ஐ.என்.எக்ஸ் மீடியா முதல் ஏர்செல் வரை - இவைதான் கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக உள்ள குற்றச்சாட்டுகள்!

முன்னாள் மத்திய நிதி மற்றும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனான கார்த்திக் சிதம்பரத்தை மத்திய புலனாய்வு துறை, பணச் சலவை வழக்கில் கைது செய்தது.

யார் இந்த கார்த்தி சிதம்பரம்?

பட மூலாதாரம், Twitter

லண்டனிலிருந்து நாடு திரும்பிய கார்த்தி சிதம்பரம் சென்னை விமான நிலையம் வந்தவுடனே கைது செய்யப்பட்டார். சில நாட்களுக்கு முன், அவரது ஆடிட்டர் எஸ்.பாஸ்கரும் கைது செய்யப்பட்டார். 

சரி... என்னென்ன குற்றச்சாட்டுகள் கார்த்திக் சிதம்பரத்திற்கு எதிராக உள்ளன.

ஐ.என்.எக்ஸ் மீடியா:

ஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கு அன்னிய முதலீடு மேம்பாட்டு வாரியம் அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்து இருப்பதாக கூறி, கடந்த ஆண்டு மே மாதம்  கார்த்திக் சிதம்பரத்திற்கு எதிராக அமலாக்கத் துறைவழக்கு பதிவு செய்தது.

பட மூலாதாரம், Getty Images

கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட அமலாக்கத்துறை வழக்கு தகவல் அறிக்கையில் கார்த்திக் சிதம்பரம் உள்ளிட்டோர் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. இந்த அறிக்கை காவல்துறையின் முதல் தகவல் அறிக்கைக்கு நிகரானது.

பண சலவை தடுப்பு பிரிவின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது.

அதன் பின் அமலாக்கத்துறையும், மத்திய புலனாய்வுத் துறையும் கார்த்தி சிதம்பரத்திற்கு எதிரான இந்த குற்றச்சாட்டுகளை விசாரித்துவருகின்றன.

மத்திய நிதி அமைச்சராக, 2007 ஆம் ஆண்டு ப.சிதம்பரம் இருந்தபோது, ஐ.என்.எக்ஸ் மீடியா 300 கோடிக்கும் அதிகமான அன்னிய முதலீட்டை பெற்றது.  முதலீடு ஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கு அனுமதிக்கப்பட்டதைவிட அதிகமானது. இந்தப் பணபரிமாற்றத்திற்காக முறைகேடாக பலன் பெற்றார் கார்த்திக் சிதம்பரம் என்பதுதான் குற்றச்சாட்டு.

ஐ.என்.எக்ஸ் மீடியா பீட்டர் முகர்ஜிக்கும், அவரது மனைவி இந்தராணிக்கும் சொந்தமான நிறுவனம். மகளை கொன்ற வழக்கில் இந்த இருவரும் இப்போது சிறையில் இருக்கிறார்கள்.

பட மூலாதாரம், Twitter

கடந்த ஆண்டு மத்திய புலனாய்வு துறையும், அமலாக்கத் துறையும் நான்கு நகரங்களில் உள்ள கார்த்திக் சிதம்பரத்தின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டது. இந்த சோதனையை தொடர்ந்து, கார்த்திக் சிதம்பரத்தின் பல்வேறு சொத்துகள் கைப்பற்றப்பட்டன.

இதற்கு எதிராக அவர் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். அங்கு இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

ஏர்செல் - மேக்சிஸ் நிறுவனம்

கார்த்திக் சிதம்பரத்திற்கு தொடர்புடைய நிறுவனம் என்று கூறப்படும் ஏஎஸ்சிபிஎல் நிறுவனம் முறைகேடாக 26 லட்சம் ரூபாய் பெற்றதாக கூறப்படுவது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.

பட மூலாதாரம், Twitter

ஏர்செல் - மேக்சிஸ் நிறுவனம், 3,500 கோடி ரூபாய் அன்னிய முதலீடு பெற அனுமதி பெற்றபின் இந்த 26 லட்சம் ரூபாய் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது.  அப்போது, ப.சிதம்பரம்தான் நிதி அமைச்சராக இருந்தார். அந்நிய முதலீடை அனுமதிக்கும் அதிகாரம் அவருக்கு இருந்தாலும், பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுவின் அனுமதியை பெற்றிருக்க வேண்டும். ஆனால், இந்த முதலீட்டுக்கு அக்குழுவின் அனுமதி பெறப்படவில்லை என்று கூறப்படுகிறது.

 தன் மீதும், தன் மகன் மீது சுமத்தப்படும் இந்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மறுக்கிறார். தன் மகன் மீது எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைகள் நகைப்புக்குரிய தவறுகள் என்று கூறும் அவர், இதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என வர்ணிக்கிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :