சென்னை நகைக் கடை அதிபர் 824 கோடி கடன்; சி.பி.ஐ. சோதனை

படத்தின் காப்புரிமை Getty Images

சென்னையிலிருந்து செயல்பட்டுவரும் கனிஷ்க் கோல்ட் பிரைவேட் லமிட்டெட் என்ற தங்க நகைக் கடையின் உரிமையாளர்கள் சுமார் 824 கோடி ரூபாய் அளவுக்கு கடன் வாங்கிவிட்டு அந்தக் கடனைச் செலுத்தாத நிலையில், அவர்கள் மீது மத்திய புலனாய்வுத் துறை வழக்குப் பதிவுசெய்துள்ளது. சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் ஏல நோட்டீஸ் அறிவிப்பை எஸ்பிஐ வங்கி ஒட்டியுள்ளது.

சென்னையிலிருந்து செயல்பட்டுவரும் பிரபல தங்க நகை நிறுவனமான கனிஷ்க், 2017 டிசம்பர் 31வரை பாரத ஸ்டேட் வங்கியிடமிருந்து கடனாக 240.46 கோடி ரூபாயைப் பெற்றுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி, 128 கோடி ரூபாயையும் சிண்டிகேட் வங்கி 55 கோடிகளும் இந்திய யூனியன் வங்கி 54 கோடி ரூபாயும் ஐடிபிஐ வங்கி 49 கோடி ரூபாயும் கடனாக அளித்துள்ளன.

இந்த நிறுவனம் முன்னதாக ஒரு தனியார் வங்கியிடமிருந்து பெற்றிருந்த கடன்கள், 2008 வாக்கில் பாரத ஸ்டேட் வங்கியால் எடுத்துக்கொள்ளப்பட்டன. 2011 மார்ச்சில் இந்தக் கடன்கள் பல்வேறு வங்கிகளால் பகிர்ந்துகொள்ளப்பட்டன.

இதற்குப் பிறகு தங்களது விற்பனையைக் காட்டி, தொடர்ச்சியாக இந்த நிறுவனம் வங்கிகளில் கடன்பெற்றுவந்துள்ளது. 2008ல் தங்களுக்கு 24 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக தெரிவித்த இந்த நிறுவனம் 2016ல் அந்தச் சொத்தின் மதிப்பு 980.08 கோடியாக உயர்ந்திருப்பதாகக் கூறியது.

ஆனால், 2017 மார்ச் மாதம் முதல் இந்த நிறுவனம் தான் பெற்ற கடன்களுக்கான வட்டியை செலுத்தத் தவறியதிலிருந்து பிரச்சனை துவங்கியது. இதையடுத்து பாரத ஸ்டேட் வங்கி தலைமையில் கனிஷ்க் நிறுவனத்திற்குக் கடன் அளித்த 14 வங்கிகள் ஒன்றாக இணைந்து மத்தியப் புலனாய்வுத் துறையில் புகார் அளித்தன.

பிற செய்திகள்:

பாரத ஸ்டேட் வங்கியின் சென்னை மண்டல பொது மேலாளர் சி.பி.ஐயின் இணை இயக்குனருக்குப் புகார் ஒன்றை அனுப்பினார். அந்தப் புகாரில், "ஒவ்வொரு ஆண்டும் இந்த நிறுவனத்தின் வரவு செலவுக் கணக்குகள் ஆராயப்பட்டபோது, லாபம் அதிகரித்தே காணப்பட்டது. இதன் அடிப்படையிலேயே புதிய கடன்கள் அளிக்கப்பட்டன. இதற்காக அந்த நிறுவன உரிமையாளர்களிடமிருந்து பல்வேறு சொத்துகளின் உறுதிப் பத்திரங்கள் பெறப்பட்டன" என்று கூறப்பட்டுள்ளது.

கனிஷ்க் நிறுவனம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் புக்கத்துரை, நடராஜபுரம் கிராமங்களில் தங்க நகை தயாரிக்கும் உற்பத்திக்கூடங்களை அமைத்துள்ளது. இங்கு தயாரிக்கப்படும் நகைகள் பல்வேறு பெரிய நகைக்கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டதாக கனிஷ்க் நிறுவனம் கூறியது.

படத்தின் காப்புரிமை Getty Images

ஆனால், கனிஷ்க் நிறுவனம் வட்டியை வழங்குவதில் பிரச்சனை ஏற்பட்டதும் கனிஷ்க் நிறுவனத்தின் அலுவலகம், நகை தயாரிப்புக் கூடங்கள் ஆகியவற்றை ஆய்வுசெய்தபோது அவை சரியான அளவில் இயங்கவில்லை என்பது தெரியவந்ததாக வங்கிகள் தெரிவித்த புகாரில் கூறப்பட்டுள்ளது. மேலும் 2009ஆம் ஆண்டிலிருந்தே பொய்யான கணக்குகளைக் காட்டி அந்த நிறுவனம் கடன்களைப் பெற்றதும் கண்டறியப்பட்டதாக அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது.

இந்தப் புகாரை அடுத்து, சிபிஐ பதிவுசெய்திருக்கும் வழக்கில், கனிஷ்க்கின் இயக்குனர் பூபேஷ் குமார் ஜா, அவரது மனைவியும் மற்றொரு இயக்குனருமான நீட்டா ஜெயின், ஏகே லுனாவத் அசோஸியேட்ஸ் நிறுவனத்தின் பங்காளிகளான தேஜ்ராஜ் ஆச்சா, சுமித் கேடியா ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

புதன்கிழமையன்று சென்னை தி. நகரில் உள்ள கனிஷ்க் நிறுவன கடை, அதன் உரிமையாளர் பூபேஷின் வீடு, மதுராந்தகத்தில் உள்ள நகை தயாரிப்புக்கூடங்கள் ஆகியவற்றில் மத்திய புலனாய்வுத் துறை சோதனை நடத்தியது.

வியாழக்கிழமையன்று காலையில், பூபேஷின் வீட்டிற்குச் சென்ற எஸ்பிஐ வங்கி அதிகாரிகள் கொடுத்த கடனுக்காக ஏன் வீட்டை ஏலம் விடக்கூடாது என்று கேட்டு நோட்டீஸ் அளித்துள்ளனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்