2019 தேர்தலில் பலவீனமடையுமா பாஜக கூட்டணி?

  • 9 மார்ச் 2018

மே 20, 2014 அன்று நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வு இது. தேர்தலில் பெற்ற மாபெரும் வெற்றிக்காக பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணிக் கட்சிகளுக்கு நன்றி தெரிவித்தார் நாட்டின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி.

படத்தின் காப்புரிமை PTI

கடந்த பொதுத் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிட்டு, அதிக இடங்களில் வென்ற கட்சியாக உருவெடுத்தது பாரதிய ஜனதா கட்சி. அறுதிப் பெரும்பான்மைக்கு தேவையான 272 உறுப்பினர்களைவிட பத்து உறுப்பினர்களை அதிகமாக பெற்றது அக்கட்சி.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 54 மக்களவை தொகுதிகளை 22 கட்சிகள் வென்றன. அதாவது பாரதிய ஜனதா கட்சியின் 282 தொகுதிகளுடன் சேர்த்து தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலம் 335 என்ற நிலையில் இருந்தது.

அந்தக் கூட்டத்தில் பிரதமர் மோதியின் அருகில் பிரகாஷ் சிங் பாதல் அடுத்து சந்திரபாபு நாயுடு, பின்னர் உத்தவ் தாக்கரே என்று வரிசையாக அமர்ந்திருந்தனர்.

இது 2018 மார்ச் மாதம். அடுத்த பொதுத்தேர்தல் 2019ஆம் ஆண்டு நடைபெறவேண்டும், இனி அதிக காலம் இல்லை. ஆனால் இன்றைய தினத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இரண்டு முக்கியமான பெரிய கூட்டணிக் கட்சிகள் தன்னுடன் இருப்பதாக பாரதிய ஜனதா கட்சி கூற முடியாது.

2014 பொதுத் தேர்தலில் மகாராஷ்டிராவில் 18 மக்களவை தொகுதிகளை வென்ற சிவசேனை கட்சி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜகவுக்கு அடுத்த இரண்டாவது பெரிய கட்சியாகும். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக, பாரதிய ஜனதா கட்சிக்கும் சிவசேனைக்கும் இடையே உறவு புகைச்சலாக இருக்கிறது.

2014 ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலுக்குப் பிறகு, மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு முன்னரே இரு தரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் முற்றின.

படத்தின் காப்புரிமை PTI

பாரதிய ஜனதா கட்சியை, ஆதரிப்பது தொடர்பாக 'அச்சுறுத்தல்' அறிக்கைகளை வாராவாரம் சிவசேனை வெளியிட்டது இயல்பான நடைமுறையாக கருதப்படும் அளவுக்கு கருத்து வேறுபாடுகள் களைகட்டின.

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்குவது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சிக்கும், தெலுங்கு தேசம் கட்சிக்கும் இடையே கடந்த சில மாதங்களுக்கு இழுபறி நிலை உச்சத்தை அடைந்தது.

இழுபறிகள் இப்போது முடிவுக்கு வந்து, தெலுங்கு தேசம் கட்சியின் அமைச்சர்கள் மத்திய அரசில் இருந்து பதவி விலக, மாநில அரசில் இருந்து பாஜக அமைச்சர்கள் ராஜினாமா செய்துவிட்டனர். பா.ஜ.க.வின் அணுகுமுறை "அவமானப்படுத்தி, காயப்படுத்துவது" என்று தற்போது விமர்சனம் செய்கிறார் ஆந்திர மாநில முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருப்பதா அல்லது விலகுவதா என்ற முடிவு பற்றி ஆலோசித்து வருவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

தற்போது கூட்டணியில் அங்கம் வகிக்கும் 18 எம்.பிக்கள் கொண்ட தெலுங்கு தேசம் கட்சி மற்றும் 16 எம்.பிக்கள் கொண்ட சிவசேனா இடையிலான உறவு மோசமடைந்துவிட்டது.

படத்தின் காப்புரிமை PTI

பஞ்சாப் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் அமரீந்தர் சிங் வெற்றி பெற்றார், ஆளும் பா.ஜ.க-அகாலி தளம் கூட்டணியின் தோல்வி, கூட்டணி கட்சிகள் இரண்டுக்கும் இடையிலான உறவில் கசப்புணர்வை மேலோங்கச் செய்துவிட்டது.

பீகாரில் நிதீஷ்-லாலு கூட்டணி முறிந்துபோன பிறகு, பா.ஜ.க நிதிஷுடன் கூட்டு வைத்து அரசுக்கு ஆதரவளித்தாலும், 2014ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில், நிதீஷ் குமாருக்கு எதிராக அங்கு பாரதிய ஜனதா கட்சியால் 22 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது.

2019ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் நிதீஷ் குமாருடன் இணைந்து பா.ஜ.க தேர்தல் பிரசாரத்திற்காக பொதுமக்களிடம் சென்று வாக்கு சேகரித்தால், அது வழக்கமாக ஆளும் கட்சிக்கு எதிராக உள்ள எதிர்ப்புகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கும். இதன் விளைவு அறுதிப் பெரும்பான்மை என்பது கானல் நீராகலாம்.

பாரதிய ஜனதா கட்சி சந்தர்ப்பவாதக் கட்சி என்று 2014இல் பா.ஜ.கவுடன் கூட்டு வைத்த ஜீதன் ராம் மஞ்சி ஏற்கனவே குற்றம் சுமத்துகிறார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நிதிஷ் குமார் இணைந்தது பீகாரில் ஏற்கனவே பாஜக கூட்டணியில் இருக்கும் தேசிய லோக் சமாதா கட்சிக்கு பிடிக்கவில்லை. அந்த கட்சியின் துணைத் தலைவரான உபேந்திர குஷ்வாஹாவின் அதிருப்தி, அண்மையில் நடைபெற்ற அவரது ஒரு பேரணியில் லாலு பிரசாத் யாதவின் கட்சியை சேர்ந்த பல தலைவர்கள் காணப்பட்டதில் சூசகமாக வெளிப்பட்டது.

படத்தின் காப்புரிமை PTI

ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், மெஹ்பூபா முஃப்தியின் பி.டி.பி கட்சி இருந்தாலும், இரு தரப்பினரிடையே கருத்துவேறுபாடுகள் பல இருப்பதும் ஊரறிந்த ரகசியமாகவே இருக்கிறது.

இத்தகைய சூழ்நிலையில், இன்னும் சில மாதங்களில் பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகளில் மும்முரமாக வேண்டிய தேசிய ஜனநாயக கூட்டணியில் தற்போது மன வேற்றுமையும், எதிர்ப்புக் குரல்களும் எழுவது ஏன்?

அதிலும் குறிப்பாக, கூட்டணியின் பிரதான கட்சியான பாரதிய ஜனதா கட்சி அதன் தலைவர் நரேந்திர மோதியின் தலைமையின் கீழ், புதிதாகப் பல மாநிலங்களிலும், வடகிழக்கு பகுதிகளிலும் புதிய அரசை அமைத்திருக்கும் வேளையில் கூட்டணி பலப்படாமல் ஏன் பலவீனத்தை வெளிக்காட்டுகிறது?

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வரலாற்றை சற்றே புரட்டிப் பார்த்தால், அடல் பிஹாரி வாஜ்பாயி பிரதமராவதற்கு முன்பே தொடங்கப்பட்டது இந்தக் கூட்டணி.

அந்த நேரத்தில், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்ட என்.டி.ஏ. ஒருங்கிணைப்பாளர் பதவியில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் நீண்டகாலமாக பொறுப்பு வகித்தார். அப்போதும் மன வேற்றுமைகளும் கருத்து முரண்பாடுகளும் இருந்தன.

படத்தின் காப்புரிமை Getty Images

அன்றைக்கும் இன்றைக்கும் உள்ள ஒரே வேறுபாடு என்னவென்றால், தற்போது மோதி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்பில் யாரும் இல்லை. நிதீஷ் குமார் கூட்டணியில் இணைந்ததும், கூட்டணியின் முழுநேர ஒருங்கிணைப்பாளராக இருந்த சரத் யாதவின் பொறுப்பு முடிந்துவிட்டது.

கூட்டணியின் பிற பணிகள் பா.ஜ.க தலைவர் அமித் ஷாவின் 'கண்காணிப்பில்' மட்டுமே நடக்கின்றன. எது எப்படியிருந்தாலும் அனைவருக்கும் மனதில் இருக்கும் ஒரே கேள்வி என்னவென்றால், 2014 பொதுத்தேர்தலில் இருந்தது போன்றே 2019ஆம் ஆண்டு தேர்தலிலும் இக்கூட்டணியின் கட்டமைப்பும் செயல்பாடும் இருக்குமா?

இதற்கான பதிலை சொல்வதற்கான பொறுப்பு தேசிய ஜனநாயக கூட்டணியின் பிற உறுப்பினர்களை விட அதிகமாக பாரதிய ஜனதா கட்சிக்கே இருக்கிறது. நரேந்திர மோதி என்ற ஒற்றை மனிதரின் பரந்த தோள்களில் 2019 தேர்தலின் வெற்றிக்கான பொறுப்பு சுமத்தப்படுமா?

பாரதிய ஜனதா கட்சி சுயபரிசோதனை செய்து தன்னைத் தானே கண்டுபிடித்து, 2014ஆம் ஆண்டில் கிடைத்ததுபோன்ற தேர்தல் முடிவுகளைத் திரும்பப் பெறுவதற்கான நம்பிக்கையைப் பெறவேண்டும். கூட்டணியின் பழைய சகாக்களை மீட்டெடுக்க கவனம் செலுத்த வேண்டும். ஆனால் அரசியல் சூத்திரதாரிகளின் கணக்கு என்னவென்று யாருக்குத் தெரியும்? வெற்றிபெறும் சூத்திரங்களே பேசப்படுகின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்