நாளிதழ்களில் இன்று: 'நாகாலாந்தில் கூட்டணி ஆட்சிக்கு பா.ஜ.க முயற்சி`

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வந்த செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

இன்று அனைத்து முக்கிய நாளிதழ்களிலும் பாரதிய ஜனதா கட்சி திரிபுராவை கைப்பற்றிய செய்திதான் பிரதானமாக இடம்பிடித்துள்ளது.

தினத்தந்தி - 'நாகாலாந்தில் கூட்டணி ஆட்சிக்கு பா.ஜ.க முயற்சி`

திரிபுராவில் ஆட்சியை பிடித்துள்ள பாரதிய ஜனதா, நாகாலாந்தில் கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சி செய்து வருகிறது. மேகாலயாவில் தொங்கு சட்ட சபை ஏற்பட்டு உள்ளது. அங்கு காங்கிரஸ் ஆட்சி அமைக்க முயற்சிக்கிறது என்று செய்தி வெளியிட்டுள்ளது தினத்தந்தி நாளிதழ். "நாகாலாந்தில் (போட்டியின்றி வெற்றி பெற்றவரையும் சேர்த்து) மொத்தம் உள்ள 60 இடங்களில் ஆளும் நாகா மக்கள் முன்னணிக்கு 27 இடங்களும், பா.ஜ.க வுக்கு 12 இடங்களும், கிடைத்துள்ளன. அங்கு எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் தொங்கு சட்டசபை ஏற்பட்டு உள்ளது. அதிக இடங்களில் வெற்றி பெற்ற நாகா மக்கள் முன்னணி பா.ஜ.கவுடன் இணைந்து ஆட்சி அமைக்க விருப்பம் தெரிவித்து உள்ளது" என்று அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.

தினமணி - 'தினகரன் ஆதரவாளர்கள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு'

ராமநாதபுரத்தில் டி.டி.வி தினகரன் ஆதரவாளர்கள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது தினமணி நாளிதழ். "அமைச்சர் மு. மணிகண்டனின் தூண்டுதலால் இச்சம்பவம் நடந்ததாக கூறிய தினகரன் ஆதரவாளர்கள், அவர் மீது நடவடிக்கை கோரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்" என்று விவரிக்கிறது அந்த செய்தி. தனது ஆதரவாளர்கள் வீடு மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் தினகரன்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா - `மீனாட்சி அம்மன் கோயிலில் மொபைல் போன் பயன்படுத்த தடை`

படத்தின் காப்புரிமை DIBYANGSHU SARKAR/Getty Images
Image caption மீனாட்சியம்மன் கோயில்

மீனாட்சி அம்மன் கோயிலுக்கு மொபைல் போன் எடுத்துச் செல்ல விதிக்கப்பட்ட தடை சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்ததாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக பக்தர்கள் விரக்தி அடைந்ததாக கூறும் அச்செய்தி, நான்கு மணி நேரம் மொபைல் போனை பாதுகாப்பாக வைக்க லாக்கர் கட்டணமாக 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - `நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜிநாமா செய்ய வேண்டும்`

படத்தின் காப்புரிமை Tndipr.gov.in

பிரதமர் காவிரி பிரச்சனையில் தலையிட மறுத்தால் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தப் பின் ஸ்டாலின் கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்