ஏழு மடங்காக அதிகரிக்கும் உலகின் தண்ணீர் தேவை #WorldWaterDay

படத்தின் காப்புரிமை AFP

"நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும்

வான்இன்று அமையாது ஒழுக்கு" என்கிறது திருக்குறள்.

நீர் இல்லை என்றால் உலகில் எந்த உயிரினமும் உயிர் வாழ முடியாது. ஆனால், நீரின் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்துள்ளோமா என்பது நமக்கு நாமே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி. வரும் தலைமுறையினருக்கு நாம் விட்டுச் செல்லக் கூடிய மிகப் பெரிய சொத்துகளில் ஒன்று நீர் வளம். அது சாத்தியமா?

அதிகரிக்கும் தண்ணீர் தேவை

படத்தின் காப்புரிமை Getty Images

"மக்கள் தொகை அதிகரிக்க தண்ணீரின் தேவையும் அதிகரிக்கும். ஓர் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு இந்த உலகில் மக்கள் தொகை மூன்று மடங்குதான் அதிகரிக்கிறது, ஆனால் தண்ணீரின் தேவை ஆறுலிருந்து ஏழு மடங்கு வரை அதிகரிக்கிறது" என்கிறார் எழுத்தாளர் மற்றும் சூழலியலாளர் நக்கீரன்.

நேரடி தண்ணீர் புழக்கத்தை விட மறைநீர் (Virtual Water) பயன்பாடு அதிகமாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மறைநீர் என்றால் என்ன?

எடுத்துக்காட்டாக, நீங்கள் கோதுமை எடுத்துக் கொள்கிறீர்கள் என்றால் அதை விளைவிக்க 1,300 டன் நீர் தேவைப்படும். இதுமட்டுமில்லாமல் நீங்கள் பயன்படுத்தும் எந்த பொருளை தயாரிக்கவும் தண்ணீர் தேவைப்படும். அந்த மறைமுக நீரே மறைநீர் ஆகும். இந்த பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க, தண்ணீர் தேவை மேலும் அதிகரிக்கும் என்கிறார் நக்கீரன்.

படத்தின் காப்புரிமை Getty Images

மொத்தம் மூன்று வகையான தண்ணீர் உள்ளது. பச்சை, நீல மற்றும் சாம்பல் நீர்.

பச்சை நீர் என்பது வலிமண்டலத்தில் இருக்கக் கூடியதாகும். நீல நீர் என்பது இங்குள்ள நீர்நிலைகள். தொழிற்சாலை மற்றும் இதர காரணங்களால் கழிவு நீர் பெருக்கம் அதிகமாகி விட்டது. இது சாம்பல் நீராகும். நிலத்தடி நீரோடு இது கலக்கும் பட்சத்தில், நிலத்தடியில் உள்ள நண்ணீருடைய அளவும் குறைந்துவிட்டது.

நீர்பிடிப்பு திறனுள்ள பகுதிகளிலும் மணல் அள்ளப்படுகிறது

படத்தின் காப்புரிமை Getty Images

"நிலவியல் அமைப்பை இன்னும் நாம் யாரும் புரிந்துக் கொள்ளவில்லை. தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பில், 27 சதவீத இடங்கள்தான் நீர்பிடிப்பு திறனுள்ள பகுதிகள். மீதமுள்ளது பாறை நிலங்கள். ஆனால், அந்த 27 சதவீதம் நல்ல நீர்பிடிப்பு திறனுள்ள பகுதிகளிலும் கூட, இன்று மணல் அள்ளப்படுகிறது" என்று நக்கீரன் கூறுகிறார்.

"இன்று எல்லா இடங்களிலும் கட்டடம் கட்ட அரசு அனுமதி அளிக்கிறது. நாளை அந்த கட்டடங்களிலும் வாழும் மனிதர்களுக்கு குடிநீர் தேவையா இல்லையா" என்றைய முக்கிய கேள்வியை எழுப்புகிறார் அவர்.

இது தொடர்ந்தால் எதிர்காலத்தில் மிகப்பெரிய சிக்கல் ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தண்ணீருக்காக வரிசையில் நிற்கும் நாள் வெகு தொலைவில் இல்லை

படத்தின் காப்புரிமை Getty Images

இன்னும் 50 ஆண்டுகளில் சொல்ல முடியாத அளவிற்கு தண்ணீர் தட்டுப்பாடு இருக்கும் என்கிறார் நற்துணை அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் ஜோதி ராஜா. இப்பொழுதே தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது என்று குறிப்பிட்ட அவர், பெட்ரோல் பங்க் போல, மக்கள் தண்ணீருக்காக வரிசையில் நிற்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றார்.

அரசு மட்டுமே இதற்கு நடவடிக்கை எடுக்க முடியாது, மக்களும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் ராஜா தெரிவித்தார். ஒவ்வொரு பகுதியிலும் இளைஞர்களே முன்வந்து, அங்குள்ள நீர்நிலைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்