"விழிப்புணர்வுக்காக பாலூட்டும் படங்களை வெளியிடுவது சரியே"

இந்தியாவில் முதன்முறையாக பத்திரிகை அட்டையில் தாய்ப்பால் ஊட்டும் பெண்ணின் படம் மலையாள பத்திரிகை ஒன்றில் வெளியாகியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

பொது இடங்களில் பெண்கள் தாய்ப்பால் ஊட்டுவதற்கு ஊக்கம் தருமா இந்த முயற்சி? பெரியதாக மாற்றத்தை ஏற்படுத்தாமல் வெறும் விளம்பரமாகவே பார்க்கப்படுமா?

இது பற்றி பிபிசியின் ‘வாதம் விவாதம்‘ பகுதியில் கருத்துக்களைப் பதிவிடும்படி நேயர்களைக் கேட்டிருந்தோம். அவர்கள் வழங்கிய கருத்துக்களை தொகுத்து வழங்குகிறோம்.

கிருஷ்ணகுமார் தங்கராஜ் என்ற நேயர், “தாய் தன் வம்சத்தின் வளர்ச்சிக்கு தன்னுடைய இரத்தத்தை உணவாக தருகிறார். சிலர் தாய்ப்பால் தராமல் இருப்பது உண்மை. இது போன்ற விழிப்புணர்வு தேவை, வளமான எதிர்காலம் உருவாக தாய்ப்பால் நிச்சயம் வேண்டும்" என்று ஃபேஸ்புக்கில் கருத்ததது வெளியிடடுள்ளார்.

சரன் என்பவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ள கருத்தில், மறைத்து ஒதுக்குபுறமாக செய்ய இது ஏதும் குற்றமில்லை. உயிரின இயல்பு, கட்டாயம் முன்னேடுக்கப்படவேண்டிய முயற்சி என்று கூறியுள்ளார்.

சரோஜா பாலசுப்ரமணியன் என்ற நேயர், தாய்மார்களுக்குத் தெரியும் குழந்தைகளுக்கு விரசமில்லாமல் எப்படி பொது இடங்களில் பாலூட்டுவது என்று, இந்த மாதிரி விளம்பரம் தேவை இல்லாத ஒன்று. ஒவ்வொரு பஸ், ரயில் நிலையங்களிலும் பாலூட்ட தனி அறைகளை அரசு கட்டினால் மிகவும் உத்தமம் என்று ஃபேஸ்புக்கில் கருத்து பதிவிட்டுள்ளார்.

முகமது கஸிம் என்பவர் தன்னுடைய ஃபேஸ்புக் பதிவில், அறவே சமூகப் பொறுப்பற்ற ஓர் இழிவான முயற்சி. மனித சமுதாயத்தின் விளைநிலங்களே பெண்கள். சமுதாயம் ஆரோக்கியமாக அமைய வேண்டுமானால் நல்லொழுக்கங்கள் குழந்தைப் பருவத்தில் இருந்தே மக்களுக்கு கற்பிக்கப்பட்டு நடைமுறையோடு பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்கிறார்.

மனோஜ் காலா என்பவர், “இதற்குப் பின் உள்ள அரசியலை எளிதாக கடந்துதான் செல்ல வேண்டும். ஏனெனில் அதற்கும் ஒரு விலை உண்டு" என்று பதிவிட்டுள்ளார்.

அருண் என்பவர் தன்னுடைய டுவிட்டர் பதிவில், சமுகம் முதலில் எது கெட்டது, எது நல்லது என்பதை புரிந்துகொள்ள முன்வரவில்லை. மாற்றம் வேண்டும் என்கிறார்.

புலிவாலாம் பாஷா என்ற நேயர், “தாய்ப்பால் ஊட்டுவதால் குழந்தைகளின் ஊட்டசத்து குறைபாடுகள் ஏற்படாது என்ற சமூக அக்கறைக்காக இது போன்ற விழிப்புணர்வுப் படங்கள் வெளியிடுவது வரவேற்கத்தக்கதே என்று தன்னுடைய ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பணியிடத்தில் தன குழந்தைக்கு பாலூட்டும் தாய்

நல்ல முயற்சி வாழ்த்துக்கள் என்பது கிருஷ்ணன் பழனியின் கருத்தாகும்.

அக்ம் தில்ஷாத் என்ற நேயர், நடுத்தெருவில் என்றாலும் மறைக்கப்பட்டால் நலம் என்ற தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

ரமேஷ் சுப்ரமணி என்ற நேயரோ, மற்ற நாடுகளில் இது போன்ற அட்டை படங்கள் வருவது இயல்பு. இந்தியாவில் வருவது அரிது எனினும் அதன் மையக் கருத்து கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. தாய் பால் தருவதன் அவசியத்தையும் அதைப் பற்றிய புரிதலையும் உண்டாக்கும் எனில் இதில் தவறில்லை. நிச்சயமாக பலனளிக்கும் என்கிறார்.

இந்திய கலாச்சாரம் வேறு என்பது ராமசுப்ரமணியின் டுவிட்டர் பதிவாகும்.

வினோத் குமார், தாய்ப்பால் குடித்து வளர்ந்தவங்களுக்கு இது தவறாக தெரியாது, உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் இது கடவுளால் படைக்கப்பட்ட அடிப்படை வாழ்க்கை முறையாகும் என்று பதிவிட்டுள்ளார்.

பார் கடலைக் கடைந்து தேவர்கள் பெற்ற சாகா அமிர்தம் கூட தன் இரத்தத்தைக் கடைந்து (தாய்) அவள் நமக்கு ஊட்டிய தாய்பாலுக்கு முன்னே மண்டி இட்டு வணங்கும். இதை காமப் பார்வையில் பார்ப்பவன் ஒரு போதும் மனிதனாக இருக்க முடியாது என்று ஷெரீப் கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

தென் கோலேரென் என்பவர், முயற்சி எடுத்திருகிறார்கள் பாராட்டத்தக்கது. ஆனால் மாற்றம் ஏற்படுத்துமா என்பது கேள்விக்குறியே. நிச்சயம் விமர்சனத்திற்கு உள்ளாகும் என்ற கருத்தைப் பதிவிட்டுள்ளார்.

சக்தி சரவணன் என்ற நேயர், தாய்ப்பால் இன்மையால் இறக்கும் பச்சிளங் குழந்தைகளின் இறப்பு விகிதத்தைப் பன்னாட்டு செயற்கைப் பால் பொருட்களுக்கான விளம்பரங்களால் அல்ல, தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு விளம்பரங்களால் மட்டுமே குறைக்க முடியும் என்ற கருத்தைப் பதிவிட்டுள்ளார்.

தாய்மையை கொச்சைப் படுத்துவது போல் உள்ளது... என்பது விஜயகுமார் பாஸ்கரின் கருத்தாகும்.

படத்தின் காப்புரிமை Getty Images

தாய்மையைப் போற்றுவோம். நல்ல முயற்சி, பலன் தரும். விதையில் இருந்துதான் விருட்சம் என்று மாருதி பாலு குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :