மத்திய நிதி பகிர்வு முறை: மாநில முதல்வர்கள், பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

ஸ்டாலின் படத்தின் காப்புரிமை Facebook/MK Stalin

இந்தியாவில் மாநிலங்களுக்கு எப்படி வரிவருவாயைப் பகிர்ந்தளிப்பது என்று பரிந்துரைக்கும் 15வது நிதி கமிஷனின் ஆய்வு முறைகள் மாநிலங்களின் நிதி உரிமைகளுக்கு எதிராக இருப்பதாக இந்தியாவில் உள்ள பத்து மாநில முதல்வர்களுக்கும் இந்தியப் பிரதமருக்கும் தி.மு.கவின் செயல் தலைவர் கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார்.

இந்தியாவில் மத்திய அரசால் வசூலிக்கப்படும் வரி வருவாய், நேரடியாகவும் பல்வேறு திட்டங்களின் மூலமும் மாநில அரசுகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறது. இதற்கான முறைகள், அளவு ஆகியவற்றை மத்திய நிதி ஆணையம் பரிந்துரை செய்கிறது. தற்போது இந்தியாவில் 15வது நிதி ஆணையம் செயல்பாட்டில் உள்ளது.

இந்த நிதி ஆணையத்தின் ஆய்வுவரம்பில், 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாக வைத்து, நிதி ஒதுக்கீடு செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. 1976ஆம் ஆண்டிற்குப் பிறகு, பல மாநிலங்கள் குறிப்பாக தென் மாநிலங்கள் தீவிர மக்கள் தொகை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் இறங்கிய நிலையில், 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கட்டுப்பாட்டை பயன்படுத்தினால், தங்களுக்கு பாதிப்பு நேருமென பல மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றன. இந்த பின்னணியில்தான் இந்தக் கடிதத்தை மு.க.ஸ்டாலின் எழுதியிருக்கிறார். இந்தக் கடிதம் ஆந்திரா, கேரளா, தெலுங்கானா, கர்நாடகா, பஞ்சாப், மேற்கு வங்கம், ஒடிசா, புதுச்சேரி, டெல்லி, தமிழ்நாடு ஆகிய பத்து மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மு.க. ஸ்டாலின் இந்த மாநில முதல்வர்களுக்கு எழுதிய கடிதத்தில், "2001 ஆம் ஆண்டு வரையிலும் அதற்கு பிறகும் நடைபெறும் அனைத்து தொகுதி மறுசீரமைப்புகளுக்கும் 1971 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்புதான் அடிப்படையாக இருக்க வேண்டும் என்று 1976 ஆம் ஆண்டு நிறைவேற்றப்ப்டடுள்ள 42-வது அரசியல் சட்ட திருத்தத்தின் பிரிவு 15 உறுதி செய்துள்ளது என்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள். 2001-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட 84 ஆவது அரசியல் சட்ட திருத்தப் பிரிவு 3-ன்படி மேற்கண்ட உறுதி (1971 மக்கள் தொகை கணக்கெடுப்பு) 2026 வரை நீட்டிக்கப்பட்டது. இதனால்தான் 'மக்கள் தொகை அடிப்படையிலான நிதி பகிர்வில் 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகை கடைப்பிடிக்கப்படும்' என்று 1976-க்கு பிறகு அமைக்கப்பட்ட அனைத்து மத்திய நிதி ஆணையத்திற்கும் ஆய்வு வரம்பு தொடர்ந்து நிர்ணயிக்கப்பட்டு வந்தது. ஆனால் முதல் முறையாக மாநிலங்களைக் கூட கலந்து ஆலோசிக்காமல் மத்திய நிதி ஆணையத்தின் ஆய்வு வரம்பு மாற்றப்பட்டுள்ளது" என்று குற்றம்சாட்டியிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்தக் குற்றச்சாட்டுக்கு அடிப்படையாக, இரு பரிந்துரைகளை மு.க. ஸ்டாலின் சுட்டிக்காட்டியிருக்கிறார். முதலாவதாக, மக்கள் தொகையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப சிறப்பாக செயல்படும் மாநிலங்களை ஊக்கப்படுத்தும் வகையில் நிதி பங்கீடு பரிந்துரை செய்யலாம் என்ற பரிந்துரையையும் இரண்டாவதாக, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மாநிலங்களுக்கான நிதி பங்கீடு குறித்து ஆணையம் பரிந்துரை செய்யலாம் என்ற பரிந்துரையையும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இந்த இரு ஆய்வு வரம்புகளும் தமிழ்நாடு போன்ற முன்னேறிய மாநிலங்களுக்கு மத்திய வரி வருவாயிலிருந்து நிதி கிடைப்பதில் ஒட்டு மொத்தமாக மோசமான தாக்கத்தை உருவாக்கும் என்றும் மக்கள் தொகை கட்டுப்பாட்டை நீண்ட காலத்திற்கு முன்பே கட்டுக்குள் கொண்டு வந்து விட்டதால் ஆய்வு வரம்பு 4-ன் படி நிதி ஒதுக்கீட்டில் வழங்கப்பட வேண்டிய ஊக்கத்தொகைக்கான பங்களிப்பையும் இழக்க வேண்டிவரும் என்றும் மு.க. ஸ்டாலின் தன் கடிதத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறார். மேலும், மக்கள் தொகை கட்டுப்பாட்டிற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமலிருக்கும் மாநிலங்களுக்கு மத்திய வரி வருவாயில் பெரும் பகுதியை திருப்பி விடுவதற்கு வித்திடும் என்றும் குற்றம்சாட்டியிருக்கிறார்.

மேலும் மத்திய அரசு புதிதாக அறிமுகப்படுத்தும் சமூக நலத்திட்டங்களை பா.ஜ.க. அல்லாத கட்சிகள் ஆட்சி செய்யும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் ஏற்கனவே செயல்படுத்திவிட்டதால், அந்தத் திட்டங்களை இந்த மாநிலங்களில் செயல்படுத்த முடியாது. ஆகவே அதன் மூலம் கிடைக்கும் ஊக்கத்தொகை கிடைக்காது என்பதையும் மு.க. ஸ்டாலின் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

"ஒரு வரையறைக்குள் கவர்ச்சித் திட்டங்களுக்கு செலவு செய்தது அல்லது அப்படி வரையறை ஏதுமின்றி கவர்ச்சித்திட்டங்களுக்கு செலவு செய்தது" என்ற என்ற பரிந்துரையைச் சுட்டிக்காட்டியிருக்கும் மு.க. ஸ்டாலின். மக்களால் தேர்வு செய்யப்படாத ஒரு நிதி ஆணையம் மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசு நிறைவேற்றும் திட்டத்தில் எது கவர்ச்சித் திட்டம் என்று முடிவு செய்வது அடிப்படையில் ஜனநாயக விரோதமானது என்று கூறியிருக்கிறார்.

"ஆகவே மாநிலங்களின் நிதி தன்னாட்சிக்கு எதிராக பாரபட்சமாக வகுக்கப்பட்டுள்ள மத்திய நிதி ஆணையத்தின் ஆய்வு வரம்புகளை மாநிலங்களுடனும், ஜி.எஸ்.டி. கவுன்சிலுடனும் கலந்து ஆலோசித்து திருத்தியமைக்க வேண்டும் என்ற எனது கோரிக்கைக்கு தாங்கள் ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என மாநில முதல்வர்களிடம் மு.க. ஸ்டாலின் ஆதரவு கோரியிருக்கிறார்.

இந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள குறைகளை உடனடியாக சரிசெய்ய வேண்டுமென இந்தியப் பிரதமருக்கும் நிதியமைச்சருக்கும் எழுதியுள்ள கடிதத்தில் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்