லெனின் சிலையை இடித்து அதன் தலையை வைத்து கால்பந்தாடிய பாஜகவினர்

  • 6 மார்ச் 2018
லெனின் சிலையை இடித்து அவரது தலையை வைத்து கால்பந்தாடிய பாஜகவினர்

திரிபுராவில் சமீபத்தில் நடைபெற்ற மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், மாநிலத்தில் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் வெடித்துள்ளன. இதன் உச்சக்கட்டமாக, கம்யூனிஸ்ட் தலைவர் லெனின் சிலை ஜேசிபி கொண்டு இடிக்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு திரிபுரா மாநிலத்திலுள்ள பெலோனியா என்ற நகரில், கல்லூரி ஒன்றுக்கு மத்தியில் கம்யூனிஸ்ட் தலைவர் லெனின் முழு உருவ சிலை ஒன்று அமைந்துள்ளது. 2013ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல்களில் இடதுசாரிகள் வெற்றி பெற்றதையடுத்து இந்த சிலை நிறுவப்பட்டதாக கூறப்படுகிறது.

இடதுசாரிகளின் தேர்தல் வெற்றியை குறிக்கும் லெனின் சிலையைதான் பாஜகவினர் இடித்து தள்ளியுள்ளனர். நேற்றைய தினம் (திங்கட்கிழமை) சுமார் மதியம் 2.30 மணிக்கு அந்த பகுதிக்கு ஜேசிபி இயந்திரம் ஒன்று கொண்டுவரப்பட்டு, ’பாரத் மாதா கீ ஜே’ என்ற கோஷத்திற்கு இடையே லெனின் சிலை இடித்து தள்ளப்பட்டது.

இந்த சம்பவம் நடப்பதற்கு இரு தினங்களுக்கு முன்புதான் திரிபுரா மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. அதில், 25 ஆண்டுகளாக திரிபுராவில் அசைக்க முடியாத கட்சியாக விளங்கிய இடதுசாரிகள், மத்தியில் ஆளும் பாஜாகவிடம் தோற்றுப்போனது.

மொத்தம் உள்ள 61 தொகுதிகளில் கம்யூனிஸ்ட் வெறும் 16 தொகுதிகளையும், பாஜக கூட்டணி 43 தொகுதிகளையும் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 48 மணி நேரத்தில், திரிபுரா மாநிலத்தில் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

இந்த சிலை எப்போது செய்யப்பட்டது?

2013 சட்டப்பேரவை தேர்தலில் சிபிஎம் 60 தொகுதிகளில் 49 தொகுதிகளை கைப்பற்றி பிரம்மாண்ட வெற்றிபெற்றது. அதனை குறிக்கும் வகையில், 3 லட்ச ரூபாய் செலவில் உள்ளூர் சிற்பக் கலைஞர் கிருஷ்ணா தேப்நாத் லெனின் சிலையை வடிவமைத்தார். 11.5 அடி உயரம் கொண்ட இந்த சிலை ஃபைபர் கிளாஸால் செய்யப்பட்டது என்று ’தி இந்தியன் எக்ஸ்பிரஸின்’ செய்தி கூறுகிறது.

இடிக்கப்பட்ட சிலையிலிருந்து தலை துண்டாக விழுந்ததாகவும், அதை பாஜக தொண்டர்கள் காலால் எட்டி உதைத்து கால்பந்து விளையாடியதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியதாக சிபிஎம் கட்சியின் பெலோனியா நகர செயலாளர் தபாஸ் டட்டா ’தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம்’ தெரிவித்துள்ளார்.

லெனின் சிலை இடிப்பு காணொளி சமூக ஊடகங்களில் வேகமாக பரவிவரும் நிலையில், பலரும் இதற்கு கடும் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா, லெனின் யார் அவருக்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்றும், நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈவே ராமசாமி சிலை இடிக்கப்படும் என்றும் ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :