ஸ்டீஃபன் ஹாக்கிங்: கோட்பாடுகள் மூலமாக நவீன அறிவியலுக்கு திசைவழி காட்டியவர்

  • 14 மார்ச் 2018

எனக்கு மரணம் குறித்த அச்சம் இல்லை. அதற்காக விரைவாக இறந்து போக வேண்டும் என்றில்லை. நான் முடிக்க வேண்டிய பணிகள் அதிகம் உள்ளன என்று ஒரு முறை கூறினார் ஸ்டீஃபன் ஹாக்கிங். அந்த அனைத்து பணிகளையும் முடித்துவிட்டாரா என்று தெரியவில்லை. 76 வயதில் இந்த பூவுலகை விட்டு சென்றிருக்கிறார் ஹாக்கிங்.

ஹாக்கிங் இறப்பு குறித்து சிலரிடம் பேசினோம். அவர்கள், இயற்பியலை அனைவரும் புரிந்து கொள்ளும்படி விளக்கியவர் ஹாக்கிங் என்கிறார்கள்.

'சமகால ஐன்ஸ்டீன்'

சமகாலத்தில் நம்முடன் வாழ்ந்த ஐன்ஸ்டீனை இழந்திருக்கிறோம் என்கிறார் சென்னை பிர்லா கோளரங்கத்தின் இயக்குநர் அய்யம்பெருமாள்.

"கருந்துளை விரிவடையகிறது என்ற கருத்து இருந்த நிலையில், `இல்லை` கருந்துளை சுருங்குகிறது என்ற கோட்பாட்டை முன்வைத்து நிறுவியவர் ஸ்டீஃபன். பெருவெடிப்பு கோட்பாட்டை அவரைவிட யாராலும் எளிமையாக விளக்க முடியாது. அண்டவியல் ஆராய்ச்சியில் அவரின் பங்கு மகத்தானது." என்கிறார் அய்யம்பெருமாள்.

படத்தின் காப்புரிமை Getty Images

`திசைவழி காட்டியவர்`

ஹாக்கிங் மரணம் அறிவியல் உலகுக்கு பேரிழப்பு என்கிறார் இளம் அறிவியலாளர் ரிஃபாத்.

படத்தின் காப்புரிமை facebook/rifath.sharook

ரிஃபாத், "இன்றைய தலைமுறைக்கு அறிவியல் குறித்து உதவேகம் அளிப்பவராக இருந்தார். இளம் விஞ்ஞானிகள் யாரிடம் வேண்டுமானாலும் பேசி பாருங்கள். அவர்கள் நிச்சயம் ஹாக்கிங்கால் ஈர்ர்க்கவும், தூண்டவும் பட்டிருப்பார்கள்."

"கோட்பாடு அறிவியலை விளக்குவது கடினம். ஆனால், ஹாக்கிங் அதனை அனைவரும் புரிந்து கொள்ளும்படி விளக்கினார். தனது கோட்பாடுகள் மூலம் இயற்பியல் துறைக்கு வெளிச்சமும், நவீன அறிவியலுக்கு திசைவழியும் காட்டியவர் அவர். நரம்பு தொடர்பான நோயினால் சிறுவயதிலேயே பாதிக்கப்பட்ட போதும், அதனையெல்லாம் கடந்து அவர் தொட்ட உச்சம், அனைத்து காலத்துகுமான பாடம் " என்கிறார் ரிஃபாத்.

`ஊந்து சக்தி`

படத்தின் காப்புரிமை facebook

ஹாக்கிங், கலிலீயோ இறந்த நாளில் பிறந்து, ஐன்ஸ்டீன் பிறந்த நாளில் இறந்திருக்கிறார். வாழ்வு மட்டும் அல்ல ஹாக்கிங் இறப்பும் அறிவியல் சுற்றியே இருந்திருக்கிறது என்கிறார் கல்வியாளரும் அறிவியல் குறித்து தொடர்ந்து எழுதி வருபவருமான ஆயிஷா இரா. நடராஜன்.

"கருந்துளை கோட்பாடு, வேறு கோள்களில் உயிரினம் இருக்கிறதா என்ற ஆய்வு, பெரு வெடிப்பு கோட்பாடு என்று சமகாலத்தின் அனைத்து முக்கிய ஆராய்ச்சிகளிலும் இவரது பங்கு இருந்திருக்கிறது. தான் அறிந்த அறிவியலை பிறருக்கு கடத்துவதிலும் மிக தெளிவாக இருந்தார் `தி பிரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்`, `தி கிராண்ட் டிசைன்` என்று தொடர்ந்து எழுதிக் கொண்டு இருந்தார்"என்கிறார் நடராஜன்.

படத்தின் காப்புரிமை Getty Images

மேலும் அவர், "அறிவியலை நேர்மறையாக அணுகி, நம்பிக்கை அளித்ததில் அவரது பங்கு மகத்துவமானது. அவரது கணித கோட்பாடுகள் ஆராய்சியாளர்கள் அனைவருக்கும் வழிகாட்டும். அதுமட்டுமல்ல, அண்டவியல் ஆராய்ச்சியையும், குவாண்டம் இயற்பியலையும் ஒற்றை புள்ளியில் கொண்டு வந்து நிறுத்தியவர்."என்று விவரிக்கிறார் நடராஜன்.

வேடிக்கையானவர்களாக இல்லாவிடில் வாழ்க்கை நரகமாகிவிடும்: ஸ்டீஃபன் ஹாக்கிங்

அறிவியலை கடந்து அவரது அரசியல் புரிதல் தெளிவானது. மாற்று திறனாளிகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்திருக்கிறார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்