"மக்கள் மனதில் பெரியார் உயர்ந்த இடத்தில் இருக்கிறார்"

பெரியார் சிலை தொடர்பாக பாஜக தேசிய செயலர் ஹெச். ராஜா கருத்துக்கு தமிழகத்தில் கடும் கண்டனங்கள், போராட்டங்கள் நடந்து வருகின்றன.

படத்தின் காப்புரிமை H.Raja/Facebook

(ஹெச். ராஜா அது தன் கருத்து அல்ல. தனது ட்வீட்டர் கணக்கை நிர்வகித்தவர் என் அனுமதி இல்லாமல் அந்த கருத்தை பகிர்ந்துவிட்டார். அந்த கருத்தை நீக்கிவிட்டேன் என்று விளக்கம் கொடுத்துள்ளார்)

இது குறித்து பிபிசி தமிழின் வாதம் விவாதம் பகுதியில், பெரியார் கொள்கை தமிழகத்தில் தீவிரமாக காலூன்றியுள்ளதை இது காட்டுகிறதா? இதன் மூலம் பாஜக அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறதா? என்ற கேள்விகளை நேயர்களிடம் கேட்டிருந்தோம்.

அதற்கு நேயர்கள் பதிவிட்ட கருத்துக்களை இங்கு தொகுத்து வழங்குகின்றோம்.

"என் பெயருக்கு பின்னால் என் சாதிய அடையாளம் கிடையாது நானாக சொன்னால் தான் என் சாதிய அடையாளம் மற்றவருக்கு தெரியும். என்னை நீ இந்த தொழில் தான் செய்ய வேண்டும் என்று உரக்க கூற ஒருவனுக்கும் தைரியமிருக்காது இது தான் பெரியார் கொள்கை வெற்றி பெற்றுயிருப்பதன் அடையாளம்," என்கிறார் துரை முத்துசெல்வம்.

படத்தின் காப்புரிமை FACEBOOK/DRAVIDARKAZHAGAM

மைதீன் ரைஃபா, " ஒரே கல்லில் நாலு மாங்கா அடிக்கும் முயற்சி இது. தற்காலத்தில் ஏற்பட்டிருக்கும் அரசுக்கு எதிரான விஷயங்களை மறக்கடிக்கவும், மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தி கட்சி வளர்க்கவும், தன் விளம்பரத்திற்காகவும் இப்படி பல விஷயங்களை ஒரே பிரச்சினையை கொண்டு சாதிக்கும் முயற்சி." என்கிறார்.

பகுத்தறிவு சிந்தனைக்கு எதிர் கருத்துடையோரை இந்துத்துவக் கூடாரத்துக்குள் ஒன்று சேர்த்து தமிழக அரசியலில் அகலக்கால் வைக்க எப்பொழுதும் பரபரப்பு சூழலில் மக்களைத் திசைதிருப்புவதற்கான அடுத்த அத்தியாயமாகப் பெரியார் சிலை சச்சரவை வழக்கம்போல் ஆழம் ஆராயாமல் தான்தோன்றித்தனமாக தொடங்கி இருக்கின்றனர் என்று பதிவிட்டுள்ள சக்தி சரவணன்,

மக்கள் வரிப்பணத்தில் பல்லாயிரங் கோடி விரயமாக்கி சிலைகள் அமைக்கத் துடிப்போர்தான் இங்குச் சிலை அகற்றுவதைப் பற்றிய சச்சரவைக் கிளப்புகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

சாகுல் பயான் : "பெரியார் சிலையை வைத்து அரசியல் செய்ய நினைத்த பாஜகவுக்கு பலத்த அடியே மிச்சம். இது தமிழகம் மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதும் பேசும் சூழல். எந்த பிரச்சனைகள் வந்தாலும் பாஜக வாய் மூடி வேடிக்கை பார்க்கும். ஆனால் பெரியார் விஷயத்தில் உடனே அமித் ஷா கண்டனம் தெரிவிக்கும் அளவுக்கு தமிழக மக்கள் மனதில் பெரியார் உயர்ந்த இடத்தில் இருக்கிறார் என்பது தான் உண்மை."

இந்த எதிர்ப்பின் மூலம் பாஜகவுக்கு தழிழ்நாட்டில் எக்காலத்திலும் வாய்ப்பேயில்லை என்பது அழுத்தமாக புரிந்திருக்கும் என்கிறார் நிசார் அஹமத்.

சரோஜா பாலசுப்பிரமணியன், "பெரியார் மீதுள்ள பற்றை விட, பாஜக மேலுள்ள வெறுப்பைத்தான் இது காண்பிக்கிறது. என்ன குட்டிக்கரணம் அடித்தாலும் பாஜக வால் தழகத்தில் கால் என்ன , கையை கூட ஊன்ற முடியாது." என்கிறார்.

"மதத்தை வைத்து அரசியல் செய்ய நினைப்பவர்களுக்கு பெரியார் சிம்ம சொப்பனமாக இன்னும் திகழ்கிறார் என்பது இந்த எதிர்ப்பின் மூலம் அவர்களுக்கு தெரிந்திருக்கும்." என்கிறார் மெளலிதரன் செல்வம்.

"இது போன்ற விஷயங்கள் பாஜகவை மக்களிடம் இருந்து அந்நியப்படுத்தும்" - இது செந்தில்குமாரின் கருத்து.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்