உலகப் பார்வை: தடையை மீறி வட கொரியாவுடன் சிங்கப்பூர் நிறுவனம் தொடர்பு

  • 13 மார்ச் 2018

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம்.

தடையை மீறி தொடர்பு

படத்தின் காப்புரிமை NK News

ஐ.நா விதித்த பொருளாதாரத் தடையை மீறி இரண்டு சிங்கப்பூர் நிறுவனங்கள் வட கொரியாவுக்கு ஆடம்பர பொருட்கள் அனுப்பியதாக அண்மையில் கசிந்த ஐ.நா வரைவு அறிக்கை ஒன்று கூறுகிறது. இதன் இறுதி அறிக்கை அடுத்த வாரம் ஐ.நா பாதுகாப்பு மன்றத்திடம் அளிக்கப்பட உள்ளது. இது குறித்து விசாரித்து வருவதாக சிங்கப்பூர் அரசாங்கம் கூறி உள்ளது. ஆனால், குற்றச்சாட்டுக்கு உள்ளாகி உள்ள நிறுவனம் இதனை மறுக்கிறது.

ஹிட்லர் அரசில் பணிபுரிந்த கணக்குப்பிள்ளை மரணம்

படத்தின் காப்புரிமை Reuters

ஹிட்லரின் நாசி ஜெர்மனிய அரசில் கணக்குப்பிள்ளையாக பணிபுரிந்த ஆஸ்கர் க்ரோயனிங் தனது 96 வயதில் மரணம் அடைந்துள்ளார் என ஜெர்மானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நாசி ஆக்கிரமித்த போலாந்தில் இருந்த ஆஸ்விட்ச் வதை முகாமில் இவர் கணக்குப் பிள்ளையாக பணிபுரிந்துள்ளார். அந்த முகாமில் 3 லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டார்கள். தண்டனை விதிக்கப்பட்ட யூதர்களிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட நகை மற்றும் விலை உயர்ந்த பொருட்களை மதிப்பிடுவதுதான் அந்த முகாவில் ஆஸ்கரின் பணி. 2015 ஆம் ஆண்டு ஆஸ்கருக்கு நான்காண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், இவர் மேல் முறையீடு செய்து இருந்தார்.

மக்களை அப்புறப்படுத்த ஒப்புதல்

படத்தின் காப்புரிமை AFP

காயம் அடைந்தவர்களை கிழக்கு கூட்டா பகுதியிலிருந்து அப்புறப்படுத்த சிரிய அரசின் கூட்டாளியான ரஷ்யாவிடம் ஒப்புக் கொண்டுள்ளதாக கிளர்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ரஷ்யா இதற்கு ஒப்புதல் தெரிவித்ததாக எந்த தகவலும் இல்லை. ஆனால், இது குறித்து பேச்சு வார்த்தை நடைப்பெற்றதாக ஐ.நா கூறுகிறது. கிழக்கு கூட்டா பகுதி சிரிய அரசு படைகளின் முற்றுகையில் உள்ளது. அதிகளவிலான பரப்பை கிளர்ச்சியாளர்களிடமிருந்து சிரியா அரசு மீட்டுவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த போரின் காரணமாக அப்பகுதியில் ஆயிரக்கணக்கானவர்கள் மோசமாக காயமடைந்துள்ளதாகவும், அதில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் மற்றும் பெண்கள் என்றும் ஐ.நா கூறுகிறது.

"உளவாளி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ரஷ்யா பதலளிக்க வேண்டும்"

படத்தின் காப்புரிமை படத்தின் காப்புரிமைEPA/ YULIA SKRIPAL/FACEBOOK

முன்னாள் ரஷ்ய உளவாளி செர்கே ஸ்கிரிபால் மற்றும் அவரது மகள்,ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட ராணவத்தால் பயன்படுத்தப்படும் நரம்பு மண்டலங்களை பாதிக்கக்கூடிய ரசாயனத்தால் தாக்கப்பட்டுள்ளனர் என தெரீசா மே தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலை ரஷ்யா நடத்தியதற்கான "அதிக வாய்ப்புகள்" இருப்பதாக அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது குறித்து விளக்கமளிக்குமாறு ரஷ்ய தூதரகத்தை வெளியுறவுத் துறை அலுவலகம் கேட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்