காவிரி - தமிழக பிரதிநிதிகளை சந்திக்க மறுக்கிறார் மோதி: ஸ்டாலின் குற்றச்சாட்டு

காவிரி மேலாண்மைகுழு அமைப்பது தொடர்பாக தமிழகத்தின் அனைத்துக் கட்சி குழுவை சந்திக்க பிரதமர் மோதி நேரம் தரமறுப்பதாகவும், நதிநீர் துறை அமைச்சர் சந்திக்குமாறு கூறினார் என தமிழக முதல்வர் தன்னிடம் கூறியதாக சட்டமன்ற எதிர்க்கட்சிதலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

படத்தின் காப்புரிமை STR

காவிரி நதிநீர் பங்கீட்டை உறுதிசெய்ய உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, மேலாண்மை குழு அமைப்பது தொடர்பாக தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற அனைத்துக்கட்சிக் கூட்டத்தின் முடிவில், செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ''காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி குழுவைச் பிரதமர் சந்திக்க மறுப்பது அவமானம். அனைத்துக்கட்சி குழுவை சந்திக்க பிரதமர் மறுக்கிறார் என முதல்வர் என்னிடம் கூறினார். முதல்வர் மற்றும் துணை முதல்வரை தனித்தனியாக சந்திக்கும் பிரதமர், ஏன் அனைத்துக் கட்சிகுழுவை சந்திக்க மறுக்கிறார்?,'' என கேள்வி எழுப்பினார். 

மேலும், காவிரி மேலாண்மை குழுவை அமைக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தரவேண்டும் என்று திமுக கோரியதாக தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Tndipr.gov.in

''திங்கள் கிழமை(மார்ச் 5) பிரதமரைச் சந்திப்பது குறித்து எந்த தகவலும் வரவில்லை என்றால், வியாழக்கிழமை (மார்ச்8) சட்டமன்றம் கூட்டப்படும் என்று முதல்வர் உறுதி அளித்துள்ளார்,'' என்றும் ஸ்டாலின் தெரிவித்தார். 

அனைத்துக்கட்சி குழுவை சந்திக்க பிரதமர் மறுக்கிறார் என முதல்வர் கூறியதாக ஸ்டாலின் தெரிவித்துள்ள தகவல் தவறானது என்றும் முதலில் துறை சார்ந்த அமைச்சரைச் சந்தித்து பிறகு தன்னை சந்திக்கலாம் என்று பிரதமர் கூறியிருந்தார் என்று அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். 

''முதலில் துறை சார்ந்த அமைச்சரை சந்தித்துவிட்டு பிரதமரை சந்திக்கலாம் என்றுதான் எங்களுக்கு கூறப்பட்டது. பிரதமர் சந்திக்க மறுத்துவிட்டார் என்று சொல்வது தவறானது. திங்கள் கிழமை நல்ல தகவல் வரும் என்று எதிர்பார்க்கிறோம்,'' என்றார் ஜெயக்குமார். 

கடந்த பிப்ரவரி 16ம் தேதி அன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் ஆறு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை குழு அமைக்கப்படவேண்டும் என்று கூறியிருந்தது. 

ஆனால் இந்த குழுவை அமைப்பதில் தாமதம் இருப்பதாகவும், குழுவை அமைக்க தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்தவேண்டும் என தமிழக எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன. 

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்