பா.ஜ.க வெற்றியை புரிந்துகொள்ள 3 எளிய கேள்வி பதில்!

  • 4 மார்ச் 2018

கடந்த தேர்தலில், திரிபுராவில் 49 தொகுதிகளில் டெபாசிட் இழந்த ஒரு கட்சிக்கு எப்படி இப்போது இந்த வெற்றி சாத்தியமானது? எது தவறாக போனது இடது முன்னணிக்கு? எதுவெல்லாம் சரியாக அமைந்தது பாரதிய ஜனதா கட்சிக்கு?

படத்தின் காப்புரிமை TWITTER @NARENDRAMODI

இவை அனைத்தையும் எளிய கேள்வி, பதில்கள் வடிவத்தில் பார்ப்போம்.

எது தவறாக போனது இடது முன்னணிக்கு?

ஏறத்தாழ எல்லாம் சரியாக சென்றுக் கொண்டிருந்த ஒரு ஆட்சிக்கு எது தவறாக சென்றது. இந்தியாவின் சிறந்த முதல்வர்களில் ஒருவர் என பெயரெடுத்தவர் மாணிக் சர்க்கார். இந்தியாவின் ஏழை முதல்வரும் கூட. மின் உற்பத்தியில் தன்னிறைவு, இந்திய அளவில் ரப்பர் உற்பத்தியில் இரண்டாவது இடம், ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்ட சர்ச்சைகள் இல்லை, கிளர்ச்சி முழுமையாக ஒடுக்கப்பட்டுவிட்டது,சிறந்த மனிதவள குறியீடு உள்ள மாநிலம், 300-க்கும் மேற்பட்ட பொருளாதார மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

பின் எது தவறாக சென்றது… எது தோல்வியை கொண்டு வந்தது?

25 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் எக்கட்சிக்கும், வாக்காளர்களை ஈர்ப்பது, அவர்களது மனங்களை வென்றெடுப்பது கஷ்டம்தான். அதுமட்டுமல்ல, எல்லோரும் வெல்லும் பக்கம்தான் இருக்க விரும்புகிறார்கள். இங்கு வெல்லும் என்பதை ஆட்சியில், அதாவது மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சி என்ற பொருளில் புரிந்துக் கொள்ள வேண்டும்.

மாணிக் சர்க்கார் வாக்களர்களின் மனதை புரிந்துக் கொள்ளாததும் முக்கிய காரணம். வேலைவாய்ப்புகளை உண்டாக்குவதில் தாம் தோல்வி அடைந்ததை அவர் ஒப்புக் கொண்டார். படித்தவர்கள் அதிகம் உள்ள இம்மாநிலத்தில், நகரப் பகுதிகளில் மட்டும் வேலைவாய்ப்பின்மை 17 சதவீதம் என்ற அளவில் இருக்கிறது. ஏழாவது ஊதிய குழுவும் இங்கு அமல்படுத்தப்படவில்லை. இடதுசாரி தொண்டர்களும் வேண்டியவர்களுக்கு மட்டும் சலுகை அளிப்பவராக இருந்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. வங்காளிகளுக்கும், இங்குள்ள பழங்குடி மக்களுக்கும் உள்ள முரண்பாடு இன்னும் தீர்க்கப்படாமல் இருப்பது ஒரு முக்கிய காரணம்.

பா.ஜ.கவிற்கு எது வெற்றியை கொண்டு வந்தது?

கடந்த இரண்டு வருடங்களாக கட்சியை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் மிகவும் தீவிரமாக இருந்தது பா.ஜ.க. இடதுசாரிகளை தோற்கடிக்க வேண்டுமென்றால், திரிபுராவில் மிகப்பெரிய தொண்டர் படை உண்டாக்க வேண்டும் என்று அறிந்து இருந்தது அக்கட்சி. இதற்காக அக்கட்சி ஏறத்தாழ 50 ஆயிரம் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களை பயன்படுத்தியது.

படத்தின் காப்புரிமை Dilip Sharma/BBC
Image caption திரிபுராவில் பாஜகவினர் வெற்றிக் கொண்டாட்டம்...

தனித்துவமான நடைமுறைகள் வடிவமைக்கப்பட்டன. பிரமிட் வடிவத்தில் ஓர் ஐந்தடுக்கு அமைப்பு உருவாக்கப்பட்டது.

இவர்கள் மக்களை நேரடியாக சந்தித்து, அவர்களுடன் உரையாடினார்கள். பெண்கள், இளைஞர்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடிகள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என மூன்று விதமான குழுக்களை உண்டாக்கியது.

அறுபது வாக்காளர்களுக்கு ஒருவர் என்ற அளவில் பணிசெய்தனர். ரயில்களில் பயணம் செய்து சகபயணிகளுக்கான தேவைகளை குறிப்பெடுத்துக் கொண்டனர். அதனை தமக்கு மேலே உள்ள அமைப்புகளுக்கு கூறினர். இப்படியான உழைப்பும், செயல்பாடும்தான் பா.ஜ.க-விற்கு இந்த வெற்றியை கொண்டு வந்து தந்திருக்கிறது.

இந்த வெற்றி தேசிய அரசியல் ஆதிக்கம் செலுத்துமா?

இன்னும் இரண்டு மாதங்களில் கர்நாடகா தேர்தலை சந்திக்க இருக்கிறது. அடுத்ததாக ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்திய பிரதேச பா.ஜ.கவின் மோடி மேஜிக்கிற்கு சவால் கொடுக்க காத்திருக்கிறது. இந்த வெற்றி அம்மாநில தேர்தலில் பா.ஜ.க விற்கு உதவி செய்ய வாய்ப்பிருக்கிறது.

இந்த பார்வைக்கெல்லாம் அப்பால், இந்த வெற்றியிலிருந்து எதிர்கட்சிகள் கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு பாடம் இருக்கிறது. ஒரு தொகுதியைக் கூட பா.ஜ.க விட்டுக் கொடுக்காது என்பதுதான் அது. அவர்களின் கனவான, `காங்கிரஸ் இல்லாத பாரதம்` மெல்ல நிஜமாகி வருவது போலதான் தெரிகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்