என் தந்தையை கொன்றவர்களை மன்னித்துவிட்டோம்: ராகுல் காந்தி

படத்தின் காப்புரிமை NOAH SEELAM

சிங்கப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தன் தந்தையை கொன்றவர்களை மன்னித்துவிட்டதாக கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் காந்தி தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஐந்து நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் சிங்கப்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ராகுல் காந்தியிடம் அவரது தந்தையும் இந்தியாவின் முன்னாள் பிரதமருமான ராஜிவ் காந்தி கொல்லப்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்து பேசிய ராகுல் காந்தி, "பல ஆண்டுகளாக நானும், என்னுடைய சகோதரியும் கோபத்துடன் கூடிய மனவேதனையில் சிக்கியிருந்தோம். ஆனால், தற்போது அவர்களை முழுவதுமாக மன்னித்து விட்டோம்" என்று கூறியதாக இந்தியாவின் முன்னணி பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், தனது தந்தை மட்டுமல்லாமல் தனது பாட்டியும் இந்தியாவின் முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தி கொல்லப்பட்டதற்கும், அவர்கள் அரசியலில் ஒரு குறிப்பிட்ட நிலைப்பாட்டை எடுத்ததே காரணமென்றும், தாங்கள் கொல்லப்படுவோம் என்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர் என்றும் அவர் கூறியதாக செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை STR

"நீங்கள் அரசியலில் தவறான உந்துதலில் சிக்கி குழப்படைந்தாலும் மற்றும் எதாவது ஒன்றிற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தாலும் நீங்கள் உயிரிழக்க நேரிடும்" என்று அவர் மேலும் கூறினார்.

ராகுல்காந்தியின் மன்னிப்பு அறிவிப்பு, ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருப்பவர்களின் விடுதலை கோரிக்கைகள் தொடர்பில் ஏதேனும் விளைவுகளை ஏற்படுத்துமா என்று கேட்டபோது, பிபிசியிடம் பேசிய திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, ராகுல் காந்தியின் கருத்து இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்படுவதற்கான சாத்தியப்பாடுகளை அதிகரிப்பதாகத் தெரிவித்தார். "ராஜிவ் காந்தியின் குடும்பத்தினரே ஒருவர் பின் ஒருவராக வெளிப்படுத்தும் எண்ணங்களை மத்திய, மாநில அரசுகள் கருத்திற்கொண்டு 27 ஆண்டுகாலமாக சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்யவேண்டும்" என்று கூறியுள்ளார்.

"ஏற்கனவே இவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிரான கருத்தை சோனியா காந்தி வெளிப்படுத்தியிருந்த நிலையில், தற்போது தானும், தன்னுடைய சகோதரி பிரியங்காவும் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை மன்னித்துவிட்டதாக கூறியுள்ளது அரசியல் ரீதியிலான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்று விரும்புகிறோம்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: