தலைவர்கள் சிலையை உடைத்தால் எத்தனை ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும்?

தமிழகத்தில் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை சேதப்படுத்தினால் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் மூன்றாண்டுகள் முதல் அதிகபட்சம் ஐந்தாண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும் என்று எச்சரிக்கிறார் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அஜிதா.

திரிபுரா மாநிலத்தில், சமீபத்தில் நடைபெற்ற மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. இந்நிலையில், கடந்த 5 ஆம் தேதி தெற்கு திரிபுரா மாநிலத்திலுள்ள பெலோனியா என்ற நகரில், கல்லூரி ஒன்றுக்கு மத்தியில் இருந்த கம்யூனிஸ்ட் தலைவர் லெனின் முழு உருவ சிலை பாஜக தொண்டர்கள் இடித்து தள்ளி சிலையின் தலையை வைத்து கால்பந்தாடியுள்ளனர்.

இந்த சம்பவம் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாஜகவின் தேசிய செயலாளரான எச். ராஜா நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிந்த கருத்து தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இன்று திரிபுராவில் லெனின் சிலை இடிக்கப்பட்டது போல் நாளை தமிழகத்தில் பெரியார் சிலையும் இடிக்கப்படும் என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிந்திருந்தார் எச். ராஜா. எச்.ராஜாவின் இந்த கருத்துக்கு அவரது ஃபேஸ்புக் பக்கத்திலேயே கடுமையான கண்டனங்கள் எழுந்திருந்த நிலையில், அரசியல் கட்சித் தலைவர்களும் இதற்குக் கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர். இதையடுத்து, அந்த சர்ச்சைக்குரிய பதிவை நீக்கினார் எச்.ராஜா.

தலைநகர் டெல்லியிலுள்ள தமிழ்நாடு இல்லத்தில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த எச். ராஜா, தனது அனுமதி இல்லாமல் அந்தப் பதிவை இடப்பட்டதாகவும், சம்பந்தப்பட்ட நிர்வாகியை நீக்கிவிட்டதாகவும் கூறினார்.

ஆனால், எச். ராஜா பெரியார் சிலை இடிக்கப்படும் என்று அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து பதிந்து சிலமணி நேரத்தில் திருப்பத்தூரில் அமைந்திருந்த பெரியார் சிலை ஒன்று சேதப்படுத்தப்பட்டது.

தமிழகத்தில் முக்கிய இடங்களில் அமைந்திருக்கும் சில பெரியார் சிலைகளுக்கு தமிழக அரசு போலீஸ் பாதுகாப்பும் வழங்கியுள்ளது.

Image caption இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் மூன்றாண்டுகள் முதல் அதிகபட்சம் ஐந்தாண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும்: அஜிதா

இந்நிலையில், பொது இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் சிலைகளை சேதப்படுத்தினால் என்னென்ன சட்ட நடவடிக்கைகள் ஒருவர் மீது பாயும் என்று சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அஜிதாவிடம் கேட்டோம்.

  • பொது இடத்தில் உரிய அனுமதி பெற்று அமைக்கப்பட்டுள்ள சிலைகள் அரசின் பொதுச் சொத்துக்களாகும். அவற்றை சேதப்படுத்தினால் அவர்கள் மீது தமிழ்நாடு சொத்துக்கள் (சேதம் மற்றும் இழப்பு தடுப்பு) சட்டம் 1992-ன் படி நடவடிக்கை பாயும்.
  • இந்த சட்டத்தின்படி அவ்வாறு சிலையை சேதப்படுத்தும் ஒருவர் மீது குறைந்தபட்சமாக ஓராண்டு முதல் அதிகபட்சமாக ஐந்தாண்டுகள் வரை சிறைத் தண்டனை பெறலாம். சிலைக்கு ஏற்பட்டுள்ள சேதத்தை பொறுத்து தண்டனையின் அளவு மாறும்.
  • சிறைத் தண்டனை மட்டுமின்றி குற்றமிழைத்தவர் கூடுதலாக அபராதமும் செலுத்த வேண்டியிருக்கும்.
  • நெருப்பு அல்லது வெடிப் பொருட்களால் சிலைக்கு சேதம் நிகழ்ந்தால் அதற்கான சிறைத் தண்டனை என்பது குறைந்தபட்சம் இரண்டாண்டுகள் கடுங்காவல் தண்டனையும், அதிகபட்சமாக பத்தாண்டுகளாகவும் இருக்கும்.
  • தமிழ்நாடு சொத்துக்கள் (சேதம் மற்றும் இழப்பு தடுப்பு) சட்டம் மட்டுமின்றி சிலையை சேதப்படுத்தியவர் மீது இந்திய தண்டனை சட்டமும் பாயும்.
  • இந்திய தண்டனை சட்டம் பிரிவு 141 முதல் 160 வரை பொதுமக்களின் அமைதிக்கு எதிரான குற்றங்களை பற்றியது.
  • சட்டவிரோதமாக ஒன்றுகூடுதல், ஒன்றுகூடி குற்றத்தை நிகழ்த்துதல், கலவரத்தை ஏற்படுத்துதல், பொது அமைதியை சீர்குலைத்தல் ஆகிய குற்றச் செயல்கள் இதில் அடக்கம்.
  • இந்த குற்றச்செயல்களுக்கு குறைந்தபட்சம் 6 மாத சிறைத் தண்டனையும், அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.
  • இதில் முக்கியமாக பிரிவு 153 ஏ-வின் படி, மதம், இனம், மொழி, பிறந்த இடம், குடியிருக்கும் இடம் போன்ற காரணங்களை பயன்படுத்தி வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஏற்படுத்தினால் மூன்றாண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்