"திங்கட்கிழமை காலையில் வந்துடுறேன் அப்பா!" குரங்கணி காட்டுத் தீ-பிபிசி செய்தியாளரின் அனுபவம்

  • 12 மார்ச் 2018

முதலில் அந்த செய்தி வாட்ஸ் அப்பில் வந்த போது வதந்தி என்றுதான் நினைத்தேன். சுட்டெரிக்கும் இரவாக இது இருந்திருக்க வேண்டாம் என்கிறார் பிபிசி தமிழின் செய்தியாளர் பிரமிளா கிருஷ்ணன்.

குரங்கணி காட்டுத் தீ செய்தி பரவியதிலிருந்து தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை பிரமிளா பகிர பிபிசி செய்தியாளர் மு. நியாஸ் அகமது அதனை தொகுத்து தருகிறார்.

"வதந்தி என்று நினைத்தேன்"

நேற்று மாலை வாட்ஸ் அப்பில் தேனி மலைப் பகுதியில் தீ என்று செய்தி வந்தது. உண்மையாக சொல்ல வேண்டுமென்றால், இந்த செய்தி முதலில் எனக்கு அயர்ச்சியைதான் தந்தது. இதற்கு காரணம் இரண்டு நாட்களுக்கு முன் வந்த இதே போன்ற ஒரு செய்தி. ஆம்.. இரண்டு நாட்களுக்கு முன் வாட்ஸ் ஆப்பில் பயங்கர தீ என்றும், பலர் அதில் சிக்கி உள்ளனர் என்றும் செய்தி வாட்ஸ் அப்பில் பரவியது. வெறும் செய்தி மட்டும் அல்ல... அதற்கு ஆதாரமாக சில புகைபடங்களும் வந்தது. இது குறித்து விசாரித்த போது, இது உண்மையல்ல வெறும் வதந்தி என்று தெரியவந்தது. இதுவும் அதுபோல மற்றொரு வதந்திதான் என்று கடந்து சென்றுவிட்டேன்.

ஆனால், அடுத்த சில நிமிடங்களில் பிபிசி தமிழின் ஆசிரியரிடமிருந்து செய்தி வந்தது. அந்த செய்தியை பின் தொடர்ந்து பலரிடம் உரையாடிய போது நடந்துக் கொண்டிருக்கும் விபரீதம் புரிந்தது.

"நாம் தொடக்க நிலையில் உள்ளோம்"

ஆசிரியரிடமிருந்து செய்தி வந்ததும், நான் உடனே வடமேற்கு மண்டல தீயணைப்புத்துறையின் துணை இயக்குனர் மீனாட்சி விஜயக்குமாரை தொடர்பு கொண்டேன். அவருக்கு கள செய்திகள் முழுமையாக தெரியவில்லை. ஆனால், காட்டுத் தீயை எதிர்கொள்வதில் நாம் தொடக்க நிலையில்தான் உள்ளோம். சமவெளியில் ஏற்படும் தீயை போல, காட்டுத் தீயை எதிர்கொள்வது அவ்வளவு எளிதல்ல என்றார் அவர்.

இந்த வார்த்தைகள் ஏதோ பெரிய விபரீதம் நடந்துக் கொண்டு இருப்பதை எனக்கு உணர்த்தியது. நான் சென்னையில் இருப்பதால், குரங்கணியில் என்ன நடந்துக் கொண்டிருப்பது என்ற துல்லியமான செய்திகளை பெறுவது சிரமமாக இருந்தது. அதுமட்டுமல்ல, காட்டுத் தீயை விட அது குறித்த வதந்தி, மிக வேகமாக பரவிக் கொண்டிருந்தது.

தேனி மாவட்ட தீயணைப்புத் துறை அதிகாரி தென்னரசை தொடர்புக் கொண்டேன். அவர் குரலில் இருந்த பதற்றம் எனக்கு நடுக்கத்தை உண்டாக்கியது. அவர், 'பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. காட்டுத் தீயில் சிக்கிக் கொண்டவர்கள் அனைவரும் இளைஞர்கள். இதற்கு மேல் எதுவும் இப்போது சொல்ல முடியாது. பின்பு பேசுங்கள்' என்று வார்த்தைகள் இடையே இடைவெளிவிடாமல் விரைவாக பேசினார். எனக்கு சூழ்நிலை புரிந்ததால் நானும் அதற்கு மேல் எதுவும் கேட்கவில்லை. சரி... நேரில் வருகிறேன் என்று சொல்லிவிட்டி தொடர்பை துண்டித்தேன்.

"அதே தடத்தில் நான்கு ஆண்டுகளுக்கு முன்"

நான்கு ஆண்டுகளுக்கு முன் நான் இதே தேனி மலைக்கு சென்றிருக்கிறேன். அந்த நினைவுகள் என் அகவெளியில் மெல்ல விரிய தொடங்கின.

நான் பாதம் பதித்த அதே தடத்தில்தான் இந்த மாணவர்களும் நடந்து சென்றிருப்பார்கள். அங்கேதான் ஏதோ ஓரிடத்தில் தீயின் நா இவர்களை தழுவி இருக்கிறது என்று நினைப்பே எனக்கு பதற்றத்தை உண்டாக்கியது.

நான் சென்றது இது போன்ற வெம்மையான நாளில் இல்லை. 2014 ஆம் ஆண்டின் மென் தூரல் பொழுது அது. அடர்த்தியான அந்தக் காட்டுக்குள் வனத் துறை அதிகாரிகளுடன் சென்றேன். கொஞ்சம் பாதை மாறினாலும், தொலைந்து போவதற்கு வாய்ப்புகள் அதிகமுள்ள கான் அது என்று அந்த காடு குறித்து தன் முன் அனுபவத்தை நினைவு கூர்ந்தார் பிரமிளா.

"திங்கட்கிழமை வந்துருவேன்ப்பா"

திங்கட்கிழமை தேனியைக் கடந்து தமிழகம் முழுவதும் இந்த செய்திதான் வியாபித்து இருந்தது. மதுரை விமானநிலையம் செல்வதற்காக ஆட்டோவில் ஏறிய போது, தொலைப்பேசியில் இது குறித்து சிலரிடம் உரையாடினேன். இந்த வார்த்தைகளை கேட்ட ஆட்டோ ஓட்டுநர், தீ குறித்த தனது நினவுகளை பகிர்ந்துக் கொள்ள தொடங்கினார்... தீயில் சிக்கி இருப்பவர்களுக்கு ஏதும் ஆகிவிடக் கூடாது என்று உரக்க பிரார்தனை செய்தார்.

விமான நிலையத்தில் இறங்கியதும், அங்கு சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நின்றுக் கொண்டிருப்பதை கண்டேன். ஆனால், அவரும் இதே காரணத்திற்காகதான் மதுரை செல்வதற்கு வந்திருக்கிறார் என்று எனக்கு முதலில் புரியவில்லை. நான் முகமன் கூறிய போது, வார்த்தைகளில் எந்த உயிர்ப்பும் இல்லாமல் பதில் தந்தார்.

ராதாகிருஷ்ணனுடன் அந்த தீயில் சிக்கி உள்ள ஒரு பெண்ணின் தந்தை உரையாடிக் கொண்டிருந்தார். அவருக்கு நம்பிக்கை அளித்தப் படியே, நம்மிடம் அவரை அறிமுகப்படுத்தினார்.

அவரின் பெயர் தமிழ் ஒளி.

அந்தப் பெண்ணின் அப்பா தமிழ் ஒளி, 'என் மக பேரு நிஷாம்மா. இன்ஜினியரா இருக்கா... அவளுக்கு ட்ரக்கிங்னா ரொம்ப ஆர்வம். பல தடவை ட்ரக்கிங் போயிருக்கா. இப்பவும், திங்கட்கிழமை காலைல வந்துருவேன்ப்பா... ஆஃபிஸ் போகணும்னு சொல்லிட்டுதான் போனா... ஆனா, இப்ப எங்க இருக்கான்னே தெரில` என்றார் உடைந்த குரலில். அவருக்கு என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை.

மதுரை சென்றதும் ராஜாஜி மருத்துவமனைக்கு விரைந்தோம்.

அங்கு குரங்கணியில் சிக்கி காயமடைந்தவர்கள் இருக்கும் பிரிவுக்கு சென்றோம். எங்களுக்கு முன்னால் ஒருவரை ஸ்ட்ரெச்சரில் எடுத்து சென்று கொண்டிருந்தார்கள். அவர் முனகியப்படியே சென்றார். அவர் யார் என்று விசாரித்தபோது, அவர்தான் நிஷா என்பதை அறிந்தோம். உடனே நிஷாவின் அப்பாவை தொடர்புக் கொண்டு விஷயத்தை தெரிவித்தோம். அவர் குரலில் இருந்த நடுக்கம் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது.

புகைப்படம் வேண்டாம்

இதையெல்லாம் கடந்து சொல்ல ஒரு விஷயம் இருக்கிறது. நான் முக்கியமென்று கருதும் விஷயம். மருத்துவமனையில் தீக்காயம் அடைந்தவர்களை புகைப்படம் எடுத்தோம். ஆனால், இப்போது அது எதுவும் எங்களிடம் இல்லை. மருத்துவர்கள் புகைப்பட கருவியை வாங்கி அழித்து விட்டார்கள். இனி புகைப்படம் எடுக்காதீர்கள் என்றார்கள். அதற்கு அவர்கள் கூறிய காரணம், `பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அரை மயக்கத்தில் சுயநினைவுடந்தான் இருக்கிறார்கள். நீங்கள் புகைப்படம் எடுப்பது அவர்களுக்கு மன உளைச்சலை தரும். இந்த நிலையில் நம்மை புகைப்படம் எடுக்கிறார்களே என்ற அவர்களின் நினைப்பு, தன்நம்பிக்கையை குறைக்கும். இந்த புகைப்படம் எங்கும் பரவும் என்ற நினைப்பே, அவர்கள் மீண்டு வருவதை தாமதப்படுத்தும். அதனால், புகைப்படம் வேண்டாம்' என்றார்கள். அனிச்சையாக நாங்கள் புகைப்பட கருவியை பையில் வைத்தோம்.

பின், அங்கிருந்த மருத்துவர்களுடன் உரையாடிவிட்டு போடி நோக்கி பயணமானோம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்