என் அனுமதி இன்றி பெரியார் சிலை பற்றி பதிவிட்ட அட்மினை நீக்கிவிட்டேன்: ஹெச்.ராஜா

  • 7 மார்ச் 2018

பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியான பதிவை செவ்வாய்க்கிழமை மாலையே நீக்கிவிட்ட பாரதீய ஜனதாக் கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச். ராஜா, தன் பக்கத்தை நிர்வகிப்பவர் தமது அனுமதி இன்றி அவ்வாறு பதிவிட்டதாகவும், அதற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். அத்துடன், அந்தப் பதிவுக்குக் காரணமான நிர்வாகியை நீக்கிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை HRAJABJP

செவ்வாய்க் கிழமை காலையில் ஃபேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டார் ஹெச்.ராஜா. அதில், திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்ட வீடியோ காட்சியை பகிர்ந்த அவர், "லெனின் யார், அவருக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு, கம்யூனிசத்திற்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு, லெனின் சிலை உடைக்கப்பட்டது திரிபுராவில், இன்று திரிபுராவில் லெனின் சிலை, நாளை தமிழகத்தில் ஜாதி வெறியர் ஈ.வெ. ராமசாமி சிலை" என்று கூறியிருந்தார்.

அவரது ஃபேஸ்புக் பக்கத்திலேயே இதற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்திருந்த நிலையில், அரசியல் கட்சித் தலைவர்களும் இதற்குக் கண்டனங்களைத் தெரிவித்தனர். இதையடுத்து, சிறிது நேரத்திலேயே அந்தப் பதிவை அவர் நீக்கினார். இதன் தொடர்ச்சியாக வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் பெரியார் சிலை ஒன்று சேதப்படுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்:

இந்நிலையில், தன்னுடைய பக்கத்தில் வெளியான பதிவுக்கு எச். ராஜா வருத்தம் தெரிவித்தார். புதன் கிழமை காலையில் அவர் தன் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் செய்தியில், "நேற்றைய தினம் திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதை ஒப்பிட்டு தமிழகத்தில் ஈவெரா அவர்களின் சிலைகளும் அகற்றப்படும் என்ற பதிவு முகநூல் Admin, என் அனுமதி இன்றி பதித்துள்ளார். எனவே தான் அதை நான் பதிவு நீக்கம் செய்திருந்தேன்" என்று கூறியிருக்கிறார்.

மேலும், "கருத்துக்களை கருத்துக்களால் எதிர் கொள்ள வேண்டுமே அன்றி வன்முறையால் அல்ல. எனக்கு யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமில்லை. எனவே இப்பதிவினால் யார் மனதும் புண்பட்டிருக்குமானால் அதற்கு என் இதய பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் ஈ.வெ.ரா அவர்கள் சிலைகளை சேதப் படுத்துவது போன்ற செயல்கள் நமக்கு ஏற்புடையதல்ல." என்றும் கூறியிருக்கிறார்.

இந்நிலையில் டெல்லியில் புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்த ஹெச்.ராஜா, தம் அனுமதி இல்லாமல் அந்தப் பதிவை இட்ட நிர்வாகியை நீக்கிவிட்டதாகக் கூறினார். மேலும் அவர் கூறுகையில், பாஜகவுக்கும் தமக்கும் பிரச்சினைகளை மக்களிடம் கொண்டு சென்று சித்தாந்தப் போராட்டம் நடத்துவதில்தான் உடன்பாடு இருப்பதாக கூறிய அவர், சிலைகளை உடைப்பதில் தமக்கு உடன்பாடு இல்லை என்றும் குறிப்பிட்டார்.

இதர செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :