பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கங்கள் அதிகமாக இருக்கும்போது என்ன செய்ய வேண்டும்?

பங்குச் சந்தை படத்தின் காப்புரிமை Getty Images

பங்குச் சந்தை நிலவரம் அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும். சில நேரங்களில் கை கொடுக்கும், சில நேரங்களில் காலையும் வாரிவிடும். மேல் கீழ் என்று மாறிக்கொண்டே இருக்கும்.

கடந்த சில நாட்களில் சர்வேத அளவில் பங்குச் சந்தைகள் ஆட்டம் கண்டன. அமெரிக்க பங்குச் சந்தை, ஐரோப்பா மற்றும் ஆசியாவின் பங்குச் சந்தைகள் வீழ்ச்சி கண்டன. அமெரிக்க பங்குச் சந்தையோ கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவைக் கண்டது.

பங்குச் சந்தையில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டால் என்ன செய்வது?

கடந்த சில நாட்களில் பங்குச் சந்தை சரிந்தது ஏன்? அதற்கு ஒன்றில்லை இரண்டில்லை பல்வேறு காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

பங்குச் சந்தையின் ஊசலாட்டத்திற்கான காரணங்களையும் பங்குச்சந்தை நிலை தடுமாறும்போது என்ன செய்யலாம் என்பதையும் இந்த கட்டுரை வாயிலாக தெரிந்துகொள்வோம்.

படத்தின் காப்புரிமை Getty Images

நியூயார்க் பங்குச் சந்தையான டாவ் ஜோன்ஸ், ஒரு வருடத்தில் கண்ட ஏற்றம், ஒரே நாளில் அதல பாதாளத்தில் வீழ்ந்தது. அமெரிக்காவுக்கு இது எவ்வளவு பெரிய அதிர்ச்சியை கொடுத்தது தெரியுமா?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் உரையை ஒளிபரப்பிக் கொண்டிருந்த தொலைக்காட்சி சேனல்கள், அதை அப்படியே விட்டுவிட்டு, பங்குச்சந்தை வீழ்ச்சி தொடர்பான தகவல்களை ஒளிபரப்ப ஆரம்பித்தன.

பங்குச் சந்தை என்றால் என்ன?

பங்குச் சந்தை என்பது, பங்குகள் (shares), கடன் பத்திரங்கள் (debentures), பரஸ்பர நிதி (Mutual Funds), Derivatives மற்றும் பிற பத்திரங்கள்(Securities) வாங்க, விற்கப்படும் இடம்.

பங்குச் சந்தையில் `ஷேர்` என்றால், `நிறுவனங்களில் பங்கு` என்று புரிந்துகொள்ளலாம். ஒரு நிறுவனத்தின் ஒரு ஷேரை வாங்கினால்கூட, நீங்களும் அந்த நிறுவனத்தின் பங்குதாரர் தான்! உங்கள் ஷேரை எப்போது வேண்டுமானாலும் ஸ்டாக் மார்க்கெட்டில் விற்கலாம்.

பத்திர ஈட்டுத்தொகையில் ஏற்றம் (Bounce in Bond Yield):

ஏற்ற இறக்கம் ஏற்படுவது சகஜம் என்றாலும் சமீபத்தில் ஏற்பட்ட இந்த மிகப்பெரிய ஏற்றத்திற்கு என்ன காரணம்?

முதலில் பத்திர ஈட்டுத்தொகை ஏற்றம் என்றால் லாபம் அதிகரித்திருக்கிறது என்று பொருள். பத்திரம் என்பது ஒரு நிலையான வருமானத்திற்கான முதலீடு; இதில் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு நிறுவனம் அல்லது அரசாங்கத்திற்கு முதலீட்டாளர் கடன் கொடுக்கிறார்.

உண்மையில், 2008ஆம் ஆண்டு நிதி நெருக்கடிக்குப் பிறகு, உலகம் முழுவதும் இருக்கின்ற மத்திய வங்கிகள், பங்குச் சந்தைகளை ஊக்கப்படுத்த பலவிதத்தில் உதவியதோடு, வட்டி விகிதங்களையும் குறைத்துவிட்டன.

படத்தின் காப்புரிமை AFP
Image caption வட்டி விகிதத்தை குறைத்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு

இதன் விளைவு என்ன ஆயிற்று தெரியுமா? மக்கள் அரசு பத்திரங்களில் இருந்த பணத்தை எடுத்து, பங்குச்சந்தைகளில் முதலீடு செய்யத் தொடங்கினார்கள்.

ஆனால் இப்போது விலைவாசி அதிகரிக்கும் என்கிற பயம் ஒருபுறம் இருக்க, உலகின் பெரும்பாலான நாடுகளின் மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை அதிகரிக்கலாம் என்ற அறிகுறிகளும் தென்படுகிறது.

இதனால், பங்குகளில் செய்யப்பட்டிருந்த முதலீடுகளை எடுக்கும் பலர், மீண்டும் பத்திரங்களில் முதலீடு செய்யத் தொடங்கிவிட்டார்கள்.

விலைவாசி உயர்வு:

படத்தின் காப்புரிமை AFP
Image caption ஆர்.பி.ஐ போன்ற வங்கிகள், விலைவாசியை கட்டுப்படுத்த வட்டி விகிதங்களை அதிகரிப்பது என்ற ஆயுதத்தை பயன்படுத்துகிறார்கள்.

உலகிலுள்ள பெரும்பாலான மத்திய வங்கிகள் (இந்தியாவில் ஆர்.பி.ஐ போன்று) விலைவாசியை கட்டுப்படுத்த வட்டி விகிதங்களை அதிகரிப்பது என்ற ஆயுதத்தை பயன்படுத்துகிறார்கள்.

வட்டி விகிதம் அதிகரித்தால், கடனுக்கான வட்டியும் அதிகரிக்கும், இது நிறுவனங்கள் வாங்கும் கடனுக்கான வட்டியையும் கணிசமாக அதிகரித்துவிடும்.

வாகனம், வீடு வாங்குவதற்கு கடன் வாங்கினால் அதிக வட்டி கொடுக்க வேண்டியிருக்கும்.

நீண்ட கால மூலதன ஆதாய வரி:

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption நீண்ட கால மூலதன ஆதாய வரி விதிக்கப்போவதாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி பட்ஜெட்டில் அறிவித்தார்.

நீண்ட கால மூலதன ஆதாய வரி விதிக்கப்போவதாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி பட்ஜெட்டில் அறிவித்தார். ஓராண்டுக்கு அதிகமான வைப்பு மற்றும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வட்டி வருவாய்க்கு 10 சதவிகித வரி விதிக்கப்படும். இந்த முடிவு வெளிநாட்டில் இருந்து வரும் பெரிய அளவிலான முதலீடுகளுக்கும் பின்னடைவாக இருக்கும்.

சர்வதேச அழுத்தம்:

''தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்துல் நெறிகட்டும்'' என்ற பழமொழியைப்போல, அமெரிக்க பங்குச் சந்தை படுத்தால், இந்திய பங்குச் சந்தையும் தடுமாறுகிறது.

பெரும்பாலான வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவை என்பதே இதற்கு காரணம். மேலும் அதிக வருவாய் வேண்டும் என்பதால் அவர்கள் இந்தியாவில் முதலீடு செய்கிறார்கள்.

ஆனால் அவர்கள் நாட்டில் இப்போது நிலைமை மேம்படுவதால், அதாவது அங்கு வட்டி விகிதம் அதிகரிப்பதால், இந்திய பங்குச் சந்தையில் இருந்து முதலீட்டை மீண்டும் எடுத்துவிடுகிறார்கள்.

வாராக் கடன்:

NPA, அதாவது வாராக்கடன் என்பது வங்கிகளுக்கு மிகப்பெரிய தலைவலி. நாட்டின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவுக்கு இறுதி காலாண்டில் 2,416 கோடி ரூபாய் வாராக்கடனால் நஷ்டம் ஏற்பட்டது. வாராக்கடன் வங்கிகளுக்கும் நல்லதல்ல, முதலீட்டாளர்களுக்கும் நல்லதல்ல.

இப்போது, பாதை கரடுமுரடாக இருக்கிறது. அதனால் எடுத்து வைக்கும் அடியை அளந்து வையுங்கள், கவனமாக வையுங்கள்.

பங்குச் சந்தையில் ஊசலாட்டம் இருந்தால், நீங்கள் என்ன செய்ய முடியும்?:

பங்குச் சந்தையின் நிலையற்ற தன்மையும் நிலையானதல்ல, அதன் வீழ்ச்சியும் நிலையானது அல்ல; ஷேர் மீண்டும் உங்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கும் என்றும் சொல்ல முடியாது.

சந்தையில் ஏற்ற இறக்கங்கள் அதிகமாக இருக்கும்போது, உங்கள் நிதித் திட்டங்களை மறுபரிசீலனை செய்யுங்கள்.

EMI-க்காக அதிக பணம் செலுத்த வேண்டியிருந்தால், உயரும் வட்டி விகிதங்களின் தாக்கம் அதில் ஏற்படுத்தும் மாற்றங்கள் என்ன என்பதை கவனமாக பார்க்கவும்.

குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே கடனை திரும்பச் செலுத்துவது பற்றி ஒரு முறை யோசிக்கலாம்.

பல்வேறு வகையான முதலீடுகள்:

உங்கள் portfolioவை மீண்டும் ஆராயுங்கள். அதாவது முதலீடுகளை ஒரே விதமாக அல்லாமல் பல்வேறு வகை முதலீடுகளாக செய்யலாம்.

சந்தையின் ஏற்ற இறக்கங்கள் மற்றும் வீழ்ச்சி பற்றிய தகவல்களை கேட்டு, அச்சத்தால் உடனடியாக பணத்தை திரும்ப எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

படத்தின் காப்புரிமை AFP
Image caption முதலீடுகளை ஒரே விதமாக அல்லாமல் பல்வேறு வகை முதலீடுகளாக செய்யலாம்.

''பதறிய காரியம் சிதறிவிடும்'' என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். பங்குச் சந்தை நிலைகுலையும்போது, ஒரு நல்ல நிதித்திட்டம் மற்றும் முதலீடு பற்றிய ஆய்வு உங்களுக்கு உதவும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :