"ஹெச்.ராஜாவை கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும்"

திரிபுராவில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கப்பட்டதையடுத்து, அங்குள்ள லெனின் சிலை ஒன்று அகற்றப்பட்ட நிலையில், நாளை தமிழகத்தில் ஈ.வே. ராமசாமியின் சிலையும் அகற்றப்படும் என்ற பா.ஜ.க. தேசியச் செயலர் ஹெச். ராஜாவின் கருத்துக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில், ஹெச். ராஜா தன் பதிவை ஃபேஸ்புக்கிலிருந்து நீக்கியுள்ளார்.

படத்தின் காப்புரிமை HRAJABJP

பா.ஜ.கவின் தேசியச் செயலர் ஹெச். ராஜா இன்று காலையில் ஃபேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

அதில், திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்ட வீடியோ காட்சியை வெளியிட்டிருந்த எச். ராஜா, "லெனின் யார், அவருக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு, கம்யூனிசத்திற்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு, லெனின் சிலை உடைக்கப்பட்டது திரிபுராவில், இன்று திரிபுராவில் லெனின் சிலை, நாளை தமிழகத்தில் ஜாதி வெறியர் ஈ.வெ. ராமசாமி சிலை" என்று கூறியிருந்தார்.

அவரது ஃபேஸ்புக் பக்கத்திலேயே இதற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்திருந்த நிலையில், அரசியல் கட்சித் தலைவர்களும் இதற்குக் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

" ஹெச்.ராஜா குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்"

ராஜாவின் இந்தப் பேச்சு குறித்து கருத்துத் தெரிவித்துள்ள தி.மு.கவின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், "ஹெச். ராஜா எப்போதுமே வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிவருகிறார். அவரைக் கைது செய்து, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாட்டில் கலவரத்தை உண்டாக்க வேண்டும் என்ற வேலையில், பி.ஜே.பி. - சங் பரிவார்க் கும்பல் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதைத்தான் இது தெரிவிக்கிறது. இதுபோன்ற பதிவுகளுக்கு எதிர்விளைவு வந்தால், அதன் நிலை என்னாகும் என்று நினைத்துப் பார்க்கவேண்டாமா? சட்டம்- ஒழுங்கைக் காப்பாற்றுவதில் தமிழ்நாடு அரசுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால், தொடர்ந்து வன்முறை வெறித்தனப் பேச்சுகளில் ஈடுபட்டு வரும் இந்த ஆசாமிமீது, இந்தச் சந்தர்ப்பத்திலாவது நடவடிக்கை எடுக்கவேண்டும்." என்று கூறியிருக்கிறார்.

"கை, கால்கள் துண்டு துண்டாக்கப்படும்"

ம.தி.மு.கவின் பொதுக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றுவரும் நிலையில், அங்கு பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, "ஈ. கொசுவைப் போன்றவர்கள் எல்லாம் பெரியாரை விமர்சிக்கின்றனர். தைரியமிருந்தால் நாள் குறித்து பெரியாரின் சிலையை உடைக்க வாருங்கள். பெரியாரின் சிலையை உடைக்க முயல்பவர்கள் கை, கால்கள் துண்டு, துண்டாகும்" என்று கூறினார்.

"ஹெச். ராஜா மட்டுமல்ல, அவருடைய பாட்டன் வந்தாலும் பெரியாரின் சிலையை ஒன்றும் செய்ய முடியாது" என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கூறியிருக்கிறார்.

ஆனால், ஹெச். ராஜாவின் இந்தப் பதிவு, விளம்பரத்திற்கானது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருக்கிறார். "ஹெச். ராஜாவின் நோக்கம் பரபரப்பு ஏற்படுத்துவதுதான். தன்னைப் பற்றி எல்லோரையும் பேச வைக்க வேண்டும் என்று நினைக்கிறார். பெரியாரின் சிலையைத் தொட்டுப்பார்த்தால் என்ன நடக்குமென்று தெரியும்" என்று தெரிவித்திருக்கிறார் சீமான்.

பா.ஜ.கவின் கருத்து அல்ல: தமிழிசை

பெரியார் குறித்த ஹெச். ராஜாவின் கருத்து, அவருடைய தனிப்பட்ட கருத்து என்றும் பா.ஜ.கவின் கருத்து அல்ல என்றும் அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் டிவீட் செய்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு ஹெச்.ராஜா தனது புத்தியை இழந்துவிட்டார் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடகங்களிலும் பல்வேறு விமர்சனகள் எழுந்து வருகின்றன.

படத்தின் காப்புரிமை Twitter

இந்நிலையில், தன்னுடைய கருத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், தில்லி சென்றிருக்கும் ஹெச். ராஜா, பெரியார் தொடர்பான தன்னுடைய ஃபேஸ்புக் பதிவை அகற்றியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்