திரிபுராவில் மாணிக் சர்க்காரை மண்ணைக் கவ்வ வைத்த மராட்டியர்

திரிபுராவில் மாணிக் சர்க்காரை மண்ணைக் கவ்வ வைத்த மராட்டியர்

படத்தின் காப்புரிமை Sunil Deodhar/Twitter
Image caption மாராட்டியரான சுனில் தேவ்தர் திரிபுராவில் பாஜகாவை வலுப்படுத்தியவர்களில் முக்கியமானவர்

எந்தவொரு தேர்தலிலும் வெற்றிக்கு வித்திடுபவர் தனிநபராக இருக்கமுடியாது என்பது நிதர்சனம். கட்சி கட்டமைப்பு, தேர்தல் பிரசாரம், தொண்டர் பலம் மற்றும் வலிமை என பல்வேறு காரணிகளே தேர்தலின் வெற்றியை நிர்ணயிக்கிறது.

ஆனால், வெற்றிக்கு பாடுபட்டவர்களில் சிலரின் பங்களிப்பு முக்கியமனது என்று சொல்லப்படும். அதிலும் பாரதிய ஜனதா கட்சியைப் பொருத்தவரையில் அமித்ஷா, நரேந்திர மோதி இருவரின் பங்களிப்பும் முக்கியமானது என்பது பரவலாக அனைவரும் அறிந்ததே.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் ஒரு தொகுதியில்கூட வெற்றிபெறாத பாஜக, அங்கு ஒரு பொருட்டாகக்கூட கருதப்படவில்லை. ஆனால் தற்போது வெளியாகும் திரிபுரா சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் ஏற்பட்டுள்ள வியத்தகு மாற்றம் அரசியல் ஆய்வாளர்களுக்கே திகைப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சுனில் தேவ்தர் என்ற மராட்டியர், வடகிழக்கு மாநில தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சியின் வெற்றிக்கு வித்திட்டவர்களில் முக்கியமானவர். இவர் எந்த தேர்தலிலும் போட்டியிட்டதில்லை என்பதும், இவரின் பெயர் இதுவரை செய்திகளில் அடிபட்டதில்லை என்பதும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

படத்தின் காப்புரிமை EPA

ஆனால் திரிபுராவில் 25ஆண்டுகளாக கோலோச்சி வந்த இடதுசாரி அரசிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியதில் சுனில் தேவ்தரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

கடந்த 25 ஆண்டுகளாக திரிபுராவில் ஆட்சியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி முன்னணிக்கு இது மிகப் பெரும் பின்னடைவு. மார்க்சிஸ்ட் கட்சியின் முதல்வர் மாணிக் சர்க்கார் எளிமைக்கு பெயர் பெற்றவர். 2003 முதல் நான்காவது முறையாக தொடர்ந்து முதலமைச்சராக பதவி வகித்தார் மாணிக் சர்க்கார்.

இப்படி வலுவான நிலையில் இருந்த இடதுசாரிகளுக்கு எதிராக பாஜக தலையெடுக்குமா என்பதே கேள்விக்குறியாக இருந்த நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் முடிவுகளின் பின்னணியில் இருப்பவர் சுனில் தேவ்தர்.

சரி யார் இந்த சுனில் தேவ்ர்?

  • 52 வயதான இவர் திருமணம் செய்துக்கொள்ளவில்லை
  • கொங்கன் பகுதியை சேர்ந்த குஹாகர் பகுதியை சேர்ந்தவர்.
  • மும்பை அந்தேரியில் இவரது வீடு இருக்கிறது.
  • இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் 21 ஆண்டுகளாக வசிக்கிறார்.
  • சமூக ஊடகங்களில் மிகவும் ஆர்வமாக செயல்படும் இவர், ஃபேஸ்புக்கில் சுயமாக ஆக்கங்களை உருவாக்கி, அதை தானே பணம் செலவு செய்து பலருடன் பகிர்ந்து கொள்கிறார்.
படத்தின் காப்புரிமை Getty Images

இந்த மாற்றம் மேகாலயாவில், திரிபுராவில் மட்டுமல்ல, அனைத்து வடகிழக்கு மாநிலங்களிலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பிரசாரம் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அமித்ஷா கட்சியின் தலைமை பொறுப்புக்கு வந்தபின், அவர் சுனில் தேவ்தரை மகாராஷ்டிராவில் இருந்து வாரணாசிக்கு அனுப்பினார். வாரணாசி நாடாளுமன்றத் தொகுதியில் நரேந்திர மோதிக்காக அவர் தேர்தல் பணியாற்றினார்.

வடகிழக்கு இந்தியாவிற்கு சென்ற ஆர்.எஸ்.எஸ் ஆர்வலர் சுனில் தேவ்தர், நாளடைவில் உள்ளூர் மொழிகளை கற்றுக்கொண்டார். மேகாலயாவின் காசி மற்றும் காரோ பழங்குடியின மக்களிடம் அவர்களுடைய பிரத்யேக பழங்குடி மொழியில் பேசி அவர்களை ஆச்சரியப்படுத்தினார். அதேபோல், அவர் வங்காள மொழியை மட்டுமல்ல, வடகிழக்கில் புழக்கத்தில் உள்ள பல்வேறு உள்ளூர் மொழிகளையும் பேசுகிறார்.

திரிபுராவில் இடதுசாரி, காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளில் பிளவு ஏற்படுத்தும் பணியை அவர் வெற்றிகரமாக செய்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. சட்டசபை தேர்தலுக்கு சற்று முன்பு, இந்த கட்சிகளின் பல தலைவர்களும், எம்.எல்.ஏ.க்களும் பாஜக உடன் இணைந்தனர்.

கீழ்நிலைத் தொண்டர்களின் தேவையை உணர்ந்த சுனில் தேவ்தர், அவர்களை தேடிக் கண்டுபிடித்து, கட்சியில் இணைத்தது அவருடைய வலுவான முயற்சியாகும்.

சுனில் தேவ்தரிடம் பிபிசி பேசியபோது, 'கட்சியை அடித்தளத்தில் இருந்து பலப்படுத்தியதாகவும், திரிபுராவில் இடதுசாரிக் கட்சிகளுக்கு சவால் விடுக்கும் விதமாக தங்கள் கட்சியின் அமைப்பை உருவாக்கியிருப்பதாகவும்' அவர் கூறினார்.

'பிற மாநிலங்களில் காங்கிரஸின் நிலை எப்படியிருக்கிறதோ அதேபோலத்தான் திரிபுராவிலும் இருக்கிறது. இங்கு இடதுசாரிகளுக்கு ஒரே எதிரி காங்கிரஸ் என்ற நிலைமைதான் இருந்தது, காங்கிரஸின் சிறந்த தலைவர்கள் இங்கு இருந்தார்கள்' என்கிறார் சுனில் தேவ்தர்.

வடகிழக்கு மாநிலங்களில், பல காங்கிரஸ் தலைவர்களை தான் சந்தித்ததாக கூறும் சுனில், கட்சி மேலிடத்தின் போக்கு பற்றி அதிருப்தியில் இருக்கும் தலைவர்கள் கட்சியில் இருந்து வெளியேறும் மனநிலையில் இருந்ததாக கூறுகிறார்.

அதிருப்தி தலைவர்களை பாஜக கட்சியில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டார் சுனில். பிற்கு கட்சியின் மீது சினத்துடன் சீற்றத்துடன் இருந்த மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களையும், தொண்டர்களையும் தனது கட்சியில் உரிய மரியாதையுடன் சேர்க்கும் முயற்சியிலும் சுனிவ் தேவ்தர் வெற்றிபெற்றார்.

இந்த வெற்றிகள், வடகிழக்கு மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு சிறப்பான தளத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறது.

வடகிழக்கு மாநிலங்களின் அரசியலை கூர்ந்து அனுமானித்துவரும் மூத்த பத்திரிகையாளர் சந்தீப் ஃபுகன் பிபிசியிடம் கூறும்போது, 'கடந்த ஐந்து ஆண்டுகளாக சுனில் தேவ்தரின் கடுமையான முயற்சியும் உழைப்பும் பாஜகவுக்கு வெற்றியை தேடிக் கொடுத்திருக்கிறது என்றால் அது மிகையல்ல' என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: