ஸ்ரீதேவியின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க உதவி புரிந்த அஷ்ரப்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடலை எம்பாமிங் செய்தது தொடர்பான சான்றிதழில் அஷ்ரப் என்ற நபர் அவரது உடலை பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை ஞானம்

ஸ்ரீதேவியின் உடலை பெற்ற இந்த நபரை அந்த சான்றிதழில் குறிப்பிடப்பட்ட தொலைப்பேசி எண் மூலம் மார்ச் 1-ஆம் தேதி காலையில் நான் தொடர்பு கொண்டேன்.

அஜ்மான் நகரில் இருந்த அந்நபரை நான் முதலில் தொடர்பு கொண்டபோது, அந்த எண் வேறு அழைப்பில் இருப்பது தெரிந்தது. ஆனால், சில நிமிடங்களில் அந்த எண்ணில் இருந்து எனக்கு ஒரு 'மிஸ்டு கால்' வந்தது. மறுமுனையில் அழைத்தது அஷ்ரப் தமராசேரி.

படத்தின் காப்புரிமை YouTube
Image caption அஷ்ரப்

''நான் தற்போது காவல்நிலையத்தில் உள்ளேன். யாரோ ஒருவர் இறந்துவிட்டார். உங்களால் 15 நிமிடங்களில் மீண்டும் அழைக்க முடியுமா? என்று மரியாதையாக கேட்டார்.

நான் மீண்டும் அவரை அழைத்தேன். இதற்கிடையே அவரை பற்றிய சில தகவல்களை நான் திரட்டினேன்.

குடியேறிகளின் துயரங்களை போகும் அஷ்ரப்

கேரளாவை சொந்த ஊராக கொண்ட அஷ்ரப் தமராசேரி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அஜ்மான் நகரில் வாகனங்களை பழுதுபார்க்கும் மையம் ஒன்றை சொந்தமாக வைத்துள்ளார். ஆனால், இந்தியாவிலிருந்து இங்கு குடியேறும் பலருக்கு இவர்தான் புகலிடமாக உள்ளார்.

17 ஆண்டுகளுக்கு மேலாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் குடியேறிகள் யாரேனும் இறந்துவிட்டால், இறந்தவரின் உடலை அவர்களின் உறவினர்களிடம் வழங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இவர் மேற்கொண்டு வருகிறார்.

படத்தின் காப்புரிமை YouTube
Image caption பணம் எதுவும் வாங்காமல் அஷ்ரப் இந்த சேவையை செய்து வருகிறார்

''கடந்த 2000-ஆம் ஆண்டில், ஷார்ஜாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நண்பர் ஒருவரை காண நான் சென்றபோது, இருவர் தொடர்ந்து அழுது கொண்டிருந்தனர். அவர்கள் எனது சொந்த மாநிலமான கேரளாவை சேர்ந்தவர்கள்'' என்று பி்பிசியிடம் தெரிவித்த அஷ்ரப்

தூயரத்தில் அழுது கொண்டிருந்த அவர்கள், தங்கள் தந்தை இறந்து விட்டதாகவும், அவரின் உடலை எவ்வாறு கேரளாவுக்கு எடுத்து செல்வது என தெரியவில்லை என்றும் தெரிவித்தாக கூறுகிறார்.

''எனக்கு அக்காலகட்டத்தில் இது குறித்த அரசு விதிகள் எதுவும் தெரியாது. ஆனால், அடுத்த 4 அல்லது 5 நாட்கள் அவர்களுடன் சென்ற நான் இறந்தவரின் உடலை பெற்று அவர்களிடம் ஒப்படைத்தேன். இதுதான் ஆரம்பம்'' என்று அஷ்ரப் நினைவுகூர்ந்தார்.

''அதற்கு சிறிது காலத்திற்கு பிறகு வங்கதேசத்தை சேர்ந்த ஒருவர் இறந்துவிட்டார். அப்போதும் இது போன்ற உதவிகளை செய்தேன்'' என்று அவர் தெரிவித்தார்.

இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் நேப்பாளம் உள்ளிட்ட 88 நாடுகளை சேர்ந்த 4700 பேரின் இறந்த உடல்கள் அவர்களின் தாயகத்துக்கு அஷ்ரபின் உதவியால் பாதுகாப்பாக வந்து சேர்ந்துள்ளது.

'இதற்கு பணம் வாங்குவதில்லை'

மேலும், அவர் கூறுகையில், '' சில சமயங்களின் இறந்த உடல்களுடன் செல்ல யாரும் இல்லாத சூழலில், நானே உடல் அடங்கிய பெட்டியை எடுத்து சென்றுள்ளேன். கடந்த வாரம் நான் இவ்வாறு சென்னையில் இருந்தேன். கொல்கத்தா, அஸ்ஸாம் என பல இடங்களுக்கு இவ்வாறு சென்றுள்ளேன்'' என குறிப்பிட்டார்.

பல சிரமங்களையும், சவால்களையும் மேற்கொண்டு செய்யும் இந்த பணிக்கு அஷ்ரப் யாரிடமும் ஒரு ரூபாய்கூட வாங்குவதில்லை.

''என்னால் தற்போது மோட்டார் கேரேஜை பார்த்து கொள்ள முடியவில்லை. உயிரிழந்தவர்களின் உடல்களை அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை ஓவ்வொரு நாளும் நான் மேற்கொள்கிறேன். எனது மைத்துனரே என் தொழிலை பார்த்து கொள்கிறார். கிடைக்கும் வருமானத்தில் என் குடும்பம் சுமூகமாக நடக்கிறது'' என்று அவர் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை YouTube

''இப்பணியை மேற்கொள்வதன் மூலம் பல குடும்பங்களின் ஆசிகள் எனக்கு கிடைக்கிறது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இதுதான் எனக்கும், என் குடும்பத்துக்கும் கிடைக்கும் மிக பெரிய பரிசு'' என்று அஷ்ரப் கூறுகிறார்.

துபாயில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடிகை ஸ்ரீதேவி உயிரிழந்த பிறகு, அஷ்ரபை இந்திய தூதரகம் தொடர்பு கொண்டது.

படத்தின் காப்புரிமை Getty Images

''என்னிடம் இது குறித்து தெரிவிக்கப்பட்டதால், நான் இது தொடர்பாக அங்கு மூன்று முழு நாட்கள் செலவழித்தேன். அதே நாளில், சென்னையில் ஒருவரும், அகமதாபாத்தில் ஒருவரும், கேரளாவில் இருவரும் இறந்துள்ளனர். அவர்களின் உடல்களை பெற்று உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணியையும் நான் செய்தாக வேண்டும்'' என்று அஷ்ரப் தெரிவித்தார்.

ஸ்ரீதேவி குறித்து நினைவுகூர்ந்த அஷ்ரப் , ''அவர் வாழும்போது எவ்வளவு அழகாக இருந்தாரோ, அவரின் உடலை நான் பெற்று கொண்ட போதும் அவ்வளவு அழகாக அவர் காணப்பட்டார்'' என்றார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :