கோரக்பூர் தேர்தல் முடிவு: நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமா?

  • 15 மார்ச் 2018
மோதி படத்தின் காப்புரிமை Getty Images

தனது அட்சியின் முதலாமாண்டு நிறைவை உற்சாகமாக கொண்டாட உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் திட்டமிட்டு கொண்டிருந்த சமயத்தில் அவருக்கு அதிர்ச்சியினை பரிசளித்து இருக்கிறார்கள் வாக்காளர்கள்.

மூன்று தசாப்தங்களாக பா.ஜ.க வசம் இருந்த, ஆதித்யநாத்தின் சொந்த தொகுதியான கோரக்பூரில் அக்கட்சி தோல்வியை தழுவி இருக்கிறது.

 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், மூன்று லட்சம் வாக்கு வித்தியாசத்தில் கோரக்பூர் நாடாளுமன்ற தொகுதியில் யோகி ஆதித்யநாத் வெற்றி பெற்று இருந்தார்.

இப்போது அந்த தொகுதியை இழந்து இருப்பது முதல் அதிர்ச்சி என்றால்,யோகி அமைச்சரவையில் துணை முதல்வராக இருக்கும் கேசவ் பிரசாத் மெளரியாவின் பல்பூரிலும் பா.ஜ.க தோல்வியை தழுவி இருப்பது மற்றொரு அதிர்ச்சி.

படத்தின் காப்புரிமை Getty Images

யோகியும்,கேசவ் பிரசாத்தும் உத்தர பிரதேச முதல்வராகவும், துணை முதல்வராகவும் பொறுப்பேற்க வேண்டி இருந்ததால் இவர்கள் தங்களது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார்கள். அதனால், அங்கு இடைத்தேர்தல் வந்தது.

எங்கு எப்படி சறுக்கியது பா.ஜ.க?

கடைசி நேரத்தில் சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி இடையே ஒரு புரிதல் ஏற்பட்டது. இது கடுமையான சவாலை பா.ஜ.கவுக்கு கொடுத்தது.

யோகி அரசின் ஒட்டுமொத்த செயல்பாடுகளும் இந்த தோல்விக்கு மற்றொரு முக்கியமான காரணம். இது வளர்ச்சிக்கான அரசு என்று மீண்டும் மீண்டும் கூறி ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பினை யோகி அரசு உண்டாக்கி இருந்தது. அது எதுவும் நிஜமாகாததும் இந்த தோல்விக்கு காரணம்.

படத்தின் காப்புரிமை Getty Images

வாய் வார்த்தைகள் அன்றி, கோரக்பூர் மற்றும் பல்பூர் தொகுதிகள் எதனையும் பெறவில்லை. கண்களுக்கு புலப்படுவதுபோல எந்த மாற்றத்தையும் இந்த அரசு கொண்டுவரவில்லை.

இணைந்த எதிரிகள்

சமாஜ்வாதி கட்சிக்கும், பகுஜன் சமாஜ் கட்சிக்கும் இருக்கும் விரோதம் ஆழமான ஒன்று. தனிப்பட்ட பகையும் இருவருக்கும் இருந்தது. 1995 ஆம் ஆண்டு மாநில விருந்தினர் இல்லத்தில் சமாஜ்வாதி கட்சியினர் மாயாவதியை தாக்கினர். இந்த சம்பவம், அவர்கள் இனி இணையவே முடியாது என்ற நிலையை உண்டாக்கியது.

இனி இந்த அரசியல் எதிரிகள் இணையவே போவதில்லை என்ற கருத்து இருந்த நிலையில்தான், இரண்டு கட்சிகளுக்கும் இடையே ஒரு நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியில் அகிலேஷ் இறங்கினார். இந்த முயற்சி கொஞ்சம் கொஞ்சமாக பலன் கொடுக்க செய்தது, கடைசி நேரத்தில் மாயாவதியும் தனது ஆதரவினை சமாஜ்வாதி கட்சிக்கு தெரிவித்தார்.

எதிர்பார்க்கவில்லை

இந்த நல்லிணக்கத்தை பா.ஜ.க எதிர்பார்க்கவில்லை. எதிர்பார்க்கவில்லை என்பதைவிட இதை சாதாரணமாக எடுத்துக் கொண்டது; பா.ஜ.க தலைவர்கள் இதனை கிண்டலும் செய்தனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

அதிகார அகந்தை இயல்பாக வென்றுவிடலாம் என்ற அதி நம்பிக்கையை பா.ஜ.கவுக்கு அளித்தது. ஆனால், முடிவு வேறுவிதமாக அமைந்தது.

உள்ளரசியல்

இப்போது உத்தர பிரதேச துணை முதல்வராக இருக்கும் மெளரியா 2012 ஆம் ஆண்டுதான் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மோடி அலையில் அவரும் வெற்றி பெற்றார். அதே நேரம் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித் ஷா நம்பிக்கையை வென்றெடுத்தார். உத்தர பிரதேச மாநில பா.ஜ.க தலைவராகவும் அவர் நியமிக்கப்பட்டார்.

2017ஆம் ஆண்டு பா.ஜ.க 324/403 என்ற கணக்கில் மகத்தான வெற்றி பெற்றபோது, அந்த வெற்றிக்கு தாம்தான் காரணம் என்று கூற தொடங்கினார்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் வாக்குகளை தாம் கவர்ந்ததுதான் இந்த வெற்றிக்கு காரணம் என்று கூறிய அவர், ஆட்சியில் பெரும் பொறுப்பினை எதிர்பார்த்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

அவர் துணை முதல்வராகவும் நியமிக்கப்பட்டார். ஆனால், அவரால் தன்னை அத்துடன் சமாதானபடுத்திக் கொள்ள முடியவில்லை.

பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி இணைந்தது சாதிய வாக்குகளை ஒருங்கிணைக்க உதவியது. 2014 ஆம் ஆண்டு தேர்தலில் மோதிக்காக அனைவரும் சாதிய வேறுபாடுகளை கடந்து ஒன்றிணைந்தனர். ஆனால், இத்தேர்தலில் அந்த பிம்பம் எடுப்படவில்லை.

இதே கூட்டணி தொடர்ந்தால், பா.ஜ.கவுக்கு அது அடுத்த தேர்தலில் பெரும் சவாலாக அமையும்.

உத்தர பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் 73 தொகுதிகள் பா.ஜ.க வசம் உள்ளது.

ஆதித்யநாத் அதீத நம்பிக்கையின் காரணமாக இந்த இடைத்தேர்தலை 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டம் என்றார். இப்போது அதனை ஏற்றுக் கொள்வாரா என்பது பில்லியன் டாலர் கேள்வி.

  பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: