டிஜிட்டல் கட்டண விவகாரம்: தமிழ் படங்கள் ஏதும் வெளியாகவில்லை
க்யூப், யுஎஃஓ போன்ற டிஜிட்டல் திரையிடும் நிறுவனங்கள், அதிக அளவு கட்டணங்களை தயாரிப்பாளர்களிடம் வசூலிப்பதால், படங்களை வெளியிடுவதில்லையென தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் அறிவித்த தடை இன்று முதல் அமலுக்கு வந்தது. வெள்ளிக்கிழமையான இன்று, ஒரே ஒரு திரைப்படம் மட்டுமே வெளியாகியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
திரையரங்குகளில் டிஜிட்டல் முறையில் திரையிடும் வசதியை ஏற்படுத்தித்தரும் க்யூப், யூஎஃப்ஓ போன்ற நிறுவனங்கள் தயாரிப்பாளர்களிடம் இருந்து வசூலிக்கும் அதிக கட்டணத்தைக் குறைக்க வேண்டுமென கடந்த சில வாரங்களாகவே தயாரிப்பாளர்களுக்கும் டிஜிட்டல் நிறுவனங்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. ஆனால், இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் எட்டப்படவில்லை.
இதையடுத்து மார்ச் 1ஆம் தேதி முதல் புதிய படங்கள் எதையும் வெளியிடப்போவதில்லையென தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது.
"அவர்களோடு இதுவரை நடந்த பேச்சுவார்த்தையில் நியாயமான வகையில் எந்த வித உடன்படிக்கையும் ஏற்படாததால் இனி அவர்களோடு பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதில்லை என்று முடிவெடுக்கப்பட்டது. இது சம்பந்தமாக இனி திரையரங்க உரிமையாளர்களுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படும்" என தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் புதன்கிழமையன்று தெரிவித்திருக்கிறது.
தொடர்புடைய செய்தி
டிஜிட்டல் நிறுவனங்கள் ஏதும் கட்டணக் குறைப்புக்கு இணங்கிவராத நிலையில், வெள்ளிக்கிழமையான இன்று புதிய படங்கள் ஏதும் வெளியாகவில்லை. இந்த தடை குறித்து பல வாரங்களுக்கு முன்பாகவே அறிவிக்கப்பட்டதால், புதிய படங்களின் வெளியீடு ஏதும் இன்று திட்டமிடப்படவில்லை.
இனிமேல் படங்களைத் திரையிட்டாலும் தயாரிப்பாளர்கள் செலுத்திவந்த விஷுவல் புரொஜெக்ஷன் ஃபீஸ் என்ற கட்டணத்தைச் செலுத்தப்போவதில்லை என்றும் கையாளுவதற்கான கட்டணத்தை மட்டுமே செலுத்தப்போவதாகவும் தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்திருக்கிறது.

திரையரங்குகளில் திரையரங்கு உரிமையாளர்களே புரொஜெக்டர்களை வைத்துக்கொள்ளாததால்தான் இந்தக் கட்டணங்களை டிஜிட்டல் நிறுவனங்களுக்கு தயாரிப்பாளர்கள் செலுத்த வேண்டியிருப்பதால், இனிமேல் சொந்தமாக புரொஜெக்டர்களை வைத்துள்ள திரையரங்குகளில் மட்டுமே திரைப்படங்களை வெளியிடப்போவதாக தயாரிப்பாளர் சங்கம் கூறியிருக்கிறது.
ஆனால், இந்தத் தடையை மீறி பவித்ரன் இயக்கியுள்ள தாராவி என்ற திரைப்படம் மட்டும் இன்று வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் தற்போது ஏறக்குறைய ஆயிரம் திரையரங்குகள் இயங்கி வருகின்றன. 2000-ங்களின் துவக்கத்திலிருந்தே ஃபில்ம் ரோல்கள் மூலம் திரையிடக்கூடிய பழைய புரொஜெக்டர்களுக்குப் பதிலாக டிஜிட்டல் முறையில் படங்களை ஹார்ட் டிஸ்க்கிலிருந்து திரையிடும் புரொஜெக்டர்கள் அறிமுகமாகின.
க்யூப், யு.எஃப்.ஓ போன்ற நிறுவனங்கள் இந்தத் தொழில்நுட்பத்துடன்கூடிய புரொஜெக்டர்களை திரையரங்குகளில் நிறுவின.
இந்த டிஜிட்டல் முறையில் ஒரு திரைப்படம் வெளியாகும்போது அதை ஒரு வாரத்திற்கு தாங்கள் சொல்லும் தியேட்டரில் திரையிடுவதற்கு (வெள்ளி முதல் அடுத்த வியாழன் வரை) அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் 12 ஆயிரம் ரூபாய் முதல் 14 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டும்.

இந்தத் திரைப்படம் எத்தனை வாரங்களுக்கு ஓடுகிறதோ, அத்தனை வாரங்களுக்கு கட்டணம் இருக்கும். ஆனால், சற்று குறைந்துகொண்டே வரும்.
இதற்குப் பதிலாக, 'லைஃப்' என்ற முறையில் படத்தைத் திரையிட்டால், அதாவது 'அந்த திரைப்படம் வெளியாகி, திரையரங்கில் இருந்து எடுக்கப்படும் வரை' என்று ஒப்பந்தம் செய்துகொண்டால், 34 ஆயிரம் ரூபாயை கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
இந்தக் கட்டணத்தை முன்கூட்டியே செலுத்த வேண்டும் என்பதால், தயாரிப்பாளர்கள் படத்தை வெளியிடுவதற்கு முன்பாக மிகப் பெரிய தொகையை ஏற்பாடுசெய்துகொள்ள வேண்டும்.
இதனால் கியூப், யுஎஃப்ஓ உள்ளிட்ட தற்போதைய முன்னணி நிறுவனங்களுக்குப் பதிலாக, கட்டணங்களைக் குறைவாக வசூலிக்கும் புதிய நிறுவனத்தை அறிமுகப்படுத்த தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் முயன்றுவருகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
இது தவிர, திரையரங்குகளில் திரைப்படத்திற்கு முன்பும் இடைவேளையின்போதும் திரையிடப்படும் விளம்பரங்கள் தொடர்பாகவும் சர்ச்சை எழுந்துள்ளது. ஒரு திரைப்படத்திற்கு 8 நிமிடங்கள் மட்டுமே விளம்பரங்களை வெளியிட வேண்டுமெனவும் தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.
தங்களுடைய திரைப்படங்கள் திரையிடப்படுவதால் மட்டுமே விளம்பரங்களை வெளியிட முடிவதால், அதன் வருவாயிலும் தங்களுக்கு குறிப்பிட்ட சதவீத பங்கு தேவை என்கின்றனர் அவர்கள். ஆனால், இதற்கு டிஜிட்டல் நிறுவனங்களும் திரையரங்குகளும் ஒப்புக்கொள்ளவில்லை.
தமிழ்த் திரையுலகம் மட்டுமல்லாமல், தெலுங்கு திரையுலகிலும் இந்தத் தடை இன்று அமலுக்கு வந்துள்ளது.
இதற்கிடையில் சென்னையில் உள்ள அபிராமி திரையரங்கம், மார்ச் மாதத்திற்கு மட்டும் டிக்கெட் கட்டணத்தை 165.78லிருந்து 101.86ஆக குறைப்பதாக தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்