நான் ஏன் ஹாதியாவை திருமணம் செய்து கொண்டேன்? - மனம் திறக்கும் ஷஃபின்

  • 11 மார்ச் 2018

ஹாதியா மற்றும் ஷஃபின் ஜகான் இடையே நடந்த திருமணம் செல்லாது என்று கேரள உயர் நீதிமன்றம் கூறியிருந்த தீர்ப்பை ரத்து செய்து அவர்கள் திருமணத்தை மீண்டும் செல்லத்தக்கதாக்கியுள்ளது இந்திய உச்ச நீதிமன்றம்.

படத்தின் காப்புரிமை Sonu AV

கடந்த வெள்ளியன்று அவர்கள் இருவரின் திருமணம் செல்லாது என்று கேரள உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்த உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம், சட்டப்பூர்வ வயதை எட்டிய இருவர் மனம் ஒத்து திருமணம் செய்துகொள்வதை செல்லாததாக்க நீதிமன்றத்துக்கு என்ன உரிமை உள்ளது என்று கேள்வி எழுப்பியது.

தான் ஹாதியாவை திருமணம் செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்று விவரிக்கிறார் ஷஃபின் ஜகான்.

"நாங்கள் இருவரும் இந்தியாவில் பிறந்தவர்கள். எங்கள் விருப்பத்திற்கேற்றாற்போல் வாழ எங்களுக்கு உரிமை உள்ளது. யாருடன் சேர்ந்து வாழ விரும்புகிறோமோ அவர்களுடன் வாழவும் உரிமை உள்ளது. அதனால் நாங்கள் திருமணம் செய்துகொண்டோம்," என்று பிபிசியிடம் கூறினார் ஷஃபின் ஜகான்.

அகிலா அசோகனாக பிறந்து இஸ்லாமிய மதத்துக்கு மாறிய ஹாதியாவை திருமணம் செய்துகொண்டு, பிரச்சனைகள் வெடித்தபின்பு முதல் முறையாக இவ்வளவு உறுதியுடன் அவர் பேசுகிறார்.

உச்ச நீதிமன்றம் வந்து தனது கருத்துகளை நேராக முன்வைக்குமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்த ஹாதியாதான் இதுவரை தனது தரப்பு நியாயங்களை ஆவேசத்துடன் பொது வெளியில் முன்வைத்து வந்தார்.

படத்தின் காப்புரிமை A S SATHEESH/BBC

"எனக்கு கேரள உயர் நீதி மன்றத்தில் கிடைக்காத நீதி உச்ச நீதிமன்றத்தில் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி," என்று பிபிசியிடம் கூறினார் ஹாதியா.

இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த தனது அறைத்தோழிகள் தொழுவதைப் பார்த்து உண்டான ஈர்ப்பில்தான் தான் மதம் மாறியதாக அவர் நீதிமன்றத்தில் கூறியிருந்தார்.

ஆனால், ஹாதியாவின் தோழி ஒருவரின் தந்தை அபுபக்கர் என்பவரால் தனது மகள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதாக அவரது தந்தை அசோகன் கருதினார். அபுபக்கர் மீது அசோகன் காவல் துறையில் புகார் தெரிவிக்க, அபுபக்கர் கைது செய்யப்பட்டார். சில நாட்களிலேயே ஹாதியா காணாமல் போனார்.

அதன்பின் அசோகன் ஒரு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். ஒரு வேளை ஹாதியா வெளி நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று கருதிய அவர் இரண்டாவது மனு ஒன்றையும் தாக்கல் செய்தார்.

இந்தச் சம்பவம் நடந்து சுமார் ஓராண்டு காலத்துக்குப் பிறகு ஹாதியா மற்றும் ஷஃபின் ஜகான் ஆகியோருக்குத் திருமணம் நடந்தது. அந்தக் காலகட்டத்தில் ஹாதியா வழக்கு விசாரணைக்காக உயர் நீதிமன்றத்துக்கும் வந்தார்.

படத்தின் காப்புரிமை PTI

கூடுதல் அரசு வழக்கறிஞர் மனீந்தர் சிங், ஐ.எஸ் குழுவினருடன் தொடர்புள்ள சில அமைப்புகள் இந்துப் பெண்களை இஸ்லாம் மதத்துக்கு மாற்றுவதற்கான அடிப்படை ஆதாரம் இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். அது தேசியப் புலனாய்வு அமைப்புக்கு (என்.ஐ.ஏ) அந்த வழக்கு மாற்றம் செய்யப்பட வழிவகுத்தது.

ஷஃபின் ஜகான் ஓமன் செல்லும் முன் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்திருந்ததால் என்.ஐ.ஏ நடத்திய விசாரணை 'பயங்கரவாத' தொடர்புகள் குறித்தே இருந்தது. என்.ஐ.ஏவின் விசாரணை தொடரலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வந்ததும் கேரளாவின் கொல்லம் நகரில் இருந்து தமிழகத்திலுள்ள சேலம் நோக்கி சுமார் 500 கி.மீ பயணித்தார் ஜகான். சேலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் அவரது மனைவி ஹாதியா ஹோமியபதி மருத்துவம் படிக்கிறார். பின்னர் இருவரும் அங்கிருந்து ஜகானின் குடும்பம் உள்ள கோழிக்கோடு சென்றனர்.

பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தமக்கு உதவியதாக ஷஃபின் ஜகான் கூறுகிறார். வேறு இரு அமைப்புகளின் உதவியை தாங்கள் நாடியபோது அவர்கள் தங்களுக்கு உதவ முன்வரவில்லை என்று ஹாதியா ஏற்கனவே ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.

அவர்கள் திருமணம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளபோதும் அவர்களால் உடனடியாக இணைந்து வாழ முடியாது.

படத்தின் காப்புரிமை PTI

"கல்லூரி அவருக்கு வழங்கியுள்ள மூன்று நாட்கள் விடுப்பு முடிந்ததும், ஹாதியா திரும்ப வேண்டும். அவர் இன்னும் பயிற்சி மருத்துவராக இருக்கிறார். அதன் பின்னரே நாங்கள் சேர்ந்து வாழ முடியும்," என்கிறார் ஜகான்.

கடுமையான இன்னல்களை சந்தித்துள்ள அவர்களுக்கு, எதிர்காலத்தை திட்டமிடவும் இன்னும் கொஞ்சம் காலம் தேவைப்படுகிறது.

என்.ஐ.ஏ நடத்தும் விசாரணை பற்றி கேட்டபோது, "அவர்கள் எப்போதெல்லாம் என்னை விசாரணைக்கு அழைத்தார்களோ, அப்போதெல்லாம் நான் சென்றேன், " என்று கூறி முடித்தார் ஜகான்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :