கேரளா: மாணவிகளின் மார்பகங்களை தர்பூசணியுடன் ஒப்பிட்டு பேசிய பேராசிரியருக்கு எதிர்ப்பு

  • 21 மார்ச் 2018
கேரளா படத்தின் காப்புரிமை FACEBOOK / DIYA.SANA.7

கேரளாவில் கல்லூரி பேராசிரியர் ஒருவர், கல்லூரி மாணவிகளின் மார்பகங்களை தர்பூசணியுடன் ஒப்பிட்டு பேசியதால், அம்மாநிலத்தில் கல்லூரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாணவிகளின் மார்பகம் குறித்து பேராசிரியர் பேசியதின் வீடியோ இணையத்தில் வெளியாகி, மாணவர்கள் மத்தியில் எதிர்ப்பை கிளப்பியது.

சிலர் தர்பூசணி துண்டுகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெண்கள் என்ன உடை அணிய வேண்டும் என கூறப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, சில பெண்கள் கையில் தர்பூசணியுடன் மேலாடை அணியாத தங்களின் புகைப்படங்களைச் சமுக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள ஃபரூக் பயிற்சி கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் டி.ஜோகர் முன்னாவிர் பேசிய பதிவு, டூல் நியூஸ் வலைத்தளத்தில் வெளியான பிறகு சமூக வலைத்தளத்தில் பரவியது.

"தலையைச் சுற்றி ஷால் அணிந்துகொள்ளும் பெண்கள், ஆண்களைக் கவரும் மார்பகங்களை மறைப்பதில்லை" என மாணவிகளை பேராசிரியர் முன்னாவிர் விமர்சித்துள்ளார்.

''இது கடையில் தர்பூசணி பழம் பழுத்துள்ளதா என்பதை காட்டுவதற்காக வெட்டி வைத்திருப்பது போல் உள்ளது" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு ஆயிரக்கணக்கானவர்களால் பகிரப்பட்டது. கையில் தர்பூசணி துண்டுகளுடன் கோழிக்கோடு சாலைகளில் போராட்டக்காரர்கள் அணிவகுத்துச் சென்றனர்.

மாறுபட்ட அரசியல் கறுத்துக்கொண்ட பல மாணவ அமைப்புகளும் போராட்டத்தில் கலந்துகொண்டன.

படத்தின் காப்புரிமை AFP

''இக்கருத்து எல்லா பெண்களுக்கும் எதிரானது, கேரளத்தைப் போன்ற ஒரு மாநிலத்தில் இத்தகைய கருத்துகளை தாங்கிக்கொள்ள முடியாது'' என இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பின் கூட்டு செயலாளர் நிகில் பிபிசியிடம் கூறினார்.

பேராசிரியரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, இரண்டு பெண்கள் தர்பூசணியுடன் மேலாடை அணியாத தங்களின் புகைப்படங்களை பதிவிட்டுள்ளனர்.

அதில் ஒரு பெண்ணான ஆர்த்தி,'' மனித உடலை பாலியல் ரீதியாக பார்ப்பதால், எனது அரை நிர்வாண படத்தை பதிவு செய்தேன்''என பிபிசியிடம் தெரி்வித்தார்.

தனது புகைப்படங்களை பதிவு செய்ததில் இருந்து சிலர் தன்னை தகாத வார்த்தைகளில் அழைப்பதாகவும், மற்றவர்கள் இது ஒரு நல்ல யோசனை என கூறுவதாகவும் ஆர்த்தி விவரிக்கிறார்.

தனது புகைப்படத்தை பதிவிட்ட மற்றோரு பெண்ணான ரெஹனா பாத்திமா,'' எனது உடல், எனது உரிமை. அந்த பேராசிரியர் பெண்களை பொருட்கள் போல நடத்துகிறார்'' என்கிறார்.

''நன்றாகப் படிக்கும் பெண்ணின் அறிவிலும், அல்லது நன்றாக பாடும், கவிதை எழுதும், நடனம் ஆடும், விளையாட்டில் பதக்கங்களை குவிக்கும் பெண்களை பற்றியும் ஏன் பெரிதாக பேசுவதில்லை'' என ஒரு பெண் கேட்கிறார்.

பேராசிரியரின் இந்த கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என இந்திய யூனியன் முஸ்லிம் லீகைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து கேட்க ஃபரூக் பயிற்சி கல்லூரியை பிபிசி தொடர்புகொண்டது. ஆனால், எந்த பதிலும் கிடைக்கவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்