சர்ச்சைகளின் 'நாயகன்' ஜெயேந்திர சரஸ்வதி

  • 1 மார்ச் 2018
ஜெயேந்திர சரஸ்வதி: சர்ச்சைகளின் நாயகன் படத்தின் காப்புரிமை DIBYANGSHU SARKAR

காஞ்சி 'சங்கரமடத்தின்' 69-வது பீடாதிபதி என அந்த மடத்தினால் குறிப்பிடப்படும் ஜெயேந்திர சரஸ்வதி புதன்கிழமை காலமானார். சமய மடாதிபதிகளின் வழக்கமான பிம்பத்துக்கு மாறாக பெரும் அரசியல் செல்வாக்கோடு விளங்கியவர் இவர்.

அதே நேரம் கொலை வழக்கில் கைது உள்ளிட்ட சர்ச்சைகளிலும் சிக்கியவர்.

ஜெயேந்திர சரஸ்வதியின் இயற்பெயர் (பூர்வாசிரமப் பெயர்) சுப்ரமணியன். இவரது தந்தை ரயில்வே துறையில் பணியாற்றியவர்.

ஆறு ஆண்டுகள் சங்கரமடத்தின் வேதபாட சாலையில் பயின்ற சுப்ரமணியன், 1954ல் ஜெயேந்திர சரஸ்வதி எனப் பெயர் மாற்றம் பெற்று சங்கர மடத்தின் பீடாதிபதியானார்.

படத்தின் காப்புரிமை STR

தொடக்க காலத்தில், பெரிதாக செய்திகளில் அடிபடாத ஜெயேந்திர சரஸ்வதி, 80களிலிருந்தே மடத்தின் சமயச் செயல்பாடுகளுக்கு மாறான செயல்களில் ஈடுபட்டதாகக் கருதப்பட்டவர்.

குறிப்பாக தமக்கு முந்தைய மடாதிபதியான சந்திரசேகர சரஸ்வதி இருக்கும்போதே, தமக்கு இளைய பீடாதிபதியாக விஜயேந்திர சரஸ்வதியை இவர் நியமித்தார்.

ஜெயேந்திர சரஸ்வதி சம்பந்தப்பட்ட மிகப்பெரிய சர்ச்சை 1987ல் வெடித்தது.

அந்த ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி யாரிடமும் சொல்லாமல், மடத்தைவிட்டு வெளியேறினார் ஜெயேந்திரர்.

படத்தின் காப்புரிமை WWW.KAMAKOTI.ORG

சங்கராச்சாரியாராக இருப்பவர்கள் எப்போதும் தன் தண்டத்தை (சங்கராச்சாரியார் கையில் வைத்துள்ள ஒரு புனிதக் கழி) பிரியக் கூடாது என்பது மரபு.

ஆனால், ஜெயேந்திரர் மடத்தைவிட்டு வெளியேறியபோது, தன் தண்டத்தையும் கமண்டலத்தையும் விட்டுவிட்டே வெளியேறினார்.

சாதுர்மாஸ்ய பூஜை காலத்தில் பீடாதிபதிகள் வெளியேறக்கூடாது என்ற விரதத்தையும் மீறி அவர் வெளியேறியது மடத்தின் பக்தர்களுக்கு பெரும் துக்கத்தை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் அந்த காலகட்டத்தில் பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

இதையடுத்து மூத்த சங்கராச்சாரியாரான சந்திரசேகர சரஸ்வதி, மடத்தின் பூஜைகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக புதிய மடாதிபதியாக விஜயேந்திர சரஸ்வதியை நியமித்தார் (அதற்கு முன்பே, விஜயேந்திர சரஸ்வதி ஜெயேந்திர சரஸ்வதிக்கு அடுத்த நிலையில் இருந்துவந்தார்.).

மூன்று நாட்கள் தேடுதல் வேட்டைக்குப் பிறகு, கர்நாடக மாநிலத்தின் தலைக்காவிரியில் ஜெயேந்திர சரஸ்வதி கண்டுபிடிக்கப்பட்டார்.

தண்டத்தைவிட்டு வெளியேறியது குறித்து அந்தத் தருணத்தில் செய்தியாளர்கள் கேட்டபோது, தண்டத்தின் சக்தியை தன் உடலில் ஏற்றிக்கொண்டதாக பதிலளித்தார் ஜெயேந்திரர். விஜெயேந்திரர் பொறுப்பேற்றுக்கொண்டதில் தனக்கு மகிழ்ச்சி என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்குப் பிறகு செப்டம்பர் 17ஆம் தேதியன்று காஞ்சி மடத்திற்குத் திரும்பிய ஜெயேந்திரர், மீண்டும் மடாதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதற்கு அடுத்த இரு வாரங்களிலேயே, அதாவது அக்டோபர் 2ஆம் தேதியே ஜன கல்யாண், ஜன ஜாக்ரண் என்ற புதிய இயக்கங்களை ஆரம்பித்தார் ஜெயேந்திரர்.

படத்தின் காப்புரிமை WWW.KAMAKOTI.ORG

மக்களுக்கு சேவை செய்வதும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுமே இதன் இரண்டு நோக்கங்கள் என்று இதன் துவக்கவிழாவில் பேசினார் ஜெயேந்திரர்.

இந்த இயக்கத்திற்கும் மடத்திற்கும் சம்பந்தம் இல்லையென்றாலும் சந்திரசேகர சரஸ்வதியின் ஆசிகள் இதற்கு உண்டு என்றும் அவர் தெரிவித்தார்.

ஆனால், ஒரு காலகட்டத்திற்குப் பிறகு அந்த இயக்கத்தை பெரிய அளவில் முன்னெடுத்துச் செல்லவில்லை.

காஞ்சி சங்கர மடத்திற்கு குடியரசுத் தலைவர் போன்ற உயர் பதவிகளை வகிக்கக்கூடியவர்கள் வருவது வழக்கம்தான் என்றாலும் 1998ல் மத்தியில் பா.ஜ.க. அரசு ஏற்பட்ட பிறகு இது பெரிய அளவில் அதிகரித்தது.

மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள பல பாரதிய ஜனதாக் கட்சித் தலைவர்கள் காஞ்சி மடத்திற்கு வந்து ஜெயேந்திர சரஸ்வதியைச் சந்தித்துச் சென்றனர்.

2001-2006 காலகட்டத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சியின் துவக்க ஆண்டுகளில் தமிழக அரசில் பெரும் செல்வாக்குடன் ஜெயேந்திர சரஸ்வதி விளங்கினார்.

கோவில் தொடர்பான எல்லா அரசு விழாக்களுக்கும் அவர் அழைக்கப்பட்டார். கோவில் சொத்துக்களை பாதுகாப்பது தொடர்பான மாநில அளவிலான குழுவின் தலைவராகவும் அவர் நியமனம் செய்யப்பட்டார்.

2002ல் தமிழக அரசு கொண்டுவந்த கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தின் பின்னணியிலும் ஜெயேந்திரர் இருந்ததாகக் கூறப்பட்டது.

இந்த காலகட்டத்தில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலின் வழிபாட்டு நடைமுறைகளில் சில மாற்றங்களை பரிந்துரைத்தார் ஜெயேந்திர சரஸ்வதி.

இதற்கு வைணர்களிடமிருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பியது. சங்கராச்சாரியார் ஸ்ரீவைஷ்ணவ மரபைச் சார்ந்தவர் இல்லை என்பதால், வைஷ்ணவ விவகாரங்களில் தலையிட வேண்டாமென த்ரிதண்டி ராமானுஜ சின்ன ஜீயர் தெரிவித்தார்.

ஜெயேந்திரரின் இந்த செயல்பாடுகள், இந்து மதம் முழுமைக்கும் ஒரு தலைவரைப்போல ஆக அவர் விரும்புகிறாரோ என்ற தோற்றத்தையும் ஏற்படுத்தியது.

படத்தின் காப்புரிமை DIBYANGSHU SARKAR/AFP/GETTY IMAGES
Image caption விஜயேந்திர சரஸ்வதி

கூதிரம்பாக்கத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டவர்கள், கிராமத்துக் கோவிலுக்குள் நுழைவதற்கு தங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் ஜெயேந்திரர் அதற்கு உதவ வேண்டுமென்றும் கேட்டபோது, குளித்து, சுத்தமாகிவிட்டு கோவிலுக்குள் நுழையும் அனுமதியைக் கோர வேண்டுமென ஜெயேந்திரர் அந்தத் தருணத்தில் கூறியதாகச் சொல்லப்பட்டது.

இதனை எதிர்த்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

2004ல் கொலைவழக்கில் சங்கராச்சாரியார் கைதுசெய்யப்பட்டதும், அவர் மீது பாலியல் ரீதியான புகார்களும் சொல்லப்பட்டன. சில பெண்கள் வெளிப்படையாக, அவர் மீது புகார்களை முன்வைத்தனர்.

பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன், பத்திரிகையாளர்களைச் சந்தித்து சங்கராச்சாரியார் தன்னிடம் முறைகேடாக நடந்துகொண்டதாகக் குற்றம்சாட்டினார்.

சங்கரமடத்தின் சார்பில் பத்திரிகை ஒன்று துவங்கப்போவதாகக் கூறி, தான் அழைக்கப்பட்டதாகவும் அப்போது தனிமையில் தன்னிடம் பேசிய ஜெயேந்திர சரஸ்வதி முறைகேடாக நடக்க முயன்றதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

2004ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி தோல்வியடைந்தபோது, ஜெயலலிதாவின் அகங்காரமே அதற்குக் காரணம் என்று ஜெயேந்திரர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டார்.

இந்தப் பேட்டிக்குப் பிறகுதான் ஜெயேந்திரருக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையிலான விலகல் துவங்கியது.

ஜெயேந்திரர் மீதான சர்ச்சைகளின் உச்சகட்டமாக, காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலின் மேலாளராகப் பணிபுரிந்த சங்கரராமன் என்பவர், அந்தக் கோவில் வளாகத்திலேயே 2004ஆம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதியன்று கூலிப்படையினரால் வெட்டிக்கொல்லப்பட்ட விவகாரத்தில், அவர் தொடர்புபடுத்தப்பட்டார்.

இதையடுத்து, நவம்பர் 11ஆம் தேதியன்று ஆந்திராவில் முகாமிட்டிருந்த ஜெயேந்திர சரஸ்வதியும், விஜயேந்திர சரஸ்வதியும் தமிழகக் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர்.

இந்த கைது நடவடிக்கையை அடுத்து, சங்கர மடத்தின் மடாதிபதிகள் இருவர் மீதும் பல்வேறு பாலியல் புகார்கள் கூறப்பட்டன.

சங்கரராமன் கொலை வழக்கு 2005ல் புதுவை மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை நடந்துவந்த காலகட்டத்தில், வழக்கை விசாரித்த நீதிபதிக்கு பணம் கொடுத்து சங்கராச்சாரியார் தீர்ப்பை மாற்ற முயல்வதாக 2011 ஆகஸ்டில் ஒரு மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டது.

சங்கராச்சாரியாரும் நீதிபதியும் பேசுவதாகக் கூறப்பட்ட ஒலிநாடாக்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன.

2013ல் இந்த வழக்கில் தீர்ப்பு வெளியானது. ஜெயேந்திரரும் விஜயேந்திரரும் இந்தக் கொலை வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

ஆனால், இந்தக் கொலை வழக்கில் ஜெயேந்திரர் கைதுசெய்யப்பட்டதிலிருந்து அரசின் உயர் மட்டத்தில் மடத்தின் செல்வாக்கு குறைய ஆரம்பித்ததாகவே கருதப்படுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்