்களை நடத்திவருவதாக செய்திகளை வெளியிட்டது.
இதன் பிறகு, பல்வேறு நாளிதழ்களில் கார்த்தி சிதம்பரம், ப. சிதம்பரம் ஆகியோருக்கு வெளிநாடுகளில் உள்ள முதலீடுகள், சொத்துகள் குறித்த விவரங்கள் வெளியாயின.
கடந்த 2015ஆம் ஆண்டின் இறுதியில் கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய ஒரு கண் மருத்துவமனை உட்பட மூன்று நிறுவனங்களில் வருமான வரித்துறையும் அமலாக்கத்துறையும் சோதனை நடத்தின.
பட மூலாதாரம், Getty Images
2016ஆம் ஆண்டு மார்ச் மாதம், சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அண்ணா தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தையே ஸ்தம்பிக்கவைத்தனர்.
இந்த நிலையில்தான், ஐஎன்எஸ் நிறுவனம் அன்னிய முதலீடுகளைப் பெறுவதில் செய்த முதலீடுகள் தொடர்பாக கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய அட்வான்டேஜ் குளோபல் கன்சல்டிங், செஸ் ஆகிய நிறுவனங்களிலும் கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய இடங்களிலும் மே மாதம் 16ஆம் தேதி மத்தியப் புலனாய்வுத் துறை சோதனைகளை மேற்கொண்டிருக்கிறது.
ஆனால், கார்த்தி சிதம்பரம் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து பேசும்போதெல்லாம், தன்னைக் குறிவைப்பதற்காகவே தன் மகனையும் அவரது நண்பர்களையும் மத்திய அரசு துன்புறுத்திவருவதாக ப. சிதம்பரம் கூறிவருகிறார்.
கார்த்தி சிதம்பரத்தின் மனைவி டாக்டர் ஸ்ரீநிதி ரங்கராஜன், ஒரு மருத்துவர். இவர்களுக்கு அதிதி என்ற குழந்தை உண்டு.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்