ஆதி சங்கரர் நிறுவியதா காஞ்சி சங்கரமடம்? - முரண்படும் தகவல்கள்

  • முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பிபிசி

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதியாக இருந்த ஜெயேந்திர சரஸ்வதி காலமான நிலையில், இளைய மடாதிபதியாக உள்ள விஜயேந்திர சரஸ்வதி புதிய மடாதிபதியாகிறார்.

பட மூலாதாரம், WWW.KAMAKOTI.ORG

காஞ்சி மடத்தின் நிர்வாகிககள், ஜெயேந்திரரின் இறுதிச் சடங்கிற்கான பணிகளில் தீவிரமாக உள்ள நிலையில், விஜயேந்திரருக்கு அடுத்த இளைய மடாதிபதியை நியமிப்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. 

காஞ்சி சங்கர மடம் தனக்கென ஒரு வரலாற்றைக் கொண்டிருக்கிறது. இந்த மடத்தின் குரு பரம்பரையின் துவக்கமாகக் கருதப்படும் ஆதி சங்கரர், 2500 வருடங்களுக்கு முன்பாக, அதாவது கி.மு. 509ஆம் ஆண்டில் பிறந்ததாகவும் தனது இறுதிக் காலத்தை காஞ்சிபுரத்தில் கழித்து, முக்தியடைந்ததாகவும் காஞ்சி காமகோடி மடத்தின் இணைய தளம் தெரிவிக்கிறது. காஞ்சி மடத்தை கி.மு. 482 நிறுவியதாகவும் அந்த இணைய தளம் கூறுகிறது. 

ஆதி சங்கரருக்குப் பிறகு, அவரது வழியில் வந்தவர்கள் மடாதிபதிகளாக இருந்து இந்த மடத்தை வழிநடத்தியதாகவும் 62வது மடாதிபதியாக இருந்த ஸ்ரீ சந்திரசேகரேந்திரரின் காலத்தில் (கி.பி1746 - 1783) காஞ்சிபுரத்தில் இருந்த அரசியல் சூழலின் காரணமாக, தமிழகத்தின் தென் பகுதிக்கு மடம் இடம் பெயர்ந்ததாகவும் ராமநாதபுரம், திருவனந்தபுரம், புதுக்கோட்டை, உடையார் பாளையம் ஆகிய இடங்களில் தற்காலிகமாக செயல்பட்டுவிட்டு, 1760ல்  தஞ்சையை ஆண்ட ராஜா பிரதாப சிம்மனின் வேண்டுகோளின் பேரில், தஞ்சைக்கு இடம் பெயர்ந்ததாக இந்த மடத்தின் வரலாறு கூறுகிறது.

பட மூலாதாரம், WWW.KAMAKOTI.ORG

இதற்கு ஒரு வருடத்திற்குப் பிறகு கும்பகோணத்தில் காவிரிக் கரையில் புதிய மடம் கட்டப்பட்டதாகவும் மடத்தின் வரலாறு கூறுகிறது.  இங்குதான் 62, 63, 64வது மடாதிபதிகள் முக்தியடைந்தனர். 

1907ல் இந்த மடத்தின் 68வது மடாதிபதியாக ஸ்ரீ சந்திரசேகரேந்திரர் தன் 13வது வயதில் மடாதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர் தனக்கு அடுத்த மடாதிபதியாக 1954ல் ஜெயேந்திர சரஸ்வதியை நியமித்தார். இதற்குப் பிறகு 1983ல் சங்கர விஜயேந்திர சரஸ்வதியை தனக்கு அடுத்த மடாதிபதியாக ஜெயேந்திரர் நியமித்தார்.

விஜயேந்திர சரஸ்வதி, பொன்னேரியை அடுத்துள்ள தண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர்.

பட மூலாதாரம், DIBYANGSHU SARKAR/AFP/GETTY IMAGES

படக்குறிப்பு,

விஜயேந்திர சரஸ்வதி

இப்படியாக, ஆதி சங்கரரில் துவங்கி, தொடர்ச்சியாக 70 மடாதிபதிகள் தங்கள் மடத்திற்கு இருந்ததாக காஞ்சி சங்கர மடத்தின் இணைய தளம் கூறுகிறது. இந்தியாவில் உள்ள பிற சங்கர மடங்கள் குறித்தும் அந்த மடங்களுக்கும் தங்களுக்கும் உள்ள தொடர்பு குறித்தும் காஞ்சி சங்கர மடத்தின் வரலாற்றில் ஏதும் இல்லை. 

இந்தியாவின் நான்கு திசைகளிலும் ஆதி சங்கரரால் நிறுவப்பட்டதாகக் கூறப்படும் பிற சங்கர மடங்கள் காஞ்சியில் உள்ள இந்த சங்கரமடத்தைப் பற்றி எதுவும் சொல்வதில்லை.

உதாரணமாக, சிருங்கேரியில் உள்ள சங்கர மடமான ஸ்ரீ தக்ஷிணாம்னய சாரதா பீடம், ஆதி சங்கரர் பிறந்த காலம் கி.பி. எட்டாம் நூற்றாண்டு என்கிறது. அவர், கேரளாவின் காலடியில் கி.பி. 788ல் பிறந்ததாக சிருங்கேரி மடம் கூறுகிறது. 

சிருங்கேரி பீடத்தைப் பொறுத்தவரை ஆதி சங்கரரால் கிழக்கில் பூரியில் உள்ள கோவர்தன மடமும் தெற்கில் சிருங்கேரியில் உள்ள சிருங்கேரி மடமும் மேற்கில் துவாரகையில் உள்ள காளிகா மடமும்  வடக்கில் பத்ரிகாஷ்ரமத்தில் உள்ள ஜோதிர் மடமும்  நிர்ணயிக்கப்பட்டன. இதில் ஒவ்வொரு மடமும் ஒவ்வொரு வேதத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றன. இந்த நான்கு மடங்களின் வரலாறு எதிலும் காஞ்சி சங்கர மடத்தைப் பற்றிய குறிப்புகள் கிடையாது. 

பட மூலாதாரம், WWW.KAMAKOTI.ORG

சிருங்கேரி மடத்தின் முதல் மடாதிபதியாக ஸ்ரீ சுரேஸ்வராச்சாரியார் என்பவரே இருந்ததாக அந்த மடத்தின் வரலாறு கூறுகிறது. காஞ்சி மடத்தைப் பொறுத்தவரை ஆதி சங்கரரே முதல் மடாதிபதி என்று சொன்னாலும் ஸ்ரீ சுரேஸ்வராச்சாரியார், காஞ்சிபுரத்தில்தான் முக்தியடைந்தார் என்று தெரிவிக்கிறது.

ஆனால், காஞ்சியில் உள்ள சங்கர மடம் ஆதி சங்கரரால் உருவாக்கப்பட்ட மடம் அல்ல என்ற கருத்துகளும் உள்ளன.  சிருங்கேரி மடத்தின் கிளை ஒன்று 1821ல் கும்பகோணத்தில் துவங்கப்பட்டதாகவும் விரைவிலேயே அந்த கிளை சிருங்கேரி மடத்திலிருந்து தனித்து இயங்குவதாக அறிவித்துக்கொண்டதாகவும் காஞ்சி சங்கர மடத்தின் விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்த மடமே, 1839ல் காஞ்சிபுரத்திற்கு இடம்பெயர்ந்து, தங்கள் தலைமை பீடமாக அதனை மாற்றிக்கொண்டது என்றும் கூறப்படுகிறது. 

காஞ்சி சங்கர மடத்தைப் பொறுத்தவரை, அடுத்த மடாதிபதியை நியமிப்பது குறித்து தெளிவான விதிகள் ஏதும் தெரியவில்லை. 

1987ல் ஜெயேந்திர சரஸ்வதி மடத்தைவிட்டு வெளியேறியபோது, மடத்தின் தலைமைப் பீடம் காலியாக இருப்பது குறித்து இந்து அறநிலையத் துறையின் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, ஜெயேந்திரரர் ஏற்கனவே விஜயேந்திரரை இளைய மடாதிபதியாக நியமித்திருக்கிறார் என்றும் 1984ல் காமாட்சி அம்மன் கோவில் வைத்து, விஜயேந்திரருக்கு பரிவட்டம் அளித்திருக்கிறார் என்றும் இளைய மடாதிபதியை நியமிக்க இதைத் தவிர வேறு சடங்குகள் தேவையில்லை என்றும் காஞ்சி சங்கரமடத்தின் சார்பில் பதிலளிக்கப்பட்டது. 

ஆகவே, தற்போதைய மடாதிபதியான விஜயேந்திர சரஸ்வதியே அடுத்த மடாதிபதியைத் தேர்வுசெய்து நியமிக்கக்கூடும். இது தொடர்பான  சந்தேகங்களுக்கு விரைவில் சங்கர மடம் பதிலளிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. 

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :