மத்திய அரசுடன் இணக்கம் காட்டுவதால் தமிழகத்திற்கு நன்மை கிடைத்துள்ளதா?

மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டதால்தான் தமிழகத்துக்கு பல நன்மைகளைப் பெற முடிந்தது என்று கூறி உள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

படத்தின் காப்புரிமை Getty Images

இது குறித்து , முதல்வர் சொல்கிறபடி, தமிழகத்துக்கு நன்மை கிடைத்திருக்கிறதா? பா.ஜ.கவிடம் பணிந்துவிட்டது அ.தி.மு.க என்ற விமர்சனத்தை தடுப்பதற்காக அவர் இவ்வாறு சொல்கிறாரா? என்று பிபிசி தமிழின் 'வாதம் விவாதம்' பகுதியில் கேட்டிருந்தோம்.

இதற்கு பிபிசி நேயர்கள் சமூக வலைத்தளங்களில் அளித்த பதிலை தொகுத்து வழங்கி உள்ளோம்.

மீத்தேனுக்கு தடை, நியூட்ரினோ ஆய்வுக்குத் தடை, காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க அனுமதி, நீட் தேர்வுக்கு தடை, ஒகி புயலுக்கு நிவாரணம்,போன்றவற்றை மத்திய அரசிடம் சாதிக்க முடிந்ததா எடப்பாடியால்? என்று கேள்வி எழுப்புகிறார் சரோஜா பாலசுப்பிரமணியன்.

படத்தின் காப்புரிமை Getty Images

"நடுவணரசும் ஆளும் மாநில அரசும் இணக்கமான முறையில் உண்மையாகவே செயலாற்றி இருக்குமேயானால், காவிரியில் மணல் அள்ளுவது தடுக்கப்பட்டு நியாயமான நீதியின் மூலம் தண்ணீரை வரவழைத்திருக்கலாம், அழுத்தம் கொடுக்காமல் மேலாண்மை வாரியம் அமைவதற்கான வேலைகள் தொடங்கப்பட்டிருக்கும், கல்லூரி மாணாக்கர் சேர்கையில் நீட் தேர்வுக்கு இடமிருந்திருக்காது, ஒக்கிப் புயல் பாதிப்புகளுக்குத் தேவையான நிதி கிடைத்திருக்கும் என்பதோடு பல மீனவர் காக்கப்பட்டிருப்பர், மாநில வருவாய்களை ஏக வரி கொள்கை எடுத்துக்கொள்ளும் அளவு குறைக்கப்பட்டிருக்கும், எய்ம்ஸ் மருத்துவமனைக்கான வேலைகள் நீதிமன்ற வாசல் ஏறாமல் தொடங்கப்பட்டிருக்கும், இயற்கை சூழலுக்கும் கடல் வளத்திற்கும் வேளாண்மைக்கும் கேடு விளைவிக்கக் கூடிய திட்டங்களுக்கான தொடக்கப் பணிகள் தொடங்கப்பட்டிருக்காது அதற்கான மக்கள் போராட்டமும் நடந்திருக்காது. நடுவண் அரசினால் கிடைத்திருக்கும் பல நன்மைகளில் மேற்கூறியவை இல்லையெனில் அவை இரு கட்சிகளுக்கும் இடையேயான நன்மைகளாகத்தான் இருக்க முடியும்." என்கிறார் சக்தி சரவணன்.

எடப்பாடி பழனிசாமி சத்தமில்லாமல் சாதித்து கொண்டிருப்பதாக கூறுகிறார் குமரவேல்.

படத்தின் காப்புரிமை Getty Images

"முதலில் இவர்கள் மத்திய அரசு மூலம் தமிழகத்திற்கு பெற்ற நன்மைகளை வெள்ளை அறிக்கையாக வெளியிட இந்த அரசு தயார? அது அப்படியே இருக்க. 6 வாரத்தில் காவேரி மேலாண்மை அமைக்க வேண்டும். நீதிமன்றம் அதை உடனே நிறைவேற்ற சொல்ல தைரியம் இருக்கா இந்த அரசுக்கு." என்கிறார் ஜெ.எம். ரஃபீக்.

துரை முத்துசெல்வம், "மக்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. ஆளும் தரப்பிற்கு ஏதாவது கிடைத்திருந்தால் மகிழ்ச்சி தான். நீட் விவகாரம் ஒன்றே தமிழகத்திற்கு என்ன கிடைத்திருக்கிறது என்பதை அனைவருக்கும் உணர்த்துகின்றது." என்கிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :