தமிழக காவல்துறை தலைமை அலுவலகம் முன்பு காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

சென்னையில் தமிழகக் காவல்துறை தலைமை அலுவலகம் முன்பாக ஆயுதப்படைக் காவலர்கள் இருவர் தீக்குளிக்க முயற்சித்தனர்.

உயரதிகாரிகளின் கொடுமைகளின் காரணமாக, தாங்கள் இந்த முடிவுக்கு வந்ததாக அவர்கள் தெரிவித்தனர். ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளைக் காவல்துறை மறுத்துள்ளது.

சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள தமிழகக் காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு தேனி மாவட்டம் ஆயுதப் படைப் பிரிவில் இரண்டாம் நிலைக் காவலர்களாகப் பணியாற்றும் ரகு, கணேஷ் ஆகிய இருவரும் மனு அளிப்பதற்காக வந்தனர்.

அலுவலகத்திற்கு உள்ளே சென்ற இருவரும் பிறகு வெளியில் வந்து செய்தியாளர்களிடம் பேசினர்.

அப்போது, தாங்கள் இருவரும் 2013ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்து, பல்வேறு மாவட்ட ஆயுதப் படைகளில் பணியாற்றியதாகவும் கடந்த எட்டு மாதங்களாகத்தான் சொந்த மாவட்டமான தேனியில் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தனர்.

இந்நிலையில், தேனி மாவட்ட ஆயுதப்படையில் உள்ள ஆய்வாளர் சீனிவாசன் என்பவர் தங்களை மோசமாக நடத்துவதாகவும் தற்போது தாங்கள் எவ்வித காரணமும் இன்றி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

இதனால் தனது திருமணம் நின்றுபோய்விட்டதாக கணேசன் குற்றஞ்சாட்டினார்.

இவர்களது பேட்டியை ஊடக கேமராக்கள் படம் எடுத்துக்கொண்டிருந்தபோதே, அவர்கள் இருவரும் தங்களது பையில் வைத்திருந்த மண்ணெண்ணையை எடுத்து தலையில் ஊற்றி, தற்கொலைக்கு முன்றனர்.

இதையடுத்து அங்கிருந்த காவலர்கள் தடுத்து அவர்களைக் காப்பாற்றினர். இதையடுத்து மெரீனா காவல் நிலையத்தில் வைத்து அந்தக் காவலர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

இதற்கிடையில் இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்த தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன், அந்தக் காவலர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார்.

இந்தக் காவலர்கள் தொடர்ந்து சீருடை அணிந்த நிலையிலேயே ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்டு வந்ததாகவும் தங்களுடைய மூத்த அதிகாரிகளிடம் எப்போதுமே தகராறு செய்துவந்ததாகவும் பாஸ்கரன் குற்றஞ்சாட்டினார்.

கம்பம் ரேக்ளா பந்தையத்திற்கு பாதுகாப்பிற்குச் சென்றபோது இவர்கள் முகம் சுளிக்கும் வகையில் நடந்துகொண்டதாகவும் தங்களைக் கண்டிக்கும் அதிகாரிகள் குறித்து போஸ்டர்களை அடித்து ஒட்டுவதாகவும் பாஸ்கரன் கூறினார்.

இதன் காரணமாகவே இவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் சாதி ரீதியான பாகுபாடு காட்டப்பட்டதாகக் கூறப்படுவது உண்மையல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த சில வாரங்களில் தமிழக காவல்துறையைச் சேர்ந்த இரு காவலர்கள் தற்கொலை செய்துகொண்ட நிலையில், இந்தக் காவலர்களின் தற்கொலை முயற்சி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்