உத்தரப்பிரதேசம்: முதல்வர், துணை முதல்வர் தொகுதிகளில் பாஜக தோல்வி

  • 14 மார்ச் 2018

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூர் மற்றும் பூல்பூர் ஆகிய இரு மக்களவைத் தொகுதிகளுக்கும் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இதற்கு முன்பு அந்த தொகுதிகளை தன் வசம் வைத்திருந்த பாரதிய ஜனதா கட்சி தோல்வியடைந்துள்ளது.

படத்தின் காப்புரிமை TWITTER.COM/MYOGIADITYANATH
Image caption உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்

அம்மாநில சட்டமன்றத்துக்கு கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக வெற்றிபெற்ற பின்னர், கோரக்பூர் மக்களவை உறுப்பினராக இருந்த யோகி ஆதித்யநாத் மற்றும் பூல்பூர் மக்களவை உறுப்பினராக இருந்த கேசவ் பிரசாத் மவுரியா ஆகியோர் பதவி விலகி முறையே முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் பொறுப்புகளை ஏற்றனர்.

கடந்த ஞாயிறன்று அந்தத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி 47.45% மற்றும் 37.39% வாக்குகள் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.

கோரக்பூர் தொகுதியில் சமாஜ்வாடி கட்சியின், 29 வயதாகும் பிரவின் குமார் நிஷாத் பாஜகவின் உபேந்திர தத் சுக்லாவைவிட 21,961 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார். 1989 முதல் பாஜக கோரக்பூர் தொகுதியில் வெற்றிபெற்று வந்துள்ளது.

பூல்பூர் தொகுதியில் போட்டியிட்ட சமாஜ்வாடி கட்சியின் நாகேந்திர சிங் படேல் பாஜக வேட்பாளர் கௌசிலேந்திர சிங் படேலைவிட 59,213 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.

இந்த இரு தொகுதிகளிலும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிடவில்லை. அக்கட்சி சமாஜ்வாடி கட்சிக்கு ஆதரவு தெரிவித்திருந்தது.

படத்தின் காப்புரிமை AKHILESH YADAV / TWITTER
Image caption வெற்றியைக் கொண்டாடும் சமாஜ்வாடி கட்சியினர் உத்தரப்பிரதேசம்

இதனிடையே, பீகார் மாநிலத்தின் அராரியா மக்களவைத் தொகுதிக்கு, லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் உறுப்பினர் தஸ்லிமுதீன் இறந்ததை தொடர்ந்து நடத்தப்பட்ட இடைத் தேர்தலில் அதே கட்சி சார்பில் போட்டியிட்ட, அவரது மகன் சர்பராஸ் அகமத் வெற்றி பெற்றார்.

ஜஹானாபாத் சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலிலும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சியின் குமார் கிருஷ்ண மோகன் யாதவ் அங்கு வெற்றிபெற்றுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: