தாய்ப்பால் ஊட்டும் மாடலிங் பெண்ணின் படத்தை பிரசுரித்து சர்ச்சையை கிளப்பிய பத்திரிகை

  • 2 மார்ச் 2018

ஒரு மலையாள இதழ் தனது அட்டைப்படத்தில் மாடல் ஒருவர் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவது போன்ற ஒரு படத்தை பிரசுரித்துள்ளது. இது சமூக ஊடகத்தில் விவாதத்தை எழுப்பி உள்ளது.

படத்தின் காப்புரிமை Grihalakshmi magazine

மலையாள மாடல் ஜிலு ஜோசப், ஒரு குழந்தைக்கு பாலூட்டுவது போல போஸ் கொடுத்து இருந்தார். இந்த புகைப்படம் கேரள மாநிலத்தில் பிரசுரிக்கப்படும், மலையாள இதழான கிரிகலட்சுமி வார இதழில் பிரசுரமாகி இருந்தது.

அது மட்டுமல்லாமல், அந்த அட்டைப்படத்தில், "உற்று பார்க்காதீர்கள், நாங்கள் தாய்ப்பால் கொடுக்கவேண்டும் " என்ற வாசகம் இடம் பிடித்திருந்தது.

அட்டைப்படத்தில் முதல்முறை

ஒரு தாய் தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது போன்ற படம், இந்திய பத்திரிகையின் அட்டையில் இடம் பிடிப்பது இதுதான் முதல்முறை.

கிரிகலட்சுமியின் ஆசிரியர், "நாங்கள் பொது இடத்தில் தாய்ப்பால் கொடுப்பது குறித்து விழிப்புணர்வை உண்டாக்குவதற்காகதான் இந்த படத்தை பிரசுரித்துள்ளோம்" என்கிறார்.

தாய்ப்பால் கொடுப்பது போன்ற படம் முன்பே சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு இருக்கிறது.

ஒரு மாதம் முன்பு, பொது இடங்களில் தாய்ப்பால் கொடுப்பது தொடர்பாக விவாதத்தை எழுப்புவதற்காக, தன் மனைவி தாய்ப்பால் கொடுப்பது போன்ற ஒரு படத்தை பேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார் ஒருவர். ஆனால், அந்த புகைப்படத்தின் காரணமாக அந்த பெண் இணையத்தில் கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளானார் என்று கிரிகலட்சுமியின் ஆசிரியர் மோன்சி ஜோசஃப் பிபிசி செய்தியாளர் அஷ்ரஃப் படான்னாவிடம் தெரிவித்தார்.

இதன்காரணமாகதான், நாங்கள் கிரிகலட்சுமியின் சமீபத்திய இதழை தாய்ப்பால் ஊட்டும் பெண்களுக்காக அர்பணித்தோம் என்கிறார்

புடவை அணியும் பெண்கள் தாய்ப்பால் கொடுக்கும் போது, புடவையைக் கொண்டு மறைத்துக் கொள்ள முடிகிறது. ஆனால், இந்த வாய்ப்பு வேறு உடை அணியும் பெண்களுக்கு இல்லாமல் போகிறது.

ஆதரவும்.. எதிர்ப்பும்

பலர் இது தொடர்பாக சமூக ஊடகத்தில் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.

"சிலருக்கு இது தவறான செயல்... சிலருக்கு அது ஒரு இலவச காட்சி. ஆனால், குழந்தைக்கு இது அத்தியாவசியமான ஒன்று. இது இயற்கையானதும் கூட" என்ற தொனியில் ஒரு ட்வீட்டை பகிர்ந்து, கிரிகலட்சுமி இதழுக்கு வாழ்த்து கூறி உள்ளார் ஸ்ரேயா.

ஆனால், அதே நேரம் இந்த அட்டைப்படம் விமர்சனத்திற்கும் உள்ளாகி உள்ளது.

ஊடகவியலாளர் அஞ்சனா நாயர் எழுதி உள்ள ஒரு ப்ளாகில் விளம்பரத்திற்காக இதை அந்தப் பத்திரிகை செய்துள்ளதாக விமர்சித்துள்ளார்.

கிலு ஜோசஃப், தாம் செய்தது சரிதான் என்கிறார். "இதற்கு நிறைய எதிர்வினை வருமென்று எனக்கு தெரியும். ஆனால், சுதந்திரமாக தாய்ப்பால் கொடுக்க விரும்பும் பெண்களுக்காக நான் அவ்வாறாக போஸ் கொடுத்தேன்." என்கிறார்.

கொண்டாடப்படும் கேரள எழுத்தாளர் பால் சக்காரியா, "பொது இடத்தில் தாய்ப்பால் கொடுப்பது தொடர்பாக இது எந்த புரட்சியையும் ஏற்படுத்தாது. ஆனால், இது ஒரு முக்கியமான நகர்வு. வழக்கமாக இது போன்ற முடிவுகளை எடுத்து, படத்தை பிரசுரித்து, பின்னர் ஆசிரியர் இதற்காக மன்னிப்பு கேட்பார். இம்முறை அவ்வாறாக நிகழாது என்று நம்புகிறேன்." என்கிறார்.

உலகளாவிய பிரச்னை

பொது இடங்களில் தாய்ப்பால் கொடுப்பது உலகெங்கும் சர்ச்சைக்குரிய ஒரு விஷயம்தான்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஸ்காட்லேண்டில் எடுக்கப்பட்ட ஒரு சர்வே, கால் சதவீதத்திற்கும் அதிகமான தாய்மார்கள், பொது இடங்களில் தாய்ப்பால் கொடுப்பதை அசெளகர்யமாக கருதுவதாக கூறி உள்ளார்கள்.

தாய்ப்பால் கொடுப்பது உலகத்திலேயே இங்கிலாந்தில்தான் குறைவு. இருநூறு பேரில் ஒருவர்தான் அங்கு தாய்ப்பால் கொடுக்கிறார். ஜெர்மனியில் 23 சதவீதமும், அமெரிக்காவில் 27 சதவீதமும், பிரேசிலில் 56 சதவீதமும், செனகலில் 99 சதவீதமும் தாய்மார்கள் தாய்ப்பால் கொடுக்கிறார்கள்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்