கர்நாடகத் தேர்தலுக்காக கட்சித் திட்டத்தை கைவிடுகிறதா பாஜக?

தானே வகுத்துக்கொண்ட கட்சித் திட்டம் ஒன்றினை கர்நாடக மாநிலத் தேர்தலை கருத்தில்கொண்டு பாஜக மீறுவதாகத் தெரிகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

அக்கட்சி, 75 வயதான கட்சியின் மூத்த தலைவர்களை, `மார்க் தர்ஷக் மண்டல்` (வழிகாட்டி குழு)-க்கு அனுப்ப முன்பு முடிவு செய்து இருந்தது.

ஆனால், கர்நாடக முதல்வர் வேட்பாளராக 75 வயதான எட்டியூரப்பா இருப்பார் என பிரதமர் நரேந்திர மோதியே கூறுகிறார்.

மோதி மூன்று வாரத்தில் மூன்றாவது முறையாக கர்நாடகா சென்றார். மூன்றாம் முறை சென்றது, எட்டியூரப்பாவின் 75 வது பிறந்தநாள் விழாவுக்காக நடத்தப்பட்ட விவசாயிகள் பேரணியில் பங்கேற்பதற்காக.

புகழ்ச்சி மழை

அந்த விழாவில், எட்டியூரப்பாவை ஏழை பங்காளனாக, விவசாயிகளின் தோழனாக வர்ணித்த மோதி, எட்டியூரப்பாவால்தான் விவசாயிகளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முடியும், இளைஞர்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற முடியும் என்றார். மேலும் அவர், "எட்டியூரப்பாவின் தலைமையின் கீழ், கர்நாடகா புதிய உச்சங்களை எட்டட்டும்" என்றார்.

படத்தின் காப்புரிமை Getty Images

தென் இந்தியாவின் முதல் பா.ஜ.க முதல்வர் எட்டியூரப்பா. 2008 ஆம் ஆண்டு கர்நாடகாவின் முதல்வராக எட்டியூரப்பா பொறுப்பேற்றார். மூன்று ஆண்டு அதிகாரத்தில் இருந்தவர், ஊழல் குற்றச்சாட்டுகளின் காரணமாக பதவியை இழக்க நேரிட்டது.

இதன் காரணமாக கோபமடைந்த அவர் தனியாக கட்சி தொடங்கினார். இதனால், பாரதிய ஜனதா கட்சிக்கு 2013 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டது. மீண்டும் அவர், 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது கட்சிக்கு மோதியால் அழைத்து வரப்பட்டார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன், தங்கள் கட்சியின் கர்நாடக முதல்வர் வேட்பாளர் எட்டியூரப்பாதான் என்று கூறியது பாரதிய ஜனதா கட்சி. கடந்த ஆண்டு மீண்டும் அதனை உறுதிப்படுத்தியது.

தவறான புரிதல்

பிபிசியிடம் பேசிய கர்நாடகா பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் சுரேஷ் குமார், "மார்க்தர்ஷக் மண்டல் (வழிகாட்டி குழு) -க்கு மூத்த உறுப்பினர்களை அனுப்புவது குறித்து எந்த அளவுகோலும் கிடையாது. 75 வயது ஆனவர்கள் எல்லாம் வழிகாட்டி குழுவுக்கு அனுப்பப்படுவார்கள் என்பது தவறான புரிதல்" என்றார்.

படத்தின் காப்புரிமை Getty Images

மேலும் அவர், "எட்டியூரப்பா கர்நாடகாவில் பிரபலமான ஒரு வெகுஜன தலைவர். கட்சிக்கு அதிர்ஷடத்தை கொண்டு வரும் தலைவர். அவரை ஒரு லிங்காயத் தலைவராக சுருக்கி பார்ப்பது சரியான பார்வை அல்ல" என்றார்.

எட்டியூரப்பா, லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவர். இந்த சாதியினர் மாநிலம் எங்கும் பரவி இருந்தாலும், அவர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பது வட கர்நாடகாவில்தான்.

கர்நாடகாவில் உள்ள மொத்தம் 224 தொகுதிகளில், 105 சட்டமன்ற தொகுதிகள் வடக்கு கர்நாடகாவில்தான் உள்ளன.

தவிர்க்க முடியாது

"இப்போது பா.ஜ.க சந்திக்கும் பிரச்சனை என்னவென்றால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே எட்டியூரப்பாவை அது முதல் வேட்பாளராக முன்னிறுத்தியதுதான். அது இப்போது கவைக் கோலில் மாட்டிக் கொண்டுவிட்டது. இப்போது பா.ஜ.க நினைத்தாலும், அதனால் எட்டியூரப்பாவை தவிர்க்க முடியாது." என்கிறார் அரசியல் ஆய்வாளரும், ஜெயின் பல்கலைக்கழகத்தின் இணை துணை வேந்தருமான சந்தீப் சாஸ்திரி.

அப்படியானால் வழிகாட்டி குழு என்ற கருத்தியல் பா.ஜ.க வால் கைவிடப்பட்டுவிட்டதா?

படத்தின் காப்புரிமை Getty Images

யாரெல்லாம் பிரதமருக்கு போட்டியாகக் கருதப்படுவார்களோ...? அவர்களுக்கானதுதான் இந்த வழிகாட்டி குழு என்கிறார் சந்தீப்.

ஆனால், இத்தருணத்தில், வழிக்காட்டி குழு என்று பேசிக் கொண்டு முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட எட்டியூரப்பாவை மாற்றுவது, பா.ஜ.கவுக்கு மோசமான விளைவுகளைதான் ஏற்படுத்தும் என்கிறார்.

கொள்கைகளை தளர்த்துல்

காங்கிரஸ் கட்சி, 1990 ஆம் ஆண்டிலிருந்து, லிங்காயத் சமூகத்தின் கோபத்திற்கு ஆளாகிவருகிறது. அப்போது முதல்வராக இருந்த லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த வீரேந்திர பாட்டீலை, காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தி நீக்கியதுதான் அதற்கு காரணம்.

காங்கிரஸ் துணை தலைவர் பி எல் சங்கர், "இது பா.ஜ.கவின் வசதி சார்ந்தது. டெல்லியில் அது வசதியாக இருக்கிறது. அதனால், அது சில தலைவர்களை ஓரங்கட்டப் பார்கிறது. இங்கே கட்சியில் இரண்டாம் கட்ட தலைவர்கள் இல்லாததால், அது எட்டியூரப்பாவை முன்னிறுத்துகிறது. அதே நேரம், லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த வாக்குகளையும் அறுவடை செய்ய விரும்புகிறது."

அதிகாரத்திற்காக அவர்கள் தங்கள் கொள்கைகளை தளர்த்திக் கொள்கிறார்கள் என்கிறார் சங்கர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்