’நாங்கள் ஏன் இந்துக்கள் இல்லை’ - லிங்காயத்துகள் அடுக்கும் காரணங்கள்

கர்நாடக மாநிலத்தில் லிங்காயத்து என்ற சமூக பிரிவை, இந்து மதத்தின் ஒரு பிரிவாக இல்லாமல், புதிய மதமாக அம்மாநில அரசு அங்கீகரித்து, லிங்காயத்து மதத்தை சிறுபான்மையினராக அறிவிக்கவேண்டும் என மத்திய அரசிடம் கர்நாடக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

படத்தின் காப்புரிமை Gopichand Tandle

பல ஆண்டு காலமாக கர்நாடகாவில் உள்ள லிங்காயத்து மக்கள் நடத்திவந்த போராட்டத்தின் விளைவே இந்த புதிய அறிவிப்பு என்றும், இந்து மதத்தில் இருந்து பல விதங்களில் வேறுபடும் லிங்காயத்து வழிபாடு, தனி மதம் என்பது ஆராய்ச்சி வாயிலாக நிரூபிக்கப்பட்ட உண்மை என்கிறார்கள் மதங்கள் குறித்து ஆய்வுகள் நடத்தும் ஆராய்ச்சியாளர்கள்.

வேதம், ஆகமம் இல்லாத மதம்

''லிங்காயத்திசம்- ஒரு தனி மதம்''(Lingayatism, An independent religion) என்ற புத்தகத்தை எழுதியவரும் 29 ஆண்டுகள் தத்துவத்துறையின் பேராசிரியராக பணிபுரிந்த எம்.என். மகாதேவப்பா, மூடநம்பிக்கைகளைப் பெரிதும் எதிர்க்கும் மதமாக 12ம் நூற்றாண்டில் பசவண்ணா லிங்காயத்து மதத்தை உருவாகினார் என்கிறார்.

''வேதங்கள், புராணங்கள், ஆகமங்களை நிராகரிக்கும் மதமாகவும், யாகங்கள் தேவையற்றவை என்றும் பசவண்ணா லிங்காயத்து மதத்தை ஏற்படுத்தினார். கடவுளுக்கு பலி கொடுக்கும் வழக்கம் லிங்காயத்து வழிபாட்டில் இல்லை. 12-ஆம் நூற்றாண்டில் பசவண்ணா எழுதிய கருத்துகள், பின்னர் வந்த அக்கம்மா தேவி போன்றோர் வகுத்த நெறிகளைக் கொண்டதாக இந்த வழிபாடு உள்ளது என்பதால், தற்போது இந்து மதம் என்ற அறியப்படும் வழிபாட்டு முறையில் இருந்து லிங்காயத்து சமூகம் முற்றிலும் வேறுபடுகிறது'' என்கிறார் மகாதேவப்பா.

லிங்காயத்து வழிபாடு தொடர்பாக 18 புத்தகங்களை எழுதியுள்ள மகாதேவப்பா, ''தற்போது இந்து மதத்தின் கீழ் ஒரு சாதி பிரிவாக லிங்காயத்து வழிபாடு கருதப்படுகிறது. சாதி பாகுப்பாட்டை எதிர்த்தவர் பசவண்ணா. லிங்காயத்து மக்கள் அணிந்துள்ள லிங்கம், சைவ கோயில்களில் உள்ள லிங்க வடிவம் அல்ல. பீடம் இல்லாமல், ஆதிகால லிங்க வடிவத்தை கொண்ட அமைப்பு அது,'' என்றார் அவர்.

Image caption சா.சரவணன்

''ஆறு மதங்களின் கலவை இந்துமதம்''

லிங்காயத்து வழிபாடு முறை எவ்வாறு இந்து மதத்தில் இணைக்கப்பட்டது என்பதை தெரிந்துகொள்ள சென்னை பல்கலைக்கழகத்தின் சைவசித்தாந்த துறையின் தலைவர் சரவணனை சந்தித்தோம்.

''லிங்காயத்து மக்கள் அணியும் லிங்கத்தை சைவ மதத்தோடு இணைத்துப் பார்ப்பதால் வரும் குழப்பம் தான் இது. வரலாற்று ரீதியாக பார்த்தால், இந்து என்ற ஒரு மதம் கிடையாது. ஆறுவகையான மதங்களை தொகுத்து தற்போது பழக்கத்தில் இருப்பது இந்துமதம். சிவன், திருமால், முருகன், கணபதி, சக்தி, சூரியன் என ஒவ்வொரு கடவுளும் தனித்தனி மதங்களாக வழிபடப்பட்ட தெய்வங்கள். அரசியல் காரணங்களுக்காகவும், திருக்கோயில்களை நிர்வாகம் செய்யவும், பூர்வ ஆச்சாரியர்கள் இந்த மதங்களை இணைத்தனர்,'' என்றார்.

அவர் தொடர்ந்து, ''வேதம், தொல்காப்பியம், சங்கநூல்கள் போன்ற எதிலும் இந்து என்ற வார்த்தையே கிடையாது என்பது வெளிப்படை. ஆறு மதங்கள் இணைக்கப்பட்டு இந்துமதம் என்று கருதப்பட்டது போல, முன்னர் ஒரு பிரிவாக கருதப்பட்ட லிங்காயத்து வழிபாடு, அரசியல் காரணங்களுக்காக தனி மதம் என்ற வாதம் தற்போது வலுத்து நிற்கிறது,'' என்று கூறினார்.

லிங்காயத்து தத்துவம் குறித்து விளக்கிய அவர்,''லிங்கத்தை அங்கத்தில் அணிந்து, அதை வழிபட்டு ஐக்கியம் அடைபவர்கள் லிங்காயத்து மக்கள். இறைவனுக்கும், பக்தனுக்கும் இடையில் யாரும் தேவையில்லை என்றும் குரு என்பவர் வழிகாட்டவே தவிர, யாரும் யாருக்கும் கீழ் நிலையில் இல்லை என்பது லிங்காயத்து வழிபாட்டில் அடிப்படையான கருத்து. சாதி படிநிலையை வலியுறுத்தும் வருணாசிரம தர்மத்தை விலக்கி வைப்பதோடு இல்லாமல் ஆண், பெண் பேதம் இன்றி இருவரும் கழுத்தில் லிங்கத்தை அணியவும், இறைவனை பூசை செய்ய அனுமதிக்கும் வழிபாடு கொண்டது லிங்காயத்து வழிபாடு,'' என்றார் சரவணன்.

Image caption எம்.என். மகாதேவப்பா

''லிங்காயத்துகள் இந்துகள் இல்லை''

கர்நாடகாவில் உள்ள லிங்காயத்து மக்களுக்கு தனி மதஅடையாளம் தேவை என பிரச்சாரம் செய்தவர்களில் முக்கியமானவர் கர்நாடக அரசாங்கத்தின் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், லிங்காயத்து தர்மா ஹொரதா சமிதியின் ஒருங்கிணைப்பாளரான எஸ்.எம்.ஜாம்தார்.

லிங்காயத்து பிரிவு புதிய மதம் என கர்நாடக அரசு தற்போது அறிவித்திருந்தாலும், காலங்காலமாக லிங்காயத்துகள் இந்துக்கள் இல்லை என்று போராடிவந்ததாக கூறுகிறார் ஜாம்தார்.

''பல கடவுள் வடிவங்களை இந்து மதத்தில் பின்பற்றுகிறார்கள். லிங்காயத்து மக்களைப் பொறுத்தவரை சிவன் ஒருவரே கடவுள். அவரை வணங்க யாருக்கும் தடை இல்லை. ஹோமம் வளர்த்து பூசை செய்யும் முறை இங்கு இல்லை. சாதி,பேதம் என எந்த வேற்றுமைகளையும் இருக்கக்கூடாது என்பதற்காக பசவண்ணர் தோற்றுவித்த இந்த மதம், இந்து மதத்தில் அடங்காது. லிங்காயத்துகள் இந்துக்கள் இல்லை,'' என பிபிசிதமிழிடம் விளக்கினார்.

கர்நாடகா மட்டுமில்லாமல், தமிழ்நாட்டிலும் விழுப்புரம், மதுரை, திண்டுக்கல், சென்னை போன்ற ஊர்களில் லிங்காயத்து வழிபாட்டைப் பின்பற்றும் மக்கள் வசித்துவருகிறார்கள்.

Image caption மஹாதேவப்பா மற்றும் அவரது மனைவி சர்வமங்களா

பெண்களுக்கு சம அந்தஸ்து

பசவண்ணா கூறியதுபோலவே லிங்க வழிபாடு பின்பற்றப்படுவதாகக் கூறுகிறார் சென்னையைச் சேர்ந்த 70 வயதாகும் வசந்தகுமாரி.

''பெண்கள் மாதவிலக்கு காலங்களில்கூட இறைவனுக்குப் பூசை செய்யலாம் என்பதை வலியுறுத்தும் வழிபாடு இது. தீட்டு காலம் கிடையாது. எப்போதும் லிங்கத்தை ஒரு பெட்டியில் மூடி, சங்கிலியில் கோர்த்து கழுத்தில் அணிந்திருப்போம், தினமும் லிங்கத்திற்கு பூசை செய்வோம். தாலிக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறார்களோ அதுபோலவே லிங்கத்தை அணிந்திருப்போம். தாலியைக் கழற்றினால் கூட, லிங்கத்தை கழற்றமாட்டோம்,''என்று வசந்தகுமாரி தெரிவித்தார்.

லிங்காயத்து குடும்பங்கள் தங்களது வழிபாடு இந்து மத வழிபாட்டில் இருந்து வித்தியாசமானது என்பதை தனது நண்பர்களிடமும், உறவினர்களிடமும் பலமுறை விளக்கியுள்ளதாக கூறும் வசந்தகுமாரி, தனது இரண்டு மகன்களும் லிங்காயத்து முறையை பின்பற்றுவதாகவும் கூறினார்.

''குழந்தை பிறந்தவுடன் லிங்கம் உள்ள ஒரு சங்கிலியை அணிவித்துவிடுவோம். யாரவது இறந்துவிட்டாலும், லிங்கத்துடன் அவரை புதைத்துவிடுவோம். காலம் முழுவதும் இறைவனை தொழுவதற்கு எந்த தடையும் இல்லை என்பதையே இந்த வழிபாடு சொல்கிறது,'' என்றார் வசந்தகுமாரி.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: