'பாண்டவராக' விரும்பும் ராகுல்காந்தி மகாபாரதத்தில் இருந்து கற்க வேண்டியது என்ன?

படத்தின் காப்புரிமை PUNEET BARNALA/BBC

"ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் குருச்சேத்திரத்தில் மாபெரும் யுத்தம் நடைபெற்றது. பாண்டவர்கள் ஐவராக இருந்தாலும், நல்லவர்கள், தர்மத்தின் சார்பில் போரிட்டவர்கள். கெளரவர்களின் பலம் அதிகமாக இருந்தாலும் அவர்கள் தீயவர்கள். உரிமைக்கான, ஆட்சி அதிகாரத்திற்கான மகாபாரத யுத்தத்துடன் இன்றைய அரசியல் சூழ்நிலை ஒப்பிட்டுப் பார்க்கப்படுகிறது.

''பலத்தின் அடிப்படையில் பா.ஜ.கவும் ஆர்.எஸ்.எஸ்ஸும் கெளரவர்களாகவும், பாண்டவர்களாக காங்கிரஸும் சித்தரிக்கப்படுகின்றனர்."

நிச்சயமாக, இதற்கு பாரதிய ஜனதா கட்சி தக்க பதிலடி கொடுக்கும் என்பது தெரிந்ததே. ராமர் இருப்பதையே ஏற்றுக்கொள்ளாதவர்கள், எப்படி தங்களைத் தாங்களே பாண்டவர்கள் என்று கூறிக்கொள்வது ஆச்சரியமாக உள்ளது என மத்திய அமைச்சர் நிர்மாலா சீதாராமன் எதிர்தாக்குதலை தொடுத்தார். மேலும் பல சொற்போர்கள் தொடரும் சாத்தியங்களும் தென்படுகிறது.

ராகுலுக்கு மகாபாரதம் நினைவுக்கு வந்தது ஏன்?

படத்தின் காப்புரிமை PUNEET BARNALA/BBC
Image caption பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள்

ஆனால் ராகுல் காந்தி மகாபாரதத்தை ஏன் உதாரணமாக குறிப்பிட்டார்? காரணம் எதுவுமே இல்லையென்றாலும்கூட, தனக்கு சாதகமான, பா.ஜ.கவுக்கு எதிர்மறையான தோற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறார் ராகுல்.

மூத்த பத்திரிகையாளர் நீரஜா செளத்ரியிடம் பிபிசி இதுபற்றி பேசியபோது, ''இது இந்துமத புராணக் கதை என்று கூறிய ராகுல்காந்தி, ஆலயம் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். இதைத்தவிர, கடவுள் எல்லா இடத்திலும் இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்''.

மேலும், ''நம்மை முஸ்லிம் கட்சியாக சித்தரிப்பார்கள் என்று சொன்ன சோனியா காந்தி, கெளரவர்கள்-பாண்டவர்கள் என்ற சூத்திரமும் முன்வைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.''

இரு அரசியல் கட்சிகளும் தங்களுக்கு சாதகமான வாதங்களை முன்வைப்பது இயல்பானதே. ஆனால் தற்கால அரசியல் சூழலை மகாபாரதத்துடன் ஒப்பிட்டு, தன்னை பாண்டவராக கருத ராகுல் காந்தி விரும்பினால் அது சரியானதாக இருக்குமா?

சரி, பாண்டவர்கள், கெளரவர்கள் அல்லது மகாபாரதத்தின் ஒரு கதாபாத்திரத்திடமிருந்து ராகுல் காந்தி எத்தகைய படிப்பினையை கற்றுக் கொண்டால் அது நாட்டுக்கும் கட்சிக்கும் நன்மை பயக்கும்?

ஆக்கப்பூர்வமான அரசியல்

படத்தின் காப்புரிமை PUNEET BARNALA/BBC
Image caption அமித் ஷா

மற்றவர்களை கூண்டோடு அழிக்க முயற்சிப்பவர்கள், தங்களுக்கான குழியை சுயமாகவே வெட்டிக் கொள்வார்கள் என்பதை மகாபாரதம் விரிவாக விளக்குகிறது. கெளரவர்களின் நடவடிக்கைகளின் விளைவு இதுதானே? இந்த படிப்பினையை காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவர் ராகுல் காந்தியும் விரைவில் கற்றுத்தேற வேண்டும். கடந்த காலத்தில் இப்படித்தானே அவர்கள் பல இழப்புகளை எதிர்கொண்டனர்?

முதலில் குஜராத்திலும் பிறகு நாடாளுமன்ற தேர்தலிலும் சோனியா காந்தி மற்றும் பிற காங்கிரஸ் தலைவர்கள், நரேந்திர மோடியைத் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசியதன் பலனை மோதி அறுவடை செய்துவிட்டார்.

இத்தகைய சூழ்நிலையில், தனிநபர் சார்ந்த எதிர்மறை அரசியலை முன்னெடுப்பதைவிட, பா.ஜ.க அரசின் "தோல்வி" என்ன என்பதை ராகுல் காந்தி அடிக்கோடிட்டுக் காட்ட வேண்டும். அதோடு, நிலைமையை மாற்ற வேண்டிய அவசியங்களையும் மக்களிடம் அழுத்தமாக முன்னெடுத்துச் செல்லவேண்டும்.

பிரியா நட்பு தேவை

படத்தின் காப்புரிமை PUNEET BARNALA/BBC
Image caption சச்சின் பைலட்

மகாபாரதத்தில், கிருஷ்ணன்-அர்ஜுனன், துரியோதனன்-கர்ணன் என நட்புக்கான உதாரணங்கள் அதிகம் உள்ளன. காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும், நட்பின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்ப, நண்பர்களின் கோரிக்கைகளையும் ஏற்றுக் கொள்ளவேண்டும்.

வலுவான நட்பு மலையையும் மடுவாக்கும் என்பதை உணர்த்துவதற்கு, கோரக்பூர் மற்றும் ஃபூல்பூரில் உள்ள சமாஜ்வாதி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் நட்பு நிரூபித்துள்ளது. ராகுல் இதை உதாரணமாக எடுத்துக்கொண்டு 2019 ஆம் ஆண்டுக்கு இன்னும் அதிக காலம் இல்லாத நிலையில், வலுவான நட்பை உருவாக்கி, கூட்டணியை பலப்படுத்தவேண்டும்.

அதே நேரத்தில், காங்கிரஸ் வலுவாக இல்லாத மாநிலங்களில், பிராந்தியக் கட்சிகளுடன் இணக்கமான நட்பை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். ஒரு சமயம் மூத்த அண்ணனாக செயல்பட்டால், சில நேரங்களில் சின்னத் தம்பியாக தலைவணங்க வேண்டும் என்ற அரசியல் சாதுரியத்தையும் ராகுல் கற்றுக்கொள்ளவேண்டும்.

அரைகுறை அறிவு ஆபத்தல்ல; பேராபத்து.

படத்தின் காப்புரிமை PUNEET BARNALA/BBC
Image caption குலாம் நபி ஆஸாத்

மகாபாரத அபிமன்யுவின் தைரியத்தையும் துணிச்சலையும் பாராட்டாமல் இருக்கமுடியாது. ஆனால் தீரனும் வீரனுமான அபிமன்யுவின் அரைகுறை அறிவுதான் அவரை பேராபத்திற்கு ஆளாக்கியது என்பதையும் ஒப்புக்கொள்ள தானே வேண்டும்? சக்ரவியூகத்திற்குள் நுழையத் தெரிந்த அவருக்கு, அதிலிருந்து வெளியேற தெரியாததே அவரின் அகால மரணத்திற்கு காரணமானது.

பொதுவாக ராகுல் காந்தி பேசும்போது, விஷயம் தெரியாமலோ, அல்லது விஷயத்தை ஓரளவு தெரிந்துக் கொண்டோ அல்லது தேவையில்லாத கருத்துக்களையோ பேசியிருப்பார். இதை யூடியூபில் பல காணொளிக் காட்சிகளில் பார்க்க முடியும்.

தான் பேசியது தவறு என்றால் அதை ஒப்புக் கொள்வதற்கும் அவர் தயங்குவதில்லை என்றாலும், அடுத்தமுறையாவது அதுபோன்ற தவறுகளை தவிர்க்கிறாரா என்பது கேள்விக்குறியே. மத்திய அரசை எதிர்த்து பேசுவதற்காக உண்மைகளை குழப்பி பேசவேண்டிய அவசியம் இல்லை.

நீரஜா செளத்ரியின் கருத்துப்படி, ராகுல் காந்தி, முன்பிருந்ததைவிட தற்போது மிகவும் மாறிவிட்டார். ஆனால், அவரை நரேந்திர மோதியுடன் ஒப்பிட்டால், மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இருப்பதை மறுக்கமுடியாது.

வீழ்வதும் மீண்டு எழுவதற்கே

படத்தின் காப்புரிமை PUNEET BARNALA/BBC
Image caption அஷோக் கேஹ்லாட்

மகாபாரதத்தில் கர்ணனின் கதாபாத்திரம் மிகவும் சுவாரசியமான வகையில் அமைந்துள்ளது. கர்ணன் பல ஆண்டுகள்வரை, 'சூத்திரன்' என்று அழைக்கப்பட்டு, சாதிய ரீதியிலான பாகுபாடு மற்றும் அவமதிப்புகளை எதிர்கொண்டார்.

பாண்டவர்கள் 14 ஆண்டுகால வனவாசத்தின்போது உயிருக்கே ஆபத்தான பல சவால்களை எதிர்கொண்டனர். அதிலும் வனவாசத்தின் இறுதியில் 'அஞ்ஞாத வாசத்தின்' போது பல சிரமங்களை எதிர்கொண்டனர்.

ஆனால் அவற்றை பொறுமையுடனும், திறமையுடனும் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதை பஞ்ச பாண்டவர்களிடம் இருந்தும், அவர்களின் 'மூத்த' அண்ணனான கர்ணனிடம் இருந்தும் ராகுல் காந்தி கற்றுக்கொள்ளலாம்.

அதேபோல, திறமையுடன் பொறுமையும் கடின உழைப்பும் இருந்தால் வெற்றி தூரமில்லை என்பதை நரேந்திர மோதி நிரூபித்திருக்கிறார். நரேந்திர மோதி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, அவருக்கு பல தடைகள் இருந்தன, ஆனால் தடைக்கற்களை வெற்றிப் படிக்கட்டுகளாக மாற்றி அவர் பிரதமராக மகுடம் சூடினார்.

இதேபோல், ராகுல் காந்தியின் முன்னும் பல வாய்ப்புகள் உள்ளன. காங்கிரஸ் பல்வேறு தரப்பிலும் பிரச்சனைகளை சந்திக்கும் காலகட்டத்தில் தலைமை பொறுப்பை ஏற்றிருக்கிறார் ராகுல். ஆனால் இந்த சிக்கல்கள்தான் ஒருவரின் சீரிய திறமையை வெளிக்கொணரும் என்பதையும் ராகுல் உணரவேண்டும்.

காலத்திற்கு ஏற்ற மாற்றங்கள் அவசியம்

படத்தின் காப்புரிமை PUNEET BARNALA/BBC
Image caption மல்லிகார்ஜுன் கார்கே

பாண்டவர்கள் நாட்டை விட்டு வெளியேறி காட்டில் பல ஆண்டுகளாக சுற்றித் திரிந்தனர். அந்த நேரத்தில், அவர்கள் தங்களை உருமாற்றி வெவ்வேறு வேலைகளை செய்தனர் என்று மகாபாரதம் கூறுகிறது.

அரசியல் காட்சிகளும், சந்தர்ப்பங்களும் மாறக்கூடியவையே. அரசியலின் போக்கை மட்டும் மாற்றினால் போதுமா? அரசியல் தலைவர்களும் காலத்திற்கு ஏற்ப மாற வேண்டாமா? ராகுல் காந்தியின் தோள்களில் காங்கிரஸ் கட்சி என்ற பெரும் பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளது.

காங்கிரஸ் எதிர்கொள்ள வேண்டிய பா.ஜ.க பகாசூரனாக வலுவாக நின்றால், மறுபுறத்தில் பிராந்தியக் கட்சிகள் காங்கிரஸுக்கு சவாலாக இருக்கின்றன. அதில் பல கட்சிகள் காங்கிரஸில் இருந்து பிரிந்து சென்று புதிதாக உதயமானவை என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இதற்கு இடையில் தனக்கான நண்பர்களை மட்டுமல்ல, எதிரிகளையும் காங்கிரஸ் சரியாக அடையாளம் காணவேண்டும். அரிதாரத்தை மாற்ற வேண்டிய நேரம் இது.

பாண்டவர்களாக காங்கிரஸ் மாறுமா?

படத்தின் காப்புரிமை PUNEET BARNALA/BBC
Image caption ராஜ்நாத் சிங்

சொல்வது சுலபம், செய்வது கடினம் என்பது உண்மைதான். இறங்குமிடத்தில் இருக்கும் சூழலில், இருக்கும் இடத்தை தக்கவைத்துக் கொண்டு, பிறகு வலுவாக ஏறுமுகத்தில் ஏறவேண்டும். இதுவே ராகுலின் முன் நிற்கும் பிரம்மாண்டமான சவால்.

''ராகுல் காந்தியின் இந்தக் குறிப்பிட்ட பேச்சை நான் கேட்கவில்லை. ஆனால், படித்தேன். அப்போது என் மனதில் என்ன தோன்றியது தெரியுமா? எல்லாம் சரி, காங்கிரஸ் கட்சியில் பாண்டவர் யார்?'' என்று கேள்வி எழுப்புகிறார் மூத்த பத்திரிகையாளர் மதுகர் உபாத்யாய்.

''காங்கிரஸில் தர்மனுடன் ஒப்பிடும் சத்தியவான் யார்? இலக்கை தவறவிடாத நுண்பார்வை கொண்ட அர்ஜூனன் யார்? நிகரில்லா பலம்கொண்ட பீமன் யார்? சாதுர்யமான நகுல-சகாதேவர்கள் காங்கிரஸில் இருக்கின்றார்களா? இந்த ஐந்து கதாபாத்திரங்களின் சிறப்பம்சங்களில் ஓரளவாவது கொண்ட தலைவர்களை காங்கிரஸ் கட்சியால் அடையாளம் காண முடியுமா?"

இந்த நிலையில் ராகுல் காந்தி எப்படி இவ்வாறு ஒப்பீடு செய்தார்? ''உண்மையில், ராகுல் காந்தி ஒரு மையக் குழுவை அமைக்க வேண்டும் என்பதைத்தான் ராகுல் காந்தி குறிப்பிடுவதாக நினைக்கிறேன்." என்கிறார் மதுகர் உபாத்யாய் சொல்கிறார்

"மகாபாரதத்தை காங்கிரஸ் தலைவர் நினைவுகூர்கிறார் என்றால், அவர் பாண்டவர்களை உருவாக்க வேண்டும் என்பதையும் புரிந்துக் கொள்ள வேண்டும். தற்போது காங்கிரஸ் கட்சி, பகுதி நேர தலைவர்களின் கட்சியாக மாறிவிட்டது. பகுதி நேர தலைவர்கள், எப்போதும் முழுமையான தலைவராக முடியாது என்பதையும் உணரவேண்டும்."

போட்டி சுலபமானது இல்லை

படத்தின் காப்புரிமை PUNEET BARNALA/BBC
Image caption நிதின் கட்கரி

"காங்கிரஸ் முன் நிற்கும் சக்தி, இரவும்-பகலும், நனவிலும்-கனவிலும் அரசியல் செய்பவர்களின் சக்தி. அவர்களின் மனதில் அரசியலை தவிர வேறு எதுவும் கிடையாது. அவர்கள் முழு நேர அரசியல்வாதிகள் என்பதை விட, அரசியலுக்குள் ஒன்றிப்போனவர்கள்" என்கிறார் மதுகர் உபாத்யாய்.

இதைப் பற்றி நீரஜா செளத்ரி எதையும் சொல்லவில்லை என்றாலும், ராகுல் அர்ஜுனனாக விரும்புகிறாரா? அல்லது வேறு யாராவதாக விரும்புகிறாரா என்று கேள்வி எழுப்புகிறார்.

''தற்போதைய சூழ்நிலையில் மகாபாரத கிருஷ்ணனின் பொறுப்பு ஏற்கும் ஒருவர் தேவை. அது யாராக இருக்க முடியும்? என்னைப் பொருத்தவரையில், சோனியா காந்தி கிருஷ்ணரின் கதாபாத்திரத்தை ஏற்கலாம், ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் தலைமை பொறுப்பை ஏற்கலாம்.'' என்கிறார் நீரஜா செளத்ரி.

மோதியை மையமாக வைத்தே காய்கள் நகர்த்தப்படும்

படத்தின் காப்புரிமை PUNEET BARNALA/BBC
Image caption அருண் ஜெய்ட்லி

''அண்மையில் சோனியா எதிர்கட்சிகளுக்கு இரவு விருந்து அளித்து அனைவரும் ஒன்றுகூடி கலந்தாலோசிக்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்தினார். ஆனால் எதிர்கட்சிகள் அனைத்தும் இணையுமா என்பது சந்தேகம்தான். மோதியை மைய இலக்காக வைத்தே இப்போதைய அரசியல் சூழ்நிலையில் அரசியல் வியூகம் அமைக்கப்படும்.

"பா.ஜ.க இடைத்தேர்தலில் தோற்றுவிட்டது என்று எதிர்கட்சிகள் எக்காளமிட்டாலும், அதற்கு முகாந்திரம் இருந்தாலும், இந்த இடைத்தேர்தலில் மோதி எந்தவொரு பங்கையும் வகிக்கவில்லை என்பதும், தோல்வியடைந்தது பிராந்தியத் தலைவர்கள் என்பதும் கருத்தில் கொள்ளக்கூடியது."

இதைத் தவிர, காங்கிரஸ் கூட்டத்தில் 'நடைமுறைக்கு உகந்த அணுகுமுறை' என்பதையும் ராகுல் சுட்டிக் காட்டினார். "இதற்கு என்ன அர்த்தம்? பிரதமர் பதவி வேண்டும் என்ற நிலைப்பாட்டில் காங்கிரஸ் உறுதியாக நிற்காது என்பதா?

ஆனால், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது நரேந்திர மோதிக்கு நன்மையை கொடுக்கும் வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்விக்கு, "ஆமாம், அதுவும் நடக்கலாம். எதிர்கட்சிகள் அனைவரும் ஒன்றிணைந்து தன்னை இலக்கு வைப்பதாக உணர்ச்சிகரமான துருப்புச்சீட்டை மோதி பயன்படுத்தலாம், அதில் அவருக்கு பயனும் கிட்டலாம்" என்று பதிலளிக்கிறார் நீரஜா.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: