பலூனில் நிரப்பப்பட்டது ஆண் விந்தா? மாதவிடாய் ரத்தமா?

  • 8 மார்ச் 2018

ஹோலி பண்டிகையின்போது எனது நகங்கள் மற்றும் தலைமுடியில் புதிதாக சேர்ந்த நிறங்களை தற்போது முற்றிலும் நீக்கிவிட முடிகிறது. ஆனால், அப்போது நடந்த ஒரு அருவருக்கத்தக்க செய்தி மட்டும் மனதைவிட்டு அகல மறுக்கிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

ஆண் விந்துவால் நிரப்பப்பட்ட ஒரு பலூனை பெண்கள் மீது வீசிய ஒரு 21 வயது நபரை டெல்லி போலீசார் கைது செய்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாளில் ஒரு செய்தி வெளியானது.

இந்நபரால் தூக்கி வீசப்பட்ட பலூனில் இருந்த பொருட்கள் என்னவென்று இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. இவை மத்திய தடய அறிவியல் ஆய்வகதுக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது என்று அந்த செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.

டெல்லி பல்கலைக்கழகம்,லேடி ஸ்ரீ ராம் கல்லூரியை சேர்ந்த ஒரு பெண் மீது எறியப்பட்ட விந்துவினால் நிரப்பப்பட்ட பலூன் குறித்து முதலில் வெளிவந்த செய்தியை படித்தவுடன் நான் வெறுப்படைந்தேன்.

தண்ணீரில் கலக்கும் ஆண் விந்து என்னவாகும்?

ஆனால், ஹோலி பண்டிகை காலத்தில் நடந்த இந்த சம்பவம் ஒரு நகைச்சுவையாக மாறிவிட்டது. ''எங்கள் மீது பலூனை எறியும் முன்பு, அதில் என்ன நிரப்பப்பட்டுள்ளது என்று தயவுசெய்து சொல்லிவிடவும்'' என்று சிலர் கேட்டது வேடிக்கையாக பார்க்கப்பட்டது.

இது குறித்து டிவிட்டரில் கருத்து வெளியிட்ட ஒரு மருத்துவர் இந்த குற்றச்சாட்டு தவறானது என்றும், ஆண் விந்துவானது வெளிமண்டலத்தில் உள்ள நீர் அல்லது வேறு ஏதேனும் திரவத்துடன் சேரும்போது கட்டியாகி அதனை அழித்துவிடும் என்று தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஆண் விந்து நீருடன் சேர்ந்தால் என்னவாகும் என்பது குறித்து கூகுள் வலைத்தளத்தில் தேடி பார்த்தால், நீரில் கலக்கப்படும் விந்து கட்டியான போதிலும் திரவ வடிவத்தையே பெறும் என சில கட்டுரைகள் விளக்கியுள்ளன.

மேற்கூறிய ஹோலி சம்பவத்துக்கு முன்னர் இது குறித்த ஆராய்ச்சி தேவைப்படாததால், நீருடன் சேரும் விந்து எவ்வாறு மாறும் என்பதை தெரிந்து கொள்ள நம்பகத்தகுந்த தகவல்கள் அதிகம் இல்லை.

ஆண்கள் மீது பெண்கள் வீசிய பலூனில் என்ன இருந்தது?

பெண்கள் மீது விந்து நிரம்பிய பலூன்கள் வீசப்பட்டதாக கூறப்பட்ட குற்றச்சாட்டை தொடர்ந்து டெல்லி பல்கலைக்கழகத்தை சேர்ந்த சில பெண்கள் வீதியில் இறங்கி போராடினர். இதை தொடர்ந்து சில ஆண்களும் ஃபேஸ்புக்கில் தங்களின் கருத்துகளை வெளியிட்டனர்.

டெல்லி பல்கலைக்கழகத்தில் தன் மீது சில பெண்கள் ஒரு பலூனை எறிந்ததாகவும், அதனால் தனது டிஷர்ட் உடனடியாக சிவப்பு நிறத்தில் மாறிதாகவும் ஒருவர் தெரிவித்தார்.

தன் மீது வீசப்பட்ட பலூனில் இருந்தது ஹோலியில் பயன்படுத்தப்படும் வண்ண திரவம் அல்ல, மாதவிடாய் ரத்தம் என்று அவர் தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்திருந்தார்.

இந்த பதிவை பலர் பகிர்ந்துள்ளனர். பலர் இந்த பதிவில் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.

மாதவிடாய் ரத்தத்தை ஒரு பலூனில் சேகரிப்பது சாத்தியமில்லை என்றும், இவ்வாறு ஒரு பலூன் முழுவதும் மாதவிடாய் ரத்தத்தை நிரப்ப வேண்டுமென்றால் அதற்கு பல மாதங்கள் ஆகும் என்று பல பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதே போல்தான் ஆண் விந்துவால் ஒரு பலூனை நிரப்புவதற்கும் பல நாட்களாகும் என்று பெண்களின் பதிவுகளுக்கு பதிலளித்த ஆண்கள் கூறினர்.

பலூனை வீசியது ஆணா? பெண்ணா?

லேடி ஸ்ரீ ராம் கல்லூரியை சேர்ந்த பெண் மீது விந்துவினால் நிரப்பப்பட்ட பலூனை வீசியதும் ஒருபெண் தான் என்றும், அப்பெண் மன்னிப்பு கோரியதாகவும் செய்தி வெளியானவுடன் இந்த விஷயம் மேலும் சிக்கலானது.

இந்த செய்தி குறித்து நாம் ஆராய முயன்றபோது, தண்ணீரால் நிரப்பப்பட்ட பலூனை எறிந்ததற்கே அந்த பெண் மன்னிப்பு கேட்டுள்ளார் என்றும், விந்து நிரம்பிய பலூனை எறிந்த சம்பவம் தொடர்பாக அல்ல என்றும் தெரிய வந்தது.

இந்த சம்பவம் குறித்து பலவகையான மீம்களும் பகிரப்பட்டன.

இதற்கிடையே, வீதியில் ஆண்களும், பெண்களும் நிரப்பப்பட்ட பலூனை தொடர்ந்து வீசிவந்தனர்.

ஆனால், தற்போது என்மீது ஒரு பலூன் வீசப்பட்டால், அதில் உள்ள திரவம் என்ன நிறம், அதன் தன்மை என்ன என்பது குறித்து நான் ஆராய்கிறேன்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஹோலி பண்டிகைக்கு சற்று முன்னதாக நான் ஒரு சைக்கிள் ரிக்ஷாவில் சென்று கொண்டிருந்த இரண்டு ஆண்கள் சென்று கொண்டிருந்த ஒரு ஸ்கூட்டர் என்னருகே வந்தது.

ஸ்கூட்டரின் பின்புற இருக்கையில் அமர்ந்திருந்த நபர் என்மீது தன் கையால் அடிப்பது போல செய்தார். அவர் கையில் இருந்த ஒரு பலூன் வெடித்து சிதறியது.

என் சட்டை நீரில் நனைந்தது மட்டுமல்லாமல், எனக்கு அவரின் செய்கையால் வலியும் உண்டானது. அவர்கள் சிரித்தவாறு விசிலடித்து கொண்டே தங்கள் வாகனத்தில் விரைந்து விட்டனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

அந்த பலூனில் தண்ணீர்தான் இருந்தது என்ற போதும், எனக்கு அது ஒரு மோசமான வாடையை தந்தது போல உணர்ந்தேன்.

எனது கோபத்துக்கும், அசௌகரியத்துக்கும் காரணம் விந்து மற்றும் மாதவிடாய் ரத்தத்தால் பலூன்கள் வீசப்பட்டதாக கூறப்பட்ட குற்றச்சாட்டு அல்ல.

ஹோலி பண்டிகையை கொண்டாடுவது எனக்கு பிடிக்கும். ஆனால், எனக்கு விருப்பமில்லாத சமயத்தில், விருப்பமில்லாதவர்கள் வண்ணங்களோடும், தண்ணீரோடும் விளையாடுவதில் மட்டும் எனக்கு உடன்பாடு இல்லை.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :