நடராசன் குறித்து ஜெயலலிதா கூறியது என்ன?

  • முரளிதரன் காசிவிசுவநாதன்
  • பிபிசி தமிழ்

1980களிலின் பிற்பகுதியிலிருந்து அ.தி.மு.கவில் செல்வாக்குச் செலுத்தத் துவங்கிய நடராசன், ஓர் அரசு அதிகாரியாக இருந்து அ.தி.மு.கவை ஆட்டிவைக்கும் சக்தியாக உயர்ந்த கதை சுவாரஸ்யமானது.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர், பத்திரிகை ஆசிரியர், தமிழ் ஆர்வலர் போன்ற முகங்களும் அவருக்கு உண்டு.

ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் (தற்போது திருவாரூர் மாவட்டம்) உள்ள விளார் என்ற கிராமத்தில் விவசாயியான மருதப்பா - மாரியம்மாள் தம்பதிக்கு 1942ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 23ஆம் தேதி பிறந்தவர் நடராசன்.

எளிய விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்த நடராஜன், படிப்பில் பெரும் ஆர்வம் கொண்டிருந்தார்.

தஞ்சாவூரில் உள்ள தூய அந்தோணியார் பள்ளிக்கூடத்தில், பள்ளிக் கல்வியையும் தஞ்சாவூர் சரபோஜி கல்லூரியில் இளமறிவியல் படிப்பும் முடித்த நடராசன், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியலில் முதுகலைப் படிப்பும் படித்தார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்த காலகட்டத்தில்தான், 1965ல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும் பங்கேற்றார் அவர்.

1966 ஜூனில் தஞ்சாவூரில் உள்ள திலகர் திடலில் நடந்த இந்தி எதிர்ப்பு மாநாட்டை நடத்துவதிலும் முக்கியப் பங்கு வகித்தார் நடராஜன்.

பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்தில் தி.மு.கவின் அனுதாபியாக இருந்த நடராசன், தஞ்சையில் தி.மு.கவின் முக்கியப் பிரமுகராக இருந்த எல். கணேசனோடு நெருங்கிப் பழகியவர்.

1967ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் எல். கணேசன் போட்டியிட்ட போது, அவருக்காகத் தேர்தல் பணியாற்றினார்.

இதற்கு நடுவில் பெருமகளூர் பள்ளிக்கூடத்தில் ஆசிரியராகவும் சிறிதுகாலம் பணியாற்றினார்.

"பெருமகளூர் பள்ளிக்கூடத்தில் வேலை பார்த்துவந்த நடராசனை நான்தான் வேலையிலிருந்து நிற்கச்சொன்னேன். அதற்குப் பிறகு அவர் எனக்காகத் தேர்தல் பணியாற்றினார்" என பிபிசியிடம் நினைவுகூர்ந்தார் எல். கணேசன்.

முதலமைச்சராக இருந்த சி.என். அண்ணாத்துரையின் மறைவுக்குப் பிறகு, கருணாநிதி முதலமைச்சராகப் பதவியேற்றபோது, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கென செய்தி மக்கள் தொடர்புத் துறையில் பணிகள் அளிக்கப்பட்டன.

மொத்தம் 59 பேர் இந்தப் பணியில் சேர்ந்தார்கள். அவர்களில் நடராசனும் ஒருவர். அந்தப் பட்டியலில் முதலில் இருந்தவர் நடராசன் என்கிறார் எல். கணேசன்.

இதற்குப் பிறகு, ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் தி.மு.கவின் முக்கியப் பிரமுகராக இருந்த மன்னை நாராயணசாமியின் உறவினரான வி.கே. சசிகலாவை, 1973 அக்டோபர் 16ஆம் தேதியன்று, முதல்வர் கருணாநிதி தலைமையில் திருமணம் செய்துகொண்டார்.

அதன் பிறகு, தஞ்சாவூர், கடலூர், ஆவின், மெட்ரோ வாட்டர் என பல இடங்களில் மக்கள் தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றினார் நடராசன்.

கடலூரில் மாவட்ட பி.ஆர்.ஓவாக இருந்த காலகட்டத்தில், அங்கு நடந்த ஜெயலலிதாவின் பொதுக்கூட்டத்தை வீடியோவில் பதிவுசெய்யும் ஆர்டரை, தன் மனைவி சசிகலா நடத்தி வந்த வினோத் வீடியோ விஷன் நிறுவனத்திற்குப் பெற்றார்.

இதன் மூலமாகவே, சசிகலாவும் நடராசனும் ஜெயலலிதாவுக்கு அறிமுகமாகி, அவருடைய அன்பைப் பெற்றதோடு, அவரது அரசியல் வாழ்வின் பின்புலமாகவும் அமைந்தனர்.

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் சசிகலா அடியெடுத்து வைத்து, அந்த வீட்டின் நிர்வாகத்தைப் பார்க்கத் துவங்க, கட்சிக்குள் ஜெயலலிதாவின் செல்வாக்கை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டார் நடராசன்.

1984ல் அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு, அமெரிக்காவில் சிகிச்சைபெற்று வந்தபோது, கட்சிக்குள் ஜெயலலிதாவின் செல்வாக்கை வலுப்படுத்தியதில் நடராசனின் பங்கு மிக முக்கியமானது.

எம்.ஜி.ஆர். மரணமடைந்து அவரது உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்தபோது, ஜெயலலிதா அவரது தலைமாட்டில் நின்றுகொண்டிருந்தார்.

அந்தத் தருணத்தில் அவரைச் சுற்றிவளைத்துப் பாதுகாத்தது தாங்களது குடும்பம்தான் என பிற்காலத்தில் ஊடகங்களில் தெரிவித்தார் நடராஜன்.

எம்.ஜி.ஆர். இறந்த பிறகு, கட்சியின் பொதுச் செயலாளராக ஜெயலலிதாவை அறிவித்து, திருநாவுக்கரசு, கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன் போன்ற மூத்த அமைச்சர்களை அதனை ஏற்கச் செய்ய கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு, அதைச் சாதித்தார் நடராசன்.

இதற்குப் பிறகு, ஆளுநர் ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதா தன் தலைமையில் அ.தி.மு.கவை ஒருங்கிணைக்க முயன்றுகொண்டிருந்தபோது, அந்த அணியில் சக்தி வாய்ந்த நபராக உருவெடுத்தார் நடராசன்.

அந்த காலகட்டத்தில் நெடுஞ்செழியன் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டு, ஜெயலலிதா கட்சியின் ஒரே தலைமையாக உருவெடுத்ததில் நடராசனின் பங்கு மிக முக்கியமானது.

இந்த காலகட்டத்தில், அ.தி.மு.கவின் ஜெயலலிதா அணிக்குள் நிலவிய குழப்பத்திற்கு நடராசனே காரணம் என திருநாவுக்கரசு போன்ற தலைவர்கள் குற்றம்சாட்டும் அளவுக்கு அந்த காலகட்டத்தில் கட்சிக்குள் செல்வாக்கு செலுத்தினார் நடராசன்.

இந்தத் தருணத்தில், 1988 ஜூலை 2ஆம் தேதியன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார் ஜெயலலிதா. அந்த அறிக்கையில்தான் முதல் முறையாக நடராசன் குடும்பம் குறித்து வெளிப்படையாகக் குறிப்பிட்டார் அவர்.

"நடராசனும் சசிகலாவும் என் குடும்ப நண்பர்கள். அவர்களுக்கும் அரசியலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை... நடராசனும் சசிகலாவும் எம்.ஜி.ஆர். காலத்திலேயே அவருடைய பூரண ஆதரவுடன் எனக்கு உதவியாக இருந்தவர்கள்." என்று ஜெயலலிதா அந்த அறிக்கையில் குறிப்பிட்டார்.

இதுவே, ஜெயலலிதாவிடம் நடராசனின் செல்வாக்கை காட்டும் வகையில் இருந்தது. அந்த காலகட்டத்தில் துவங்கப்பட்ட நமது எம்.ஜி.ஆர். பத்திரிகையை வெளியிட்ட ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தில் ஜெயலலிதா தவிர, சசிகலா, திவாகரன், தினகரன் என நடராசனின் குடும்பத்தினர் மட்டுமே பங்குதாரர்களாக இருந்ததும் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

அரசுப் பணியில் இருந்த நடராசன், அ.தி.மு.கவின் வேலைகளைப் பார்த்தது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், தனது அரசு ஊழியர் பதவியை 1988ல் ராஜினாமா செய்தார்.

இதற்குப் பிறகு முழு நேரமாக அரசியலில் ஈடுபட ஆரம்பித்த நடராசனுக்கும் ஜெயலலிதாவுக்குமான நல்லுறவு வெகுநாட்களுக்கு நீடிக்கவில்லை.

1991லேயே போயஸ் கார்டனைவிட்டு வெளியேறினார் நடராசன். இருந்தபோதும் அ.தி.மு.கவில் அவருக்கு அழிக்க முடியாத செல்வாக்கு இருந்தது என அக்கட்சியினர் வெகுவாக நம்பினார்கள்.

ஆனால், 1996ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஜெயலலிதாவோடு பல கட்டங்களில் முரண்பட்ட நிலையில், ஜெயலலிதாவின் ஆட்சிக்காலங்களில் நடராசனும் அவருக்கு நெருக்கமானவர்களும் கைது செய்யப்பட்டனர்.

2011 டிசம்பர் 19ஆம் தேதியன்று சசிகலா, அவரது கணவர் நடராசன் உள்பட 13 பேரை கட்சியிலிருந்து வெளியேற்றினார் ஜெயலலிதா.

இதற்குப் பிறகு, 2012ல் நடராசன் கைதுசெய்யப்பட்டார். ஜெயலலிதாவின் மரணம்வரை நடராசன் ஒதுக்கியே வைக்கப்பட்டிருந்தார்.

இதற்குப் பிறகு, போயஸ் கார்டன் வீட்டின் பக்கம் செல்லாமல் இருந்த நடராசன், அவர் உயிரிழந்த பிறகுதான் அங்கு சென்றார்.

அதற்குப் பிறகு முதலமைச்சரின் உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி ஹாலும் தென்பட்டார், நடராசன். ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட பிறகு, சில தொலைக்காட்சி ஊடகங்களிடம் பேசிய நடராசன், தங்கள் குடும்பம் ஆட்சிக்கு வருவதில் என்ன தவறு என்று கேள்வியெழுப்பினார்.

அதற்குப் பிறகு, 2017 பொங்கல் விழாவில் பேசிய, நடராஜன் "ஜெயலலிதாவை 30 ஆண்டுகளாக என் மனைவி சசிகலா தோளில் சுமந்தார். குடும்ப அரசியல் செய்வதாக கூறுகின்றனர். அன்றைக்கு ஜெயலலிதாவை எங்கள் குடும்பம்தானே காப்பாற்றியது" என்று கூறினார்.

அரசியலில் நடராசனின் இடம் சர்ச்சைக்குரியதாக இருந்த நிலையில், அவர் தன்னை ஓர் எழுத்தாளராகவும் பதிப்பாளராகவும் வெளிப்படுத்திக்கொண்டார்.

1990களில் ‘புதிய பார்வை‘ என்ற இதழை பாவை சந்திரனை ஆசிரியராக வைத்துத் துவங்கினார். நடுவில் நின்றுபோன அந்த இதழ் 2006வாக்கில் மீண்டும் மணாவை ஆசிரியராக வைத்து வெளியானது.

"சமூக, அரசியல் இதழாக நடத்தப்பட்ட இந்த இதழின் சுதந்திரத்தில் நடராசன் தலையிடவே மாட்டார். அவர் எழுதும் கட்டுரை வெளிவரும்.

மற்றபடி முழுக்க முழுக்க ஒரு சீரியஸான இதழாக அதனை வெளிவர அனுமதித்தார் அவர்" என்கிறார் பத்திரிகையாளர் மணா.

அவருடைய ‘தமிழ் அரசி‘ பதிப்பகத்தின் மூலம் அண்ணாவின் படைப்புகள், தன்னுடைய சுயசரிதையான நெஞ்சம் சுமக்கும் நினைவுகள், முள்ளிவாய்க்கால்: ரத்தம் தோய்ந்த குறிப்புகள், மொழிப்போராட்டம் குறித்த உயிருக்கு நேர் ஆகிய புத்தகங்களை அவர் வெளியிட்டார்.

புதிய பார்வை தவிர, தமிழ் அரசி என்ற இதழையும் அவர் சில காலம் நடத்தியிருக்கிறார்.

2009ல் ஈழப்போர் முடிவடைந்த பிறகு, அந்தப் போரில் மடிந்த வீரர்களுக்காக முள்ளிவாய்க்கால் முற்றம் என்ற பெயரில் ஒரு நினைவிடத்தை அமைப்பதில் மிக முக்கியப் பங்குவகித்தார் நடராசன்.

மேலும் தஞ்சாவூரில், பொங்கல் திருநாளை ஒட்டி தமிழர் கலை இலக்கியத் திருவிழாவை வருடாவருடம் நடத்தினார்.

அந்தக் கூட்டத்திற்கு தமிழ் ஆர்வலர்களை அழைத்துப் பேசவைப்பது, கௌரவிப்பது ஆகியவற்றின் மூலமும் தீவிர தமிழ் ஆர்வலர் அடையாளத்தையும் உருவாக்கிக் கொண்டார்.

சசிகலா சிறைக்குச் சென்ற நிலையில், எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராகி, தினகரன் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரானதும் கட்சி விவகாரங்களில் இருந்து ஒதுங்கியிருந்த நடராசனின் உடல் நலம் குன்றியது.

சிறுநீரகம், கல்லீரல் ஆகியவை செயலிலழந்த நிலையில், அவருக்கு மாற்று உறுப்புகள் பொறுத்தப்பட்டன. இதற்குப் பிறகு, எந்த விவகாரத்திலும் தலையிடாமல் இருந்துவந்த நடராசன், தனது வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார்.

இந்த நிலையில்தான், அவருக்கு மீண்டும் உடல் நலக் குறைவு ஏற்பட்டு மார்ச் 16ஆம் தேதி குளோபல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

தேர்தல் ஆணையம் தடை விதித்த ஜெயலலிதா காணொளி இதுதான்

காணொளிக் குறிப்பு,

ஜெயலலிதா காணொளி .

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: