கல்லூரிப் பாடமாகும் பெண் எழுத்தாளர்களின் படைப்புகள்

  • 5 மார்ச் 2018

பெண் எழுத்தாளர்களின் படைப்புக்களை மட்டுமே கொண்ட 'பெண்எழுத்து' என்னும் ஒரு தனித் தாளை அறிமுகம் செய்துள்ளது சென்னை ராணி மேரி கல்லூரியின் தமிழ் துறை.

படத்தின் காப்புரிமை Getty Images

பெண்ணியம் என்ற கருத்தியலை பாடமாக கற்பிப்பதைவிட நவீன இலக்கிய வடிவில் தருவதற்காக இந்த முயற்சி என்று சொல்லப்படுகிறது.

பெண் எழுத்தாளர்கள் அம்பையின் 'காட்டில் ஒரு மான்' நாவல், மாலதி மைத்திரியின் கவிதைகள், சுய மரியாதை இயக்கத்தில் இருந்த பெண்களின் வரலாறு போன்றவை தமிழ்த் துறையில் பட்ட மேற்படிப்பு படிப்போருக்கு தயாரிக்கப்பட்டுள்ள, 'பெண்எழுத்து' என்ற பாடத்தில் இடம்பெற்றுள்ளன.

வரும் 2018-19 கல்வியாண்டில் இந்த புதிய தாள் பட்ட மேற்படிப்பில் இணைக்கப்படும் என்று தெரியவந்துள்ளது.

'பெண் எழுத்து' என்ற தனிப் பாடம் கொண்டுவரவேண்டிய தேவை குறித்து விளக்கிய, ராணி மேரி கல்லூரியின் தமிழ்த்துறை இணை பேராசிரியர் பத்மினி, ''பெண்ணியம் என்ற பாடத்தை எளிதில் புரியவைக்க, அதை இலக்கிய வடிவில் தர முடிவு செய்தோம்.

அதிலும் சமீபத்தில் வெளியான பெண் எழுத்தளர்களின் படைப்புக்களைத் தரும்போது, அந்த படைப்புகளில் உள்ள பேசுபொருளை அறிந்துகொண்டு, மாணவிகளும் எழுத முன்வருவார்கள்.

தமிழ் பட்டப்படிப்பு என்றாலே சங்க இலக்கியம், இலக்கணம் படிப்பார்கள் என்ற கற்பிதம் உள்ளது. தற்போதைய எழுத்தாளர்களை அறிந்து கொள்ளவும், எழுதும் பாங்கு, பேசுபொருள் போன்றவற்றை புரிந்துகொள்ள இந்தப் பாடம் ஒரு வாய்ப்பாக அமையும்'' என்றார்.

முன்னர் இருந்த தாளில் வெளிநாடுகளில் பெண்ணிய அமைப்புகள் எவ்வாறு செயல்பட்டன என்ற தரவுகளும், பெண்களுக்கு சம ஊதியம் கேட்டு நடந்த போராட்டங்களை விவரிக்கும் தகவல்களும் இருந்தன என்று பத்மினி கூறினார்.

Image caption பத்மினி, ராணி மேரி கல்லூரியின் தமிழ்த்துறை இணை பேராசிரியர்

இந்தியச் சூழலில், பெண்ணியம் என்றால் என்ன என்ற கேள்வியை எழுப்பி, விடை தருவதற்கு, புதிய தாளில் உள்ள இலக்கியங்கள் வித்திடும் என்று நம்புவதாக பத்திமினி கூறினார்.

ராணி மேரி கல்லூரியின் முயற்சி பாராட்டுக்கு உரியது என்று இலக்கிய பாடத்திட்டத்தில் (literature curriculum) ஆய்வு செய்துள்ள பேராசிரியர் மற்றும் எழுத்தாளர் மங்கை, பிபிசி தமிழிடம் கூறினார்.

''வெளிநாடுகளில் தோன்றிய பெண்ணிய இயக்கங்களின் வரலாறுகளை தெரிந்துகொள்வது முக்கியம்தான். இருந்தாலும், சமகால பொருத்தப்பாடு உள்ள இலக்கியப் பாடத்தை நம் மாணவிகளுக்கு அறிமுகப்படுத்துவது சிறந்த தொடக்கம்.

ஆங்கில இலக்கிய பட்டப்படிப்பில் பெண்களின் படைப்புகள், தனிப் பாடமாக பல காலமாகவே இருந்துவருகின்றன

தமிழ்த் துறையில் பெண் எழுத்தாளர்களின் படைப்புகளை ஒருங்கிணைத்து ஒரு தாளாக கொண்டுவருவது தற்போது தேவையான நடவடிக்கை.

பெண்ணியம் தொடர்பாக இளையதலைமுறையினர் உரையாடுவதை இந்த முயற்சி ஊக்குவிக்கும்,'' என்று கூறினார் பேராசிரியர் மங்கை.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :