'ஸ்பீட் டேட்டிங்' எனும் நவீன சுயம்வரம்: இந்தியாவில் பரவும் புதிய கலாசாரம்

  • 3 மார்ச் 2018

'ஸ்பீட் டேட்டிங்': ஆண்களும் பெண்களும் வலைதளத்தில் பதிவு செய்து தங்களுக்கு பொருத்தமான துணையை தேடும் நவீன வடிவம் இந்தியர்களுக்கு பிடித்திருக்கிறதா? இதுபோன்ற வலைதளங்கள் எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்குமா?

படத்தின் காப்புரிமை Getty Images

"நான் அங்கே போனபோது சுயம்வரத்தில் கலந்துகொண்டது போல இருந்த்து. என் முன்னே 10 இளைஞர்கள் இருந்தார்கள். அதில் யார் சரியானவர் என்று என் கண்கள் தேடின."

இப்படி சொல்லிவிட்டு கலகலவென சிரிக்கிறார் 29 வயது ஸ்ருதி. முதன்முறையாக "ஸ்பீட் டேட்டிங்" நிகழ்ச்சிக்கு சென்றபோது நேரிட்ட அனுபவம் இது என்று சொல்கிறார் ஸ்ருதி.

ஸ்பீட் டேட்டிங்கை "நவீனகால சுயம்வரம்" என்றும் சொன்னால் சரியாக இருக்குமா? இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். சுயம்வரத்திற்கும் ஸ்பீட் டேட்டிங்கிற்கும் உள்ள ஒரே வித்தியாசம், இந்த நவீன சுயம்வரத்தில் ஆண்களோடு பெண்களும் கலந்துக் கொள்ளலாம் என்பதே.

இதில் கலந்து கொள்ளும் இருபாலரும், தங்களுக்கு விருப்பமான வாழ்க்கைத் துணையையோ, நண்பரையோ தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். யாருமே பிடிக்காவிட்டாலும் ஒன்றும் குடி முழுகிப்போய்விடாது. தயக்கமோ அழுத்தமோ இல்லாமல் அடுத்த முறை முயற்சிக்கலாம் (கஜினி முகமதுவைப்போல).

இந்த ஸ்பீட் டேட்டிங்கில் அறிமுகமான ஒரு வாலிபருடன் தற்போது டேட்டிங் செய்து கொண்டிருக்கிறார் ஸ்ருதி.

ஸ்பீட் டேட்டிங் என்றால் என்ன?

ஸ்பீட் டேட்டிங் என்ற பழக்கம் மேற்கத்திய நாடுகளில் இருந்து இறக்குமதியான, இந்தியாவில் இல்லாத வழக்கம். ஆனால் காலங்கள் மாறிவிட்ட சூழ்நிலையில் நவீனத்தை விரும்பும் மக்களிடம் இந்த புதிய பாணி விரைவாக பரவி வருகிறது. இந்தியாவில் மட்டுமல்ல, பல்வேறு நாடுகளிலும் பரவலாகிவிட்டது ஸ்பீட் டேட்டிங்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஸ்பீட் டேட்டிங்கில் இணை தேடும் இளைஞர்களும், துணை தேடும் இளைஞிகளும் சந்தித்துக் கொள்கிறார்கள். உதாரணமாக, 10 பெண்கள் மற்றும் 10 ஆண்கள் இருந்தால், ஒவ்வொருவரும் எதிர்பாலினரிடம் தனித்தனியாக பேச வாய்ப்பு கிடைக்கும்.

ஒவ்வொருவருக்கும் எட்டு நிமிட அவகாசம் கிடைக்கும். அந்த குறுகிய கால அவகாசத்தில் தங்களுக்கு பிடித்த மற்றும் பிடிக்காத அடிப்படை விஷயங்களை அவர்கள் பகிர்ந்துக் கொள்ளவேண்டும்.

அதாவது தோராயமாக ஒன்றரை மணி நேரத்திற்குள் பத்து பேருடன் பேசி ஒத்து வருபவராக தோன்றுபவரை உங்கள் எதிர்கால வாழ்க்கைத் துணையாக தேர்ந்தெடுக்கலாம்.

அந்த எட்டு நிமிட உரையாடலில் உங்களுக்கு ஏற்றவராக யாராவது ஒருவர் பிடித்திருக்கிறாரா இல்லையா என்று சொல்லிவிடவேண்டும்.

ஸ்பீட் டேட்டிங்கின் நன்மைகள்

உரையாடலில் மீண்டும் சந்திக்க விரும்புபவர்கள் அடுத்த கட்டத்திற்கு செல்ல்லாம். இந்த முறையின் சிறப்பம்சம் என்னவென்றால், குறைந்த நேரத்திலேயே நீங்கள் உங்களுக்கு உகந்த துணையை தேர்ந்தெடுக்கலாம்.

படத்தின் காப்புரிமை Getty Images

இங்கு வருபவர்கள், காதலையோ, டேட்டிங்கையோ மட்டும் தேடி வரவேண்டும் என்று அவசியம் இல்லை. நட்பு கொள்ளவும், இயல்பாக பேசிப் பழகவும்கூட ஸ்பீட் டேட்டிங்கிங்கிற்கு வரலாம்.

'லைஃப் ஆஃப் லைன்' என்ற அமைப்பு, இந்தியாவின் வெவ்வேறு நகரங்களில் ஸ்பீட் டேட்டிங் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறது. 2016ஆம் ஆண்டு முதல் இந்த அமைப்பு இந்த சேவைகளை வழங்கிவருகிறது.

இந்த அமைப்பின் செயல்பாட்டாளர்களின் ஒருவர் பிரதீக். இந்த புதுவிதமான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் பிரதீக்குடன் பேசினோம். அவர் சொல்கிறார், " ஸ்பீட் டேட்டிங் செய்ய விரும்புபவர்கள் எங்கள் வலைதளத்திற்கு வந்து பதிவு செய்து கொண்டு, எங்களை தொடர்பு கொள்ளலாம்."

பிரதீக்கின் கருத்துப்படி, 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் அவர்களை தொடர்பு கொள்கின்றனர். பலவிதமான, வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்ட மனிதர்களை சந்திப்பதாக அவர் தெரிவிக்கிறார்.

யாருடைய சம்மதமும் இல்லாமல், ஒருவரின் தொலைபேசி எண்ணையோ அல்லது எந்தவிதமான தகவல்களையோ பிறருக்கு கொடுப்பதில்லை என்பதில் தங்கள் நிறுவனம் உறுதியாக இருப்பதாக அவர் சொல்கிறார்.

Speeddate.com; quack-quack.com போன்ற வலைதளங்கள் ஸ்பீட் டேங்கிங் சேவைகளை வழங்குகின்றன.

படத்தின் காப்புரிமை Getty Images

திருமணத்திற்கு துணை தேடி தரும் மேட்ரிமோனியல் வலைதளங்களைப் போல ஸ்பீட் டேட்டிங் வலைதளங்களின் குறிக்கோள் திருமணம் நடத்தி வைப்பது அல்ல. ஆனால் டேட்டிங்கிற்கு பிறகு விருப்பப்பட்டால், அவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம்.

தன்னிடம் இளைஞர்கள் வந்து ஆலோசனை கேட்டுச் செல்வதாக கூறுகிறார் உறவுநிலைகள் குறித்த சிறப்பு நிபுணர் டாக்டர் கீதாஞ்சலி சக்சேனா.

அவர் கூறுகிறார், "இன்றைய சூழ்நிலையில் ஸ்பீட் டேட்டிங் என்பது தவறானது என்று சொல்லமாட்டேன். முதல் பார்வையிலேயே காதல் மலரவேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆழ்ந்து யோசித்து, ஒருவரின் அடிப்படை இயல்புகளை தெரிந்துக்கொண்டு தேர்ந்தெடுப்பது நல்லது என்றே நினைக்கிறேன்."

டெல்லியில் வசிக்கும் கெளரவ் வைத்யா ஒரு ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிகிறார். ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு திரும்பிய இவரிடம் ஸ்பீட் டேட்டிங் செய்வதைப் பற்றி நண்பர் ஒருவர் சொன்னாராம்.

படத்தின் காப்புரிமை Getty Images

பிபிசியிடம் பேசிய கெளரவ், "இது விளையாட்டுத்தனமானது என்றே முதலில் நினைத்தேன். ஒரு பெண்ணிடம் நான் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு விசில் சப்தம் கேட்டது. அடுத்த மேசைக்கு சென்று அங்குள்ள பெண்ணிடம் பேசுங்கள் என்று அறிவித்தார்கள், அது வித்தியாசமான அனுபவமாக இருந்தது."

ஆனால் ஸ்பீட் டேட்டிங்கின் சிறப்பம்சமே இதுதான் என்று பிறகு புரிந்துக் கொண்டதாக சொல்லும் கெளரவ், "குறைந்த நேரத்தில் நிறைய பேருடன் பேசவேண்டும் என்ற அனுபவம் புதியதாக த்ரில்லிங்காக இருந்தது" என்கிறார்.

"இப்போது நான் இரண்டு பெண்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். என் மனதுக்கு பிடித்த ஒருவர் இந்த வலைதள சேவையின் மூலம் கிடைத்துவிடவேண்டும்" என்று தனது ஆசையைச் சொல்கிறார் கெளவர்.

உங்கள் தேவை என்ன? தெரிந்து கொள்ளுங்கள்

ஆனால், ஸ்பீட் டேட்டிங் என்ற இந்த நவீன கருத்தாக்கத்தில் நன்மைகள் மட்டுமே இருக்கிறதா? இங்கு உங்களுக்கு ஏற்றவர் கிடைப்பார் என்பதற்கு உத்தரவாதம் இருக்கிறதா?

படத்தின் காப்புரிமை Getty Images

டாக்டர் கீதாஞ்சலியின் கூற்றுப்படி, "ஸ்பீட் டேட்டிங் என்ற ஒரு இருமுனை ஆயுதத்தை நீங்கள் கையில் எடுக்கும்போது உங்கள் தேவை என்ன என்பதில் தெளிவாக இருக்கவேண்டும், ஏனென்றால் நீங்கள் பலருடன் தொடர்ந்து பேசும்போது குழப்பம் ஏற்படலாம்."

முதலில் ஒருவரின் அழகு அல்லது புன்னகையில் ஈர்க்கப்படலாம். ஆனால் அது நமக்கு ஏற்ற தெரிவா என்று சொல்லமுடியாது என்று ஒத்துக்கொள்ளும் கீதாஞ்சலி, தெளிவாக இருக்கும் ஒருவர் குழப்பமடையவும் வாய்ப்பு இருக்கிறது என்பதையும் கவனத்தில் வைத்துக் கொள்ளவேண்டும் என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: