மனித கடத்தல்: புதிய வரையறைகளால் பாலியல் தொழிலாளர்களுக்கு பாதிப்பா?

மனித கடத்தல் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டிருக்கும் புதிய வரையறைகள் அமல்படுத்தப்பட்டால், பாலியல் தொழிலாளிகளை திருமணம் செய்துக் கொள்ளும் வாய்ப்பு உள்ளதா?

படத்தின் காப்புரிமை Getty Images

"80 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டோம்" - பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட பெண்களின் கண்ணீர் கதை என்ற கட்டுரையை சில நாட்களுக்கு முன் வெளியிட்டிருந்தோம். அதில் ரமா என்ற பெண்ணும் அவரது தோழியும் கடத்தப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மாற்றுத் திறனாளியான புஷ்பாவையும் தன்னையும் அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்தியதாகவும், மறுத்து முரண்டு பிடித்தபோது, கண்ணில் மிளகாய்ப் பொடியை தூவியதாகவும் பிபிசியிடம் தனது அனுபவத்தை பகிர்ந்துக் கொண்டார் ரமா.

12 வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்ட ரமா, ஆண் குழந்தைக்கு பதில் பெண் குழந்தையை பெற்றெடுத்ததற்காக சித்திரவதைக்கு ஆளானார். தாய்வீட்டுக்குக் வந்தபோது, ரமாவும், அவரது தோழி புஷ்பாவுக்கும் அறிமுகமான ஒரு பெண்மணி இருவரையும் கடத்திச் சென்று பாலியல் தொழில் செய்பவர்களிடம் விற்றுவிட்டார்.

படத்தின் காப்புரிமை Getty Images

மனித கடத்தல் தொடர்பான புதிய வரையறை

எதிர்காலத்தில் இப்படி வேறு பெண்கள் யாரும் ஏமாற்றப்பட்டு பாலியல் தொழிலில் வலுக்கட்டாயமாக தள்ளப்படாமல் இருக்கவேண்டும் என்பதற்காக பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் ஆட்கடத்தல் தொடர்பான புதிய சட்டம் ஒன்றை உருவாக்கியிருக்கிறது.

ஆட்கடத்தல் (தடுப்பு, பாதுகாப்பு, புனர்வாழ்வு) மசோதா 2018 என்ற புதிய சட்டவரைவுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியது.

மனித கடத்தல் தொடர்பான அனைத்து அம்சங்களும் இந்த மசோதாவில் புதிய கோணத்தில் முதன்முறையாக வரையறை செய்யப்பட்டுள்ளன.

படத்தின் காப்புரிமை Getty Images

புதிய சட்ட மசோதாவின்படி கடத்தலுக்கான காரணங்களும் நோக்கங்களும் இவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன:

 • கட்டாய உழைப்பு
 • பிச்சை எடுப்பதற்கு
 • பாலியல் சுரண்டலுக்காக அல்லது விபச்சாரத்தில் ஈடுபடுத்த
 • சிறு வயதிலேயே ஹார்மோன் சிகிச்சை மூலம் செயற்கை முறையில் இளம்பருவ உருவத்திற்கு மாற்றுவது
 • கட்டாய திருமணம், அல்லது திருமண மோசடி
 • மனைவி மற்றும் குழந்தைகளை கடத்துவது
 • குழந்தைளை ஆபாச செயல்களில் ஈடுபடுத்தி படம் எடுப்பது
 • உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக ஆள் கடத்தல்
படத்தின் காப்புரிமை Getty Images

குழந்தைகளின் கடத்தல் மற்றும் குழந்தை தொழிலாளர் ஆகிய பிரச்சனைகள் தொடர்பாக பல ஆண்டுகளாக பணியாற்றிவரும் கைலாஷ் சத்யார்த்தியின் கருத்துப்படி, காலத்திற்கு ஏற்ப சட்டங்களை மாற்றுவதும், புதிய சட்டங்களை உருவாக்குவதும் முன்னெப்போதையும்விட மிகவும் அவசியமாகிவிட்டது.

புதிய சட்டத்தின் புதிய அம்சங்கள் என்ன?

புதிய மசோதாவில் பல புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன:

பாதிக்கப்பட்டவர்கள், புகார் அளித்தவர்கள் மற்றும் சாட்சிகள் பற்றிய தகவல்களை ரகசியமாக வைத்திருக்கவேண்டும்.

பாதிக்கப்பட்டவருக்கு 30 நாட்களுக்குள் இடைக்கால நிவாரணம் மற்றும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட 60 நாட்களுக்குள் முழு நிவாரணம் வழங்கப்படவேண்டும்.

ஒரு ஆண்டுக்குள் நீதிமன்ற விசாரணையை முடிக்க வேண்டும்.

படத்தின் காப்புரிமை Getty Images
 • குற்றம் செய்தவருக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறைதண்டனையும், அதிகபட்சம் மரண தண்டனையும் வழங்கப்படும். இதைத்தவிர ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.
 • மனித கடத்தலில் முதன்முறையாக ஈடுபடும் குற்றாவாளியாக இருந்தால் அவருடைய சொத்துக்களை பறிமுதல் செய்யும் அதிகாரம்.
 • தேசிய புலனாய்வு முகமையில் கடத்தல் தடுப்பு பிரிவு உருவாக்கப்படும்.
 • இவற்றுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் ரீதியான, உளவியல் ரீதியான ஆதரவு வழங்குவது மற்றும் பாதுகாப்பாக தங்குவதற்கான வசதிகளை செய்து கொடுப்பதற்காக புனர்வாழ்வு நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆனால் புதிய சட்டம் இன்னும் சற்று மேம்பட்டதாக இருக்கலாம் என்று கருதுகிறார் மனித கடத்தலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக போராடும் வழக்கறிஞர் அனுஜா கபூர். இந்த சட்டம் சரியான முறையில் அமல்படுத்தப்படவேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

"பாதிக்கப்பட்ட இளைஞர்களின் புனர்வாழ்வுக்காக, சமுதாயத்தின் பெரும்பகுதியினர், முன் வரும்வரை இதுபோன்ற சட்டங்கள் வெறும் ஏட்டு சுரைக்காயாகவே இருந்துவிடும்" என்கிறார் அனுஜா.

படத்தின் காப்புரிமை Getty Images

அனுஜாவின் கருத்துப்படி, "புனர்வாழ்வு என்றால், கடத்தப்பட்ட பெண்ணை மீட்டெடுத்த பிறகு அவரை நமது மகனுக்கு திருமணம் செய்துவைக்கும் தைரியம் பொதுமக்களுக்கு ஏற்படவேண்டும்".

"புனர்வாழ்வு என்பது, பாலியல் தொழிலாளியாக வேலை செய்ய நிர்பந்தப்படுத்தப்பட்ட இளைஞர்களுக்கும், இளைஞிகளிக்கும் நமது வீட்டில் வேலைதர தயாராக இருக்கவேண்டும். நமது பிள்ளைகள் அவர்களை திருமணம் செய்துக்கொள்ள விரும்பினால் அதை இயல்பானதாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் ஏற்படவேண்டும்" என்கிறார் அவர்.

"இந்த நாட்டில் சன்னி லியோனை, சில்க் ஸ்மிதாவையும் இந்த சமூகம் ஏற்றுக்கொள்வதன் அர்த்தம் அவர்கள் ஒரு போகப்பொருளாக பார்க்கப்படுவது என்பதுதான். அவர்கள் திரையில் தோன்றும்போது ஏகபோக வரவேற்பு கொடுப்பவர்கள், அவர்களை தனது குடும்பத்தின் உறுப்பினராக, மகளாக மருமகளாக ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பார்களா?" என்று கேள்வி எழுப்புகிறார் அனுஜா.

பாலியல் தொழிலாளி ஒருவர் திருமணம் செய்துக் கொண்டால் அவரது குடும்பத்தினரின் கண்ணோட்டம் எப்படி இருக்கும் என்று கோடிட்டு காட்டிய 'தனம்' என்ற தமிழ் திரைப்படம் நினைவுக்கு வருவதை தவிர்க்கமுடியவில்லை.

படத்தின் காப்புரிமை Getty Images

மனித கடத்தல் - எவ்வளவு பெரிய குற்றம்

மனித உரிமை மீறல்களில் உலகின் மூன்றாவது பெரிய குற்றமாக மனித கடத்தல் இருப்பதாக மத்திய அரசின் கூறுகிறது.

மத்திய அரசின் தேசிய குற்றப்பதிவு துறையின் புள்ளி விவரங்களின்படி, 2016ஆம் ஆண்டில் மொத்தம் 8132 மனித கடத்தல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன, இது 2015ஆம் ஆண்டில் 6,877 என்ற அளவில் இருந்தது.

மேற்கு வங்க மாநிலத்தில்தான் 2016ஆம் ஆண்டில் அதிக அளவு ஆள் கட்த்தல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அந்த மாநிலம் 3,579 வழக்குகளுடன் முதல் இடத்தையும், ராஜஸ்தான் மாநிலம் 1,422 வழக்குகளுடன் இரண்டாவது இடத்திலும் இருக்கின்றன.

548 வழக்குகளுடன் குஜராத் மூன்றாம் இடத்திலும், 517 வழக்குகள் பதிவான மஹாராஷ்டிரா மாநிலம் நான்காம் இடத்திலும், 434 மனித கடத்தல் வழக்குப் பதிவுகள் செய்யப்பட்ட தமிழ்நாடு ஐந்தாம் இடத்திலும் இடம்பெற்றுள்ளன.

மனித கடத்தலை தடுப்பதற்காக இதுவரை நம் நாட்டில் சட்டங்கள் எதுவும் இருந்ததில்லை.

மாநில அரசு, சுய உதவிக் குழுக்கள் மற்றும் மனித கடத்தல் தொடர்பாக பணியாற்றும் சமூக ஆர்வலர்களின் உதவியுடன் இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசு கூறுகிறது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
பாலியல் தொழிலுக்கு கடத்தப்பட்டு மீண்டு வந்த பெண்ணின் நெகிழ வைக்கும் கதை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: