"சசிகலா தரப்பு தங்களுக்கு ஆதரவாக செய்திகளைத் தந்துள்ளது"

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை செய்துவரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா தாக்கல் செய்ததாகக் கூறப்பட்டு, வெளிவந்த தகவல்கள் உண்மையானவையல்ல என அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை KASHIF MASOOD

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்த நிலையில், அவரது உடல்நிலை குறித்தும் மரணம் குறித்தும் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டன.

இதனையடுத்து, ஜெயலலிதாவின் உடல்நிலை, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை, மரணம் ஏற்பட்ட சூழல் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது.

ஜெயலலிதாவின் வீட்டின் பணியாற்றியவர்கள், போயஸ் கார்டன் இல்லத்தில் அவருடன் வசித்தவர்கள், சிகிச்சையளித்த மருத்துவர்கள் போன்றவர்களிடம் விசாரணை ஆணையம் தினமும் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு தற்போது சிறையில் உள்ள ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா, எழுத்து மூலமாக பிரமாணப் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அந்தப் பிரமாணப் பத்திரத்தில், ஜெயலலிதாவுக்கு உடல் நலம் குன்றியது குறித்தும் அதன் பின்னணி குறித்தும் கூறப்பட்டிருந்ததாக, புதன்கிழமையன்று காலையில் வெளிவந்த செய்தித் தாள் ஒன்றில் விரிவாக செய்தி வெளியாகியிருந்தது.

படத்தின் காப்புரிமை DIBYANGSHU SARKAR/AFP/GETTY IMAGES

"சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதிலிருந்தே ஜெயலலிதா மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தார். அவருக்கு தொடர்ந்து சர்க்கரை அளவு அதிகரித்து வந்தது. தோல் சிகிச்சை மருத்துவர் நியமிக்கப்பட்டார். அவர் ஸ்டீராய்டு மருந்துகளைப் பரிந்துரைத்தார். செப்டம்பர் 19ஆம் தேதியே அவருக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், செப்டம்பர் 21ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் அவர் பங்கேற்றார்" என சசிகலா தனது பிரமாணப் பத்திரத்தில் கூறியிருந்ததாக அந்தச் செய்தி கூறியது.

மேலும், "செப்டம்பர் 22ஆம் தேதியன்று அவர் குளியலறையில் மயங்கி விழுந்ததாகவும் அப்போலோ மருத்துவமனையின் துணைத் தலைவர் விஜயகுமார் ரெட்டியின் உத்தரவின் பேரில் இரண்டு ஆம்புலன்சுகள் போயஸ் கார்டன் இல்லத்திற்கு வந்து, ஜெயலலிதாவை அழைத்துச் சென்றதாகவும்" சசிகலாக பிரமாணப் பத்திரத்தில் கூறியிருந்ததாக அந்தச் செய்தி தெரிவித்தது.

தமிழ் ஊடகங்களில் இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், இந்தச் செய்திக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் புதன் கிழமை மாலையில் மறுப்புத் தெரிவித்துள்ளது.

"சசிகலா தரப்பில் ஒரே ஒரு பிரமாணப் பத்திரம் மட்டுமே தாக்கல்செய்யப்பட்டது. அந்த பிரமாணப் பத்திரத்தை நீதிபதியைத் தவிர வேறு யாரும் படிக்கவில்லை. அப்படியிருக்கும் நிலையில், சசிகலாவின் பிரமாணப் பத்திரத்தில் உள்ளதாகக் கூறப்படும் தகவல்கள் ஆணையத்திலிருந்து வெளியில் சென்றிருக்க வாய்ப்பில்லை" என விசாரணை ஆணையத்தின் பெயர் தெரிவிக்க விரும்பாத அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

"அந்த நாளிதழில் உள்ள தகவல்களை சசிகலாவின் வழக்கறிஞர் கொடுத்திருக்க வேண்டும். பத்திரிகைச் செய்தியில் உள்ள பல தகவல்கள், பலருக்கும் தெரிந்தவைதான். அவையும் பிரமாணப் பத்திரத்தில் உள்ளன. ஆனால், சசிகலாவுக்கு சாதகமாக இருக்கும் வகையில் வேறு சில தகவல்கள் அந்தச் செய்தியில் வெளியிடப்பட்டுள்ளன" என அந்த அதிகாரி கூறியிருக்கிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: